தவெகதான் பாஜக. பாஜகதான் தவெக. விஜய் பாஜகவின் B – டீம் எல்லாம் இல்லை, A – டீமே அண்ணன் தான் என ஜல்லிக்கட்டு ஜூலி புதிய வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் 2017-ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது, போராட்டக் களத்தில் தொடர்ந்து முன்னின்று முழக்கமிட்டதன் மூலம் பிரபலமாகி பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஜூலி. சமூக வலைத்தளங்களில் தன் கருத்துகளை தைரியமாக சொல்லும் நபராக மாறிய ஜூலி, மீண்டும் ஒரு வீடியோவால் பேசுபொருளாகி இருக்கிறார்.
வேலூர் மாவட்டம் கொல்லமங்கலம் பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கடந்த மாதம் 23-ந் தேதி நடைபெற்றது. இதில், விஜய் பங்கேற்று பேசிய போது, “ஒரு பெரிய ஊரில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நான்கு சாலை சந்திக்கும், நடுபகுதியில் ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை, தன் காலில் மண்ணை வீசி தள்ளி, சீறிக்கொண்டு நிற்கிறது. அதன் அருகே யாராலும் செல்ல முடியவில்லை. அந்தக் காளையை அடக்கி அமைதிபடுத்தினால்தான் அந்த இடம் இயல்பு நிலைக்கு திரும்பும்.
அந்த ஊரில் இருக்கும் சிலருக்கு மட்டும்தான் அந்த காளை அடங்கும். ஆனால் அவர்கள் யாரும் அங்கு இல்லை. ஆனால், அந்தக் காளையை அடக்கியவர்களுடன் இருந்த சிலர் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். அவர்கள், நாங்கள் பார்க்காத காளையா என எண்ணி அதனை அடக்க முயன்றனர். ஆனால், ஒருவராலும் அந்தக் காளையை அடக்கமுடியாமல் போனது. அப்போது ஒரு சின்ன பையன், அந்தக் கூட்டத்தை விளக்கிவிட்டு நுழைகிறான்.
அப்போது அடிவாங்கியவர்கள், அனுபவம் நிறைந்த எங்களாலேயே முடியவில்லை என ஏளனம் செய்கிறார்கள். மறுபக்கம் சின்ன பையனை பார்த்து பரிதாபம் படும் கும்பல். அந்த பையன் தைரியமாக உள்ளே செல்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே செல்கிறான். சீறி முட்டவந்த காளை அருகே வந்ததும், தன் பாக்கெட்டில் இருந்த இரண்டு புல்லுக்கட்டை நீட்டுகிறான். அதனை பார்த்ததும், காளை அடங்கி அதனை சாப்பிட தொடங்கி அவனுடன் குழந்தைபோல் வந்துவிடுகிறது
வாய் இருக்கு என நசநசவென பேசியவர்கள் எல்லாம் தலைகுனிந்து நின்றார்கள். அங்குவந்த பெரியவர், அந்த சிறுவனிடம் கேட்டபோது, காளை பசியோடு இருப்பதை பார்த்தேன். அதனால், அதனைக் கொடுத்து அதனை அடக்கினேன் என்றான். இதை கேட்டு பெரியவர் சொன்னார், அனுபவம், பெரியவர், சிறியவர் என்பதெல்லாம் இல்லை. பிரச்சனை என்ன என்பதை அறிந்து அதனை சரிசெய்பவனே முக்கியம் என சொல்லி அந்தப் பெரியவர் சென்றுவிட்டார். ஜல்லிக்கட்டு காளைதான் தமிழ்நாடு அரசியல் களம். பெரியவர் தான் நம் மக்கள், பாக்கெட்டுக்குள் கைவைத்துக்கொண்டுவந்த சிறுவன் விஜய் இல்லை. நாம் அனைவரும் சேர்ந்த தவெக” என பேசி இருந்தார்.
