மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கும் 22 வயது மெடிக்கல் ஊழியரின் வங்கி கணக்கில் திடீரென்று ரூ.10 ஆயிரம் கோடி பணம் வரவு வைக்கப்பட்டு இருந்த சம்பவம் நடந்துள்ளது. என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியிலுள்ள சலாசர் பேருந்து நிலையத்தின் அருகே நிர்மல் மருந்தகம் உள்ளது. இந்த மருந்தகத்தில் சமீர் கான் என்பவர் மாத சம்பளம் ரூ.10 ஆயிரத்திற்கு பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 28-ந் தேதி தனது அலைபேசிக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பினார். இதற்காக அவர் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கியின் செயலியை திறந்து வங்கிக் கணக்கு இருப்பை சோதித்து பார்த்தார்.
அப்போது வங்கிக் கணக்கு இருப்பை பூஜ்ஜியம் என காண்பித்தது. மேலும் அதில் ரூ.10 ஆயிரம் கோடி லைன் தொகை காண்பித்தது. இதனைக் கண்ட சமீர் கான் அதிர்ச்சியடைந்தார். வங்கி கணக்கில் அவருக்கு சொந்தமான ரூ.55 ஆயிரம் இருந்தது. அதனையும் அவரால் பயன்படுத்த முடியாத அளவுக்கு வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டது.
இதனால் சமீர் கான் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மருந்தகம் உரிமையாளர் தீரஜ் சர்மாவிடம் கூறினார். இருவரும் சிகார் சைபர் கிரைமிற்கு சென்று சம்பவம் பற்றி தெரிவித்தனர். திடீரென்று சமீர் கான் அக்கவுண்ட்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வந்துள்ளதும், தற்போது வங்கி கணக்கில் உள்ளமொத்த பணமும் முடக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். சிகார் சைபர் கிரைம் காவல்துறையினர் அவர்களை வங்கிக்கு செல்லும்படி கூறினர். இருவரும் வங்கிக்கு சென்று பார்த்தனர்.
அப்போது வங்கி ஊழியர்கள் பிரச்சனையை சரி செய்தனர்.’தொழில்நுட்ப கோளாறு காரணமாக வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் கோடி காட்டியதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டது” என்று கூறி அந்த பிரச்சனையை சரி செய்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.