சென்னை ராயபுரம் மண்டலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜே. குமரகுருபரனுக்கு உயர்நீதிமன்றம் 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து வீடு கட்டுவது, வரைபடத்தில் ஒரு மாதிரியும், கட்டுவது ஒரு மாதிரியும் உள்ளது. இரண்டுமாடி கட்ட வேண்டிய இடத்தில் ஐந்து மாடி கட்டுவது, பார்க்கிங் வசதியுடன் அனுமதி வாங்கிவிட்டு, அது இல்லாமல் கட்டுவது என பல்வேறு விதிமீறல்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் விதிமீறல் கட்டிடங்கள் அதிக அளவில் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 5-வது மண்டலமான ராயபுரம் பகுதியில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வக்கீலான ருக்மாங்கதன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டு இருந்தது.

இதேபோன்று பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு எதிராக வழக்கறிஞர் ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? என சென்னை மாநகராட்சி தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்கள். இதன்பின்பு, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த தொகையை கமிஷனரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து, அதை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 24-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.