அந்த பேச்சை குறித்து ஜல்லிக்கட்டு ஜூலி வெளியிட்ட வீடியோவில், “”நான் ஜூலி. இப்போதுதான் உங்கள் வேலூர் பிரசாரத்தை பார்த்தேன். வழக்கம்போல அதில் ஒன்றும் இல்லை. கூட்டத்தில் ஒரு குட்டிக் கதை கூறியிருந்தீர்கள். அதைக் கேட்டு என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. நீங்கள் போகிற போக்கில் ஜல்லிக்கட்டு காளை நின்றது. அதற்கு புல்லுக்கட்டு காட்டியதும், ஓரம் சென்று நின்றது எனக் கூறிவிட்டுச் சென்றுவிடுவீர்கள். உங்கள் கட்சியில் இருக்கும் பாதி பேர் மைனர். அவர்கள் ஜல்லிக்கட்டு காளையிடம் சென்று புல்லுக்கட்டி காட்டும்போது ஏதாவது ஆகிவிட்டால் என்ன ஆவது. 50 என்பது 50 ஆகவே இருக்கட்டும். 500 ஆக்கிவிடாதீர்கள்.
எல்லோரும் போராடி ஜல்லிக்கட்டு அனுமதி வாங்கி வைத்திருக்கிறோம். உங்கள் ரசிகர்கள் ஜல்லிக்கட்டு காளையிடம் சென்று புல்லுக்கட்டு காட்டும்போது ஏதாவது ஆகிவிட்டால், திரும்பவும் போராட யாருக்கும் திராணியில்லை” எனக் கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ வைரலானதும், விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் பலரும் சமூக வலைத்தளங்களில் ஜூலியை கடுமையாக விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு தவெகவினர் அளவுக்கு மீறி அசிங்கமாக பேசினார்கள்.
ஒருகட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில், “கிட்னி விற்பனை மோசடியில் தன்னை தொடர்புபடுத்தி ஆதாரமற்ற பொய்யான வீடியோக்களை வெளியிட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என வேண்டுகோள் வைத்திருக்கிறார். தவெக நிர்வாகி உட்பட மொத்தம் எட்டு பேர் மீது இந்தப் புகாரை அவர் கொடுத்திருக்கிறார்.
ஜூலி புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், “வணக்கம் மக்களே. எம்ப்ட்டி சிலிண்டர் எல்லாம் வாங்கி வைத்துவிட்டீர்களா?.. மோடி இதிலும் நமது வயிற்றில் அடித்துவிடப்போகிறார். நம்ம விஜய் அண்ணா வழக்கம்போல் இதற்கும் எதுவும் பேசமாட்டார். அப்படி ஏதாவது பேசினால் மோடி ஜி சிபிஐயை வைத்து விஜய் அண்ணாவின் குடுமியை ஆட்டிவிடுவார். பாஜகவுடன் தவெக சேருமா என பேச்சுக்கள் இருக்கின்றன. நானே சொல்கிறேன். கண்டிப்பாக அவர் சேரமாட்டார்.
ஏனெனில் பாஜகவை எதிர்க்கும் மாநிலம் தமிழ்நாடு. பாஜகவுக்கு எதிரானவர்கள் நாங்கள் என்பதை அவர்கள் செட் செய்வார்கள். கொள்கை எதிரியோடு சேரவில்லை பார்த்தீர்களா என்றுதான் அவர்களால் வாக்கு கேட்க முடியும். அதற்காக செய்யக்கூடிய ஜோக்தான் இது. இதை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள். நம் பேஸ்கட் பால் அண்ணா சரக்கு பாட்டிலை எடுத்துட்டு போய் மாட்டிக்கொண்டதாக சொல்கிறார்கள். எதற்கு அண்ணா இது?.. கட்சிக்கு அசிங்கம் இல்லையா?.. சட்டம் தன் கடமையை செய்யும். தீ பரவட்டும்.. வழக்கம்போல் வல்கர் வாரியர்ஸ் வந்து உங்கள் வன்மத்தை கக்கிவிட்டு செல்லுங்கள். தவெகதான் பாஜக. பாஜகதான் தவெக. விஜய் பாஜகவின் பி டீம் எல்லாம் இல்லை, ஏ டீம்தான்” என்றார்.