ஸ்மார்ட் போர்டு திரைகள் கல்வி குறித்த காணொளிகள் பயன்பாட்டிற்கு மட்டுமே தவிர தவெக தலைவர் விஜய் அவர்களின் புகழை ஒளிபரப்பும் விளம்பரக் கூடங்கள் அல்ல… மூளைச் சலவை செய்யும் நவீன டிஜிட்டல் குற்றங்கள் என பாஜக மகளிரணி தேசியத் தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில், இன்று தவெக சார்பில் நடைபெற்ற கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் விஜய் அவர்களின் பேச்சு அரசுப் பள்ளி ஒன்றில் ஸ்மார்ட் போர்டு மூலம் நேரலை செய்யப்பட்ட காணொளியானது கடும் கண்டனத்திற்குரியது.
தொடர்ந்து அரசுப் பள்ளிகளும், கல்வி உபகரணங்களும் ஆளுங்கட்சியின் புகழ் பரப்பும் விளம்பர மையங்களாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பது மாணவர்களை மூளைச் சலவை செய்யும் நவீன டிஜிட்டல் குற்றங்கள். ஸ்மார்ட் போர்டு திரைகள் கல்வி குறித்த காணொளிகள் பயன்பாட்டிற்கு மட்டுமே தவிர தவெக தலைவர் விஜய் அவர்களின் புகழை ஒளிபரப்பும் விளம்பரக் கூடங்கள் அல்ல.
கல்விக் கூடங்களில் மாணவர்கள் அரசியல் பயில்வதற்கு Mock Parliament போன்ற மாற்றுவழிகள் எவ்வளவோ இருக்கும் பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சித் தலைவரின் காணொளியை மட்டும் நேரலை செய்தது வருங்காலத்தில் மாணவர்களிடம் தவறான முன்னுதாரணத்தை விதைக்கும் அப்பட்டமான செயல்.
எனவே இதனை ஒளிபரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கல்விக் கூடங்களின் கண்ணியம் காக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறையை வலியுறுத்துகிறேன் என வானதி சீனிவாசன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.