தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அறிமுகமான ஜூலி, அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானார். சமூக பிரச்சனைகள், அரசியல் கருத்துகள், யூடியூப் விமர்சனங்கள், அவதூறு புகார்கள் என அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் ஜூலி, தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோவால் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தனது சமூக வலைதள பக்கத்தில் ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று காலையில் எழுந்ததும் எனக்கு ஒரு சுவாரசியமான தகவல் வந்தது. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து என்னை விசாரணைக்கு வரச் சொல்லி அழைப்பு வந்துள்ளது. நீங்கள் நினைப்பது போல கிட்னி திருட்டு ரூமர் விஷயம் இல்லை. நான் கொடுத்த புகார்களை விசாரிக்காமல் வைத்துவிட்டு, இப்போது என் மீதே வழக்கு போட்டு விசாரணைக்கு அழைக்கிறார்கள்.
தொடர்ந்து ஜூலி பேசுகையில், “முன்பு என்னை பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இரண்டு முறை புகார் கொடுத்தேன். முதல் முறையாக டிஃபமேஷன் புகார் கொடுத்தபோது, இது சிவில் வழக்கு, கோர்ட்டில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி மீண்டும் புகார் கொடுத்தேன்.
ஆனால் அதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நான் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தவர்கள், தற்போது என்னை விசாரணைக்கு அழைத்துள்ளனர். பெண்களுக்கு எதிரான ஆன்லைன் தொல்லைகள் குறித்து தேர்தலுக்கு முன்பு நான் கடற்கரையில் போஸ்டர் ஏந்தி போராட்டம் நடத்தியதற்காகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
திருச்சி சூர்யா விவகாரத்தையும் குறிப்பிட்ட ஜூலி சமீபத்தில் அலிஷா என்பவர், திருச்சி சூர்யா மற்றும் முக்தார் மீது புகார் அளித்தபோது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஆனால் தன்னுடைய புகார்கள் மீது எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் ஜூலி குற்றம்சாட்டியுள்ளார். “பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நான் புகார் கொடுத்த பிறகு, என்மீதே வழக்கு வருகிறது. இது எந்த மாதிரியான நீதி?”
“வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த இரண்டு நாட்கள் நீதிமன்ற விடுமுறை. அதனால் என்னை கைது செய்தாலும் உடனடியாக ஜாமீன் எடுக்க முடியாத சூழல் இருக்கும். அதற்காகவே திட்டமிட்டு இந்த நாளை தேர்வு செய்திருக்கிறார்கள் என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது” என ஜூலி கூறிய இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.