கேரவனனில் அமர்ந்து கொண்டு சிக்கன் சாப்பிடுவோருக்கு குழந்தைகளின் பசியையாற்றும் காலை, மதிய உணவுத் திட்டங்கள் குறித்து எதுவும் தெரியாது என நடிகர் எஸ்.வி. சேகர் விமர்சனம் செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நாடக நடிகர், தமிழ்நாட்டின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர், அரிமா சங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த எஸ்.வி. வெங்கடராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு “எஸ்.வி. வெங்கடராமன் தெரு” என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட சாலைகளின் பெயர் பலகைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த விழாவில் எஸ்.வி. சேகர் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, முதலில் விஜய் காருக்கான வரியை கட்டட்டும். பின் குடும்ப ஊழல் குறித்து பேசட்டும். சினிமாவில் இருப்பவர்களெல்லாம் ஊழல் பற்றி பேசக் கூடாது என தெரிவித்தார். மேலும் கேரவனனில் அமர்ந்து கொண்டு சிக்கன் சாப்பிடுவோருக்கு குழந்தைகளின் பசியையாற்றும் காலை, மதிய உணவுத் திட்டங்கள் குறித்து எதுவும் தெரியாது என்றார். ஜிஎஸ்டி குறைத்ததால் மக்களுக்கு நன்மை என்கிறார்கள். முதலில் அந்த ஜிஎஸ்டியை போட்டது யார்?
அப்போதே போடாமல் இருந்திருந்தால் பல லட்சங்கள் சேமித்திருப்பார்கள் மக்கள். இனி ஜிஎஸ்டி குறைத்தாலும் விலைகளெல்லாம் குறையாது.குறிப்பிட்ட சமூகத்தினருக்கு திமுக எதிரானது என பேசப்படுவது அரசியலுக்காக சொல்லப்படுவது, எல்லோருக்குமான முதல்வராகவே நம் முதல்வர் இருக்கிறார். விஜய்க்கு அரசியல் தெரியவில்லை, திருச்சியில் வந்த கூட்டம் நாகையில் அவருக்கு வரவில்லை, சினிமாவில் கைத்தட்ட உதவும் வசனம்போல் மக்கள் மத்தியில் பேசுகிறார்.
2026 ஆம் ஆண்டு தேர்தல் விஜய்க்கு, அரசியல் என்றால் என்ன, தேர்தல் என்றால் என்ன என்பதை புரிய வைக்கும். எம்ஜிஆர் கோடம்பாக்கத்தில் இருந்து நேரடியாக கோட்டை வரவில்லை. 20 ஆண்டுகள் திமுகவிலிருந்து திமுக வளர்ச்சிக்கு பாடுபட்டு திமுக ஆதரவளித்து அதற்கு பிறகு திமுகவில் சிறிய பிரச்சனையிலிருந்து வெளியே வந்து கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் ஆனார். சினிமாவில் பாட்டு பாடிவிட்டு கட்சி ஆரம்பித்து முதலமைச்சராகவில்லை. சென்னை தீவுத்திடலில் கண்காட்சிக்கு வரக்கூடிய கூட்டத்தை விடவா விஜய்க்கு கூட்டம் வருகிறது. அவருக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது எனவும் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலினை, விஜய் “அங்கிள்” என்கிறார். இது எல்லாம் சினிமாவில் கைத்தட்ட உதவும்.
விஜய்க்கு முதலில் மக்கள் தொடர்பு இருக்க வேண்டும், தொலைபேசி எண்ணை கொடுத்து மக்களுக்கு என்ன பிரச்சனை என கேட்க வேண்டும். எழுதிக் கொடுப்பவர் தவறாக எழுதி கொடுக்கிறார். விஜய் இன்னும் பக்குவப்பட வேண்டும் எனவும் விஜய்க்கு அரசியலில் வாய்ப்பு இருக்கிறது ஆனால் இன்னும் 15, 20 ஆண்டுகள் உழைக்க வேண்டும். சனிக்கிழமை மட்டும் வந்து பேசுவது சரியாக இருக்காது. அரசியலில் 24 மணி நேரமும் செய்யக்கூடிய ஒரு சேவை அதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.