பீகாரில் அதிகாரியின் மனிதாபிமானமற்ற செயலால், நோய்வாய்ப்பட்ட அங்கன்வாடி ஊழியர் ஒருவர் தனது கையில் குளுக்கோஸ் ஏற்றப்படும் ‘டிரிப்ஸ்’ குழாயுடன் அலுவலகத்திற்கு நேரில் சென்ற அதிர்ச்சியூடும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
பீகார் மாநிலம் கட்டிகார் பகுதியில் ஒரு அங்கன்வாடி செயல்பட்டு வருகின்றது. அந்த அங்கன்வாடியில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால், அந்தப் பெண், தனது விடுமுறை விண்ணப்பத்திற்கு ஆதாரமாக மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அங்கு பணியாற்றிய அதிகாரி அதை நம்ப மறுத்து அவரை நேரில் வருமாறு கட்டாயப்படுத்தி உள்ளார்.
இதனையடுத்து, வேறு வழியின்றி தனது கணவரின் உதவியுடன், கையில் ஊசி மற்றும் மருந்து குழாய்கள் தொங்கிய நிலையில் தடுமாறியபடி அந்த பெண் ஊழியர் அதிகாரி முன் ஆஜரானார். இந்த அதிகாரியின் இரக்கமற்ற போக்கை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது நாடு முழுவதும் வைரலாகி பெரும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.