சென்னை எண்ணூர் ஜே.ஜே.நகரை சேர்ந்த 18 வயதான பெண் நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த 24-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் திருவொற்றியூர் ஏகவள்ளியம்மன் கோயில் தெரு அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன் என்று சென்ற அந்த பெண், வெகுநேரமாகியும் கழிவறையில் இருந்து வெளியே வரவில்லையென்றதால் செவிலியர்கள் கழிவறையின் கதவை திறந்து பார்த்தபோது அந்த பெண், பிரசவமாகி கீழே சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்தார்.
அவரது பக்கத்தில் பச்சிளம் பெண் குழந்தை தரையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செவிலியர் உடனடியாக தலைமை மருத்துவரிடம் தெரிவித்தார்.இதையடுத்து பெண்ணையும் குழந்தையையும் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் பிறந்த சிசு அசைவற்ற நிலையில் இருந்ததால் பெண் மற்றும் குழந்தை இருவரையும் ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்தபோது இறந்துவிட்டது தெரிந்தது.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து விசாரணை நடத்தியதில், எண்ணூர் தாழங்குப்பம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் இந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டு இதன் மூலம் கருவுற்றதாகவும் இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியாமலேயே மறைத்து வைத்திருந்ததாகவும் யாருக்கும் தெரியாமல் குழந்தையை பெற்று விடவேண்டும் என மருத்துவரை பார்க்க வந்ததாகவும் அந்த சமயத்தில் பிரசவம் ஆகிவிட்டது. மேலும் பிறக்கும்போதே குழந்தை இறந்த நிலையில் இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் குழந்தையின் முகத்தில் காயம் இருந்ததால் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. அத்துடன் சந்தேக மரணம் என்று வழக்குபதிவு செய்து குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே, நேற்று வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தை கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனால் கொலை வழக்காக மாற்றி பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். ‘’திருமணமாகாமல் குழந்தை பிறந்ததால் வெளியே தெரிந்து தனக்கு அவமானம் ஆகிவிடும். காதலன் சந்தோஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தன்னுடைய வாழ்க்கை சீரழிந்துவிடும்’’ என்று எண்ணிய பெண், தனது குழந்தையை கருவிலேயே அழிக்க முயன்று மாத்திரை, மருந்து சாப்பிட்டுள்ளார்.
ஆனால் கரு கலையவில்லை. அதற்கான காலம் கடந்துவிட்டது என்பதால் குழந்தை பிறந்தவுடன் அதை கொலை செய்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளார். இதன்படி, சம்பவத்தன்று மருத்துவமனைக்கு வந்தபோது பிரசவம் ஆகிவிடும் என்று நினைத்தார். ஆனால் அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்று மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் கழிவறைக்கு சென்றபோது அவர் எதிர்பார்க்காத வகையில் தானாக கழிவறையிலேயே பிரசவம் ஆகியது.
அங்கிருந்த செவிலியருக்கு சொல்லாமல் சிறிது நேரம் கழிவறையிலேயே அமர்ந்திருந்த பெண், பின்னர் தொப்புள் கொடியை தானாகவே அறுத்துவிட்டு அங்கிருந்த வெஸ்டன் பீங்கானில் குழந்தையின் தலையை வைத்து அமுக்கியுள்ளார். ஆனால் தலை பெரிதாக இருந்தால் பீங்கானுக்குள் போகவில்லை. இதன்பின்னர் குழந்தையின் முகத்தில் கையை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு தரையில் கிடத்தியுதாக பரபரப்பபான வாக்குமூலம் கொடுத்தார்.
தற்போது மருத்துவமனையில் பெண் சிகிச்சையில் இருப்பதால் சிகிச்சை முடிந்து வந்ததும் கைது செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் கருவுற்றபோது பெண் மைனராக இருந்ததால் அதற்கு காரணமான சந்தோஷ் யார் என்று விசாரித்து அவர் மீது மீது நடவடிக்கை எடுக்கவும் உண்மையில் கர்ப்பத்திற்கு சந்தோஷ்தான் காரணமா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்படுகிறது.