கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மாற்றுத்திறனாளி மகனை சுமந்து வந்து இலவச வீட்டுமனை கேட்டவருக்கு உடனடியாக இலவச வீடு ஒதுக்க அதிகாரிகளுக்கு பவன்குமார் க. கிரியப்பனவர் உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் திய குடும்ப அட்டை, மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவி தொகை, பட்டா பிரச்சனை உள்ளிட்ட மக்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் போது மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்பார்கள். இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கலாம். அவர் எந்த துறை சம்பந்தப்பட்டதோ அந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக விசாரிக்குமாறு உத்தரவிடுவார்.
மேலும், தமிழக அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிக்கும் ஏழைகள் இலவச மனைப்பட்டா பெற முடியும் . அதேநேரம் அரசு துறைகளுக்கு ஆட்சேபனை (நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள், கோயில் நிலங்கள்) இல்லாத, நீர் நிலைகள் அல்லாத நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு (குடியிருக்கும் இடத்திற்கான எல்லா ஆவணங்களும் கண்டிப்பாக இருக்க வேண்டும்), 3 சென்ட் வரை இலவச மனைப்பட்டா வழங்கப்படுகிறது. அவ்வப்போது இலவச வீட்டு மனை பட்டாவை அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி ஆச்சிபட்டியை சேர்ந்த சபீனா என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகனை சுமந்து வந்து ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில், எனக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஒரு மகன் மாற்றுத்திறனாளி. மற்ற 2 பேருக்கும் உடலில் பாதிப்புகள் உள்ளன. கணவர் விபத்தில் சிக்கி உடல் பாதிப்புடன் கூலி வேலை செய்யும் நிலை இருக்கிறது. இவர்களை கவனித்துக்கொண்டு என்னாலும் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் போதிய வருமானம் இன்றி தவித்து வருகிறோம். எங்களது நிலையை கருத்தில் கொண்டு இலவச வீட்டுமனை ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அவரது மனுவை பரிசீலித்த பவன்குமார் க. கிரியப்பனவர், உடனடியாக இலவச வீடு ஒதுக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.