ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஓருவர் நபர் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க விரும்பினார். இதனை தொடர்ந்து, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் உதவி பொறியாளர் ஷேக்கா தில்ஷாத் பர்வீன் அவர்களை அணுகி வண்டல் மண் எடுக்க பயணச்சீட்டு கேட்டுள்ளார். அதற்கு அந்த நபரிடம் ஷேக்கா தில்ஷாத் பர்வீன் ரூ.5000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, அந்த நபர் ரூ.2000 வழங்கிய வண்டல் மண் எடுக்க பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு மீதம் பின்னர் கொடுப்பதாக சொல்லிவிட்டு வந்துள்ளார். ஆனால் உதவி பொறியாளர் ஷேக்கா தில்ஷாத் பர்வீன் மீதம் ரூ.3000 வேண்டும் என கேட்டு வந்துள்ளார். ஆனால், இதற்கு மேல் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அந்த நபர், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் உதவி பொறியாளர் ஷேக்கா தில்ஷாத் பர்வீனுக்கு பாடம் புகட்ட நினைத்து ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதன்பேரில், ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய 3 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அந்த லஞ்ச பணத்தை அந்த நபரிடம் கொடுத்து அனுப்பினர்.மேலும் ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ராமநாதபுரம் சேதுபதிநகரில் உள்ள ஷேக்கா தில்ஷாத் பர்வீன் வீட்டில் வைத்து ரூ.3000 லஞ்சம் வாங்கும் கையும் களவுமாக பிடித்து ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதிரடியாகக் கைது செய்தனர். இந்தச் சம்பவம், ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.