தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில் வி.கே. சசிகலாவின் அஇபுதமமுக கூட்டணியில் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி நிறுவனர் இசக்கிராஜா போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வெம்பக்கோட்டை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்து கொண்டு இருந்தனர். இதனிடையே அந்த வழியாக இசக்கிராஜா உடன் வந்த நிர்வாகிகளின் கார் மீது மகாராஜன் தரப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் விலக்கிவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா சம்பவ இடத்திற்கு சென்று, இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதனால் அப்பகுதியில் அதிகளவு காவலர்கள் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று 2 நாட்களுக்கு முன்பும் இரண்டு கட்சியினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து 50-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.