நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒடிசா – பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க-வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்”என மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பீகார் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், கர்நாடகா, தெலங்கானா காங்கிரஸ் தலைவர்கள் பீகார் மக்களை அவதூறு செய்கின்றனர். தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஒடிசா தேர்தலின் போது பூரி ஜெகன்நாதர் கோயிலின் கருவறை சாவி தமிழ்நாட்டில் உள்ளது என்று பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.