திருச்சி கே.கே. நகர் ரங்கா நகரை சேர்ந்த கற்பகநாதன். இவரது மனைவி லட்சுமி. இவர் நேற்றைய முன்தினம் திருச்சி மாநகர காவல் ஆணையர் என். காமினியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில், நான் ஒரு நிறுவனத்தில் மேலாண்மை நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறேன். எங்களது நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக, ஏற்கனவே இருந்த கட்டிடத்தை 2-வது தளத்தில் வாடகைக்கு எடுத்தேன். அதை புதிதாக வடிவமைக்க திட்டமிட்டேன்.
இதற்காக லால்குடி ஆங்கரை பாலாஜி நகரில் CM பில்டர்ஸ் என்கிற பெயரில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் பொறியாளர் விக்னேஷ் மற்றும் அவர் மனைவி சிவரஞ்சனி ஆகியோரிடம் ஒப்பந்தம் செய்தேன். அதன் அடிப்படையில் வங்கியில் கடன் பெற்று சுமார் 80 லட்சம் வரை வெவ்வேறு தவணையாக விக்னேஷிடம் லட்சுமி வழங்கியுள்ளார்.
ஆனால் ஆரம்பத்தில் சில பணிகளை மட்டும் செய்துவிட்டு பெரும்பாலான பணிகளை செய்யாமல் அப்படியே விட்டுவிட்டார். இது குறித்து விக்னேசை அணுகி லட்சுமி கேட்டபோது அவர் உரிய பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளார். பணத்தை திரும்ப தராமலும் மோசடி செய்து விட்டனர். அந்த விக்னேஷ் தற்போது முசிறி தொகுதி தவெக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் நான் செலுத்திய பணம் கிடைக்குமா என்று எனக்கு அச்சம் எழுந்துள்ளது. எனவே இது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுத்து, என் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் என். காமினி உத்தரவின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.