அண்ணல் அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் உள்ளிட்டோரை கொள்கைத் தலைவர்கள் என்று கூறும் தவெக-வினர் தூய்மைப் பணியாளர்களை அவமதிக்கும் வகையில் இதுபோன்ற பிற்போக்குத் தனமான தீண்டாமையை அரங்கேற்றியிருப்பது சமூக நீதிக்கு எதிரான செயல் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் தவெக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அவர்கள் அலுவலகத் திறப்பு விழாவின் போது, அங்கு கழற்றிப் போடப்பட்ட காலணிகளைத் தூய்மைப் பணியாளர்கள் வெறும் கைகளால் அள்ளி அகற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில், சென்னை, திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு அங்கு வந்திருந்த தவெக நிர்வாகிகளின் காலணிகளை கைகளால் அப்புறப்படுத்த வைத்ததாக வெளியான காணொளி கடும் கண்டனத்திற்குரியது.
அண்ணல் அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் உள்ளிட்டோரை கொள்கைத் தலைவர்கள் என்று கூறும் தவெக-வினர் தூய்மைப் பணியாளர்களை அவமதிக்கும் வகையில் இதுபோன்ற பிற்போக்குத் தனமான தீண்டாமையை அரங்கேற்றியிருப்பது சமூக நீதிக்கு எதிரான செயல். கொரோனா காலகட்டத்தில் தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் மக்களின் உயிர்காத்த தூய்மைப் பணியாளர்களுக்கு தவெக அரசு தரும் மரியாதை இதுதானா?
இனி இதுபோன்ற செயல்களைத் தடுத்து தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து, அவர்களை கண்ணியமாக நடத்திட வேண்டும் என வேண்டும் முதல்வர் விஜய் அவர்கள் தனது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என வானதி சீனிவாசன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.