NEET முறைகேடு விவகாரத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் போராட்டத்தின் போது, மாணவர்கள் மீது AK-47 துப்பாக்கியால் சுட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
NEET தேர்வில் நடந்த முறைகேடுகளை கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல், கரப்பான் பூச்சி கட்சி சார்பில், தர்மேந்திர பிரதானுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த போராட்டம், சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது. அதன்படி கடந்த ஜூலை 25-ந் தேதி பல்வேறு மாணவர் அமைப்புகள் பீகார் முழுவதும் பீகார் பந்த் போராட்டத்தில் ஈடுபட்டன. மாநிலத்தின் பல மாவட்டங்களில் சாலை மறியல், பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. சில இடங்களில் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் மோதலும் ஏற்பட்டது.

அப்போது சிவான் மாவட்டத்தில் காவல்துறையினர் சீருடையில் இருந்த ஒருவர் போராடும் மாணவர்களை நோக்கி AK-47 துப்பாக்கியால் சுட்டுள்ளார். குறைந்தது மூன்று முறை அந்த காவலர் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். போராடும் மாணவர்கள் மீது ஏதோ தீவிரவாதிகளை போல AK-47 துப்பாக்கி பயன்படுத்தப்படுவதை ஏற்கவே முடியாது என கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள பீகார் காவல்துறை, அந்த காவலரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் காயமடைந்ததாக தெரிகிறது. அவர்கள் பாட்னாவில் உள்ள ஜெயப்பிரபா மெடாண்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.