சேகுவேரா ஒருபோதும் வெற்றியை தனது இலக்காக முன் வைக்கவில்லை; நீதியை தனது இலக்காக முன் வைத்தான் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்தார். லத்தீன் அமெரிக்கப் புரட்சியாளரான சேகுவேராவின் தீவிர கொள்கை ஈடுபாட்டாளர் சு. வெங்கடேசன் ஆவார். சேகுவேராவை “இருளை விலக்கும் ஆயுதம்” என்றும், சமத்துவத்தின் குறியீடாகவும் போற்றும் அவர், சேகுவேராவின் சிந்தனைகளைத் தொடர்ந்து மேடைகளிலும் எழுத்துகளிலும் முன்னெடுத்து வருகிறார்.
மேலும் சேகுவேராவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சமத்துவக் கொள்கைகள் மற்றும் புரட்சிகரப் பாதையைத் தமிழ் இலக்கிய மற்றும் அரசியல் தளத்தில் சு.வெங்கடேசன் தீவிரமாகப் பரப்புரை செய்கிறார். சேகுவேராவின் பிறந்தநாளை (ஜூன் 14) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகக் கியூபா ஆதரவு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நாளாகக் கடைப்பிடித்து, மதுரையில் பல்வேறு கருத்தரங்குகளை சு.வெங்கடேசன் முன்னெடுத்து நடத்துகிறார்.
“இருளை விலக்கும் ஆயுதம் சேகுவேரா” போன்ற தலைப்புகளில் சேகுவேராவின் தியாக வரலாற்றை மக்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, சேகுவேரா ஒருபோதும் வெற்றியை தனது இலக்காக முன் வைக்கவில்லை; நீதியை தனது இலக்காக முன் வைத்தான். வெற்றியை முன் வைத்திருந்தால் கியூபாவோடு அவனது பயணம் முடிந்திருக்கும். நீதியை முன்வைத்ததால் தான் எல்லைகளுக்கு அப்பால் நீண்டது அவன் பயணம் . எனவே கடைசி மனிதனுக்கும் நீதி கிடைக்கும் வரை போராட்டங்கள் ஓயப்போவதில்லை என சு.வெங்கடேசன் தெரிவித்தார் .