திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆலத்தம்பாடி ஜானகி அண்ணி அரசு மேல்நிலைப்பள்ளியில் சில தினங்களுக்கு முன்பு பழைய நோட்டு, புத்தகங்களை அப்புறப்படுத்தி ஏலம் விட வேண்டுமென பள்ளி மேலாண்மை குழுவினர் முடிவு செய்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏலம் விடப்பட்டுள்ளது. அதனை வாகனத்தில் ஏற்றும் போது அதே பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர் பிச்சன் மகன் முத்து என்பவர் தடுத்து நிறுத்தி பிரச்சனையில் ஈடுப்பட்டுள்ளார்.
மேலும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் தவறான தகவல்களை ஊடகங்களுக்கு கொடுத்துள்ளார் என்று தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பில் நூறு சதவீதம் தேர்ச்சி விகிதத்தை ஆசிரியர்கள் கொண்டு வந்துள்ளனர் எனவும் பள்ளியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என கூறி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு திரண்டு சென்று மாணவர்களோடு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதனை அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் சென்ற காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பள்ளியில் பிரச்சனை செய்து ஆசிரியர்களை திட்டிய முத்து என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவரை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பதவியை விட்டு நீக்கினர். மேலும் இது ஆலிவலம் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.