பொள்ளாச்சியில் பல்லடம் சாலை மற்றும் உடுமலை சாலை அமைப்பதற்காக ரூ.32 கோடி மதிப்புள்ள 80 சென்ட் இடத்தை நகராட்சிக்கு தானமாக கொடுத்த சாந்தா ஜெயராமன். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பல்லடம் சாலை மற்றும் உடுமலை சாலையை இணைக்கும் வகையில் திட்ட சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக நகராட்சி சார்பில் கடந்த 2009-ல் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றபோது சாந்தா ஜெயராமன் என்பவரது குடும்பத்துக்கு சொந்தமாக 80 சென்ட் இடம் இணைப்பு சாலை அமையும் வழியில் உள்ளது. இந்த நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாந்தா ஜெயராமன் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பாக 66 அடி அகலத்தில் சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் இணைப்பு சாலை முழுமை பெறாமல் 16 ஆண்டுகளுக்கு மேலாக இழுபறியில் இருந்து வந்தது. இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி ஆணையராக கணேசன் பொறுப்பேற்றதும், பொள்ளாச்சி நகர மக்களின் நலன் கருதி சாந்தா ஜெயராமன் குடும்பத்தினருடன் பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஏற்கெனவே இந்த நிலத்துக்கு நகராட்சி சார்பில் சுமார் ரூ.49 லட்சம் வரி விதிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த தொகையையும் சாந்தா ஜெயராமன் நகராட்சிக்கு செலுத்தி இருந்த போதும் ரூ.32 கோடி மதிப்புள்ள 80 சென்ட் நிலத்தை சாந்தா ஜெயராமன் குடும்பத்தினர் பொள்ளாச்சி நகராட்சிக்கு தானமாக கொடுக்க முன்வந்தனர்.
நிலத்தை தானமாக வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாந்தா ஜெயராமன் பங்கேற்று, நிலத்தை தானமாக வழங்குவதற்கான ஆவணங்களை நகராட்சி ஆணையர் கணேசனிடம் ஒப்படைத்தார். அப்போது, நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் கவுதமன், பொள்ளாச்சி நகர வடக்கு திமுக பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.