யாரவது லஞ்சம் கேட்டால் இது உங்கள் முதல்வர் விஜய் ஆட்சி என்று சொல்லி லஞ்சம் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள் சமீபத்தில் கரூரில் விஜய் பேசிய நிலையில், வாரிசு சான்றிதழ் வழங்க 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ள மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பாம்பாட்டிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் ஈஸ்வரி. இவரது அப்பா, கருப்பசாமி சமீபத்தில் இறந்துவிட்டார். அப்பாவின் மறைவுக்குப் பிறகு, குடும்பத்திற்குத் தேவையான வாரிசு சான்றிதழை பெறுவதற்காக ஈஸ்வரி அரசு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பம் குறித்து மேல் நடவடிக்கை எடுப்பதற்காக, வி.பெரியப்பட்டி பிர்கா முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணிபுரியும் ஹேமலதாவை ஈஸ்வரி நேரில் சென்று சந்தித்துள்ளார்.
அப்போது ஹேமலதா, வாரிசு சான்றிதழ் கோரும் மனுவை உடனே பரிசீலித்து சான்றிதழ் வழங்க வேண்டுமானால், ரூ.5,000 லஞ்சமாக தர வேண்டும் என்று ஈஸ்வரியிடம் கேட்டுள்ளார். அப்பா இல்லாமல் தன்னுடைய குடும்பம் தவிப்பதால், 5 ஆயிரம் ரூபாய் தன்னிடம் இல்லை என்றாராம் ஈஸ்வரி. அதற்கு ஹேமலதா, அப்படியானால் 1000 ரூபாய் குறைத்து, ரூ.4,000 தந்தால் போதும் என்றாராம்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ஈஸ்வரி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதாவிற்கு பாடம் புகட்ட நினைத்து திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய 4 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அந்த லஞ்ச பணத்தை ஈஸ்வரி முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதாவிடம் வழங்கினார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதாவை கையும் களவுமாக பிடித்து ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதிரடியாகக் கைது செய்தனர். இதையடுத்து, வி.பெரியப்பட்டி வருவாய்த்துறை அலுவலகத்தில் ஹேமலதாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் துறையினர் சோதனை மேற்கொண்டனர். வாரிசு சான்றிதழுக்காகப் பெண் அதிகாரி லஞ்சம் வாங்கி கைதான இந்தச் சம்பவம், மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.