பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் நடைபெற்ற காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தினர்.
இந்திய கல்வி துறையில் சுமார் 23 லட்சம் மாணவர்களைப் பாதித்துள்ள நீட்-யுஜி 2026 வினாத்தாள் கசிவு விவகாரம், தொடர்ந்து அரங்கேறி வரும் முறைகேடுகள் ஆகியவை நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை அடியோடு சிதைத்து வருகின்றன. குறிப்பாக, நீட் (NEET) தேர்வு ரத்து விவகாரத்தாலும், தொடர் தேர்வு குளறுபடிகளாலும் அரசுப் பள்ளி மாணவர்கள், நடுத்தர குடும்பங்கள் வரை ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமும் கடும் சோகத்திலும், மன உளைச்சலிலும் தவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில், இந்த விவகாரங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நாடு முழுவதும் இளைஞர்களைத் திரட்டி வரும் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP – Cockroach Janta Party) தனது அடுத்தகட்ட அதிரடிப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெபெற்ற மாபெரும் போராட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜும் கலந்துகொண்டு தன் ஆதரவைத் தெரிவித்தார்.
பெங்களூரில் இன்று மாலை மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் இந்தப் போராட்டத்தில் ஒன்றிணைந்து, “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என முழங்கினர். பிரகாஷ் ராஜ், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய இந்தப் போராட்டத்தில் பங்கேற்று இளைஞர்கள் மத்தியில் பேசினார். தங்கள் எதிர்காலத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் இந்நாட்டு இளைஞர்களின் குரலைக் கேட்குமாறு ஆளும்கட்சியினரை நடிகர் பிரகாஷ் ராஜ் வலியுறுத்தினார்.