திமுகவிற்கு எதிராக இணையும் ஓரணி நாங்கள் அல்ல, திமுகவை எதிர்க்கும் ஒரே அணி நாம் தமிழர் கட்சி தான் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை வீழ்த்த ஒத்த கருத்து உடைய அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் என்று கூறி வருகிறார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பாக பிரம்மாண்ட கட்சி ஒன்று கூட்டணி வருகிறது என்று கூறி இருந்தார். தமிழ்நாட்டில் அதிக வாக்கு சதவிகிதம் கொண்ட கட்சிகளில் 3-வது இடத்தில் இருப்பது நாம் தமிழர் கட்சி தான். அதேபோல் தவெக 2026 சட்டமன்றத் தேர்தலில் எளிதாக மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெறும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, திமுகவிற்கு எதிராக இணையும் ஓரணி நாங்கள் அல்ல, திமுகவை எதிர்க்கும் ஒரே அணி நாம் தமிழர் கட்சி தான். நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நாங்கள் நீராக இருப்போம்.
தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு எதற்காக தேவை என்பதை யாராவது சொல்வார்களா? தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேசிய கட்சிகள் உறுதுணையாக நிற்குமா? எந்த விவகாரத்தில் பாஜகவை திமுக எதிர்க்கிறது. இந்திய நிலப்பரப்பில் 81% நிலக்கரி தமிழ்நாட்டில் தான் உள்ளது. இங்கு நிலத்தின் அடியில் உள்ள வளத்தை எடுக்க அனுமதிக்கக்கூடாது. போர் நடந்த இடத்தில் கூட மீள்குடியேற்றம் செய்துவிட முடியும். ஆனால் நிலத்தின் வளத்தை எடுத்து விட்டால் அது சுடுகாடாகி விடும் என சீமான் தெரிவித்தார்.