தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள புளியம்பேட்டை ராஜலட்சுமி நகரில் கார்த்திக் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. கார்த்திக், கும்பகோணம் அருகேயுள்ள முத்துப்பிள்ளை மண்டபத்தில் ஆண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலை கார்த்திக்கும், அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர். பின்னர் மதியம் கார்த்திக்கின் மனைவி வீடு திரும்பியுள்ளார்.
அப்போது பின்புறம் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து கார்த்திக் விரைந்து வந்து பார்த்துள்ளார். வீட்டின் படுக்கை அறையில் இருந்த இரும்பு பீரோ மற்றும் இரும்பு மேஜையின் டிராயர் ஆகியவை உடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கிருந்த 30 பவுன் நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.27 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.
இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினார். கொள்ளை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு ஆணும், பெண்ணும் செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் வங்காளதேசத்தை சேர்ந்த ஹானா பேகம் என்பதும், அந்த ஆண், அவரது மருமகனான சென்னை குரோம்பேட்டை சேர்ந்த குணசேகரன் என்பதும் தெரியவந்தது.

வங்கதேசத்தை சேர்ந்த ஹானா பேகம் என்பவருடைய மகளுடன் சென்னையைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இறுதியில் திருமணத்தில் முடிந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு குணசேகரனையும், தனது மகளையும் வங்காளதேசத்திற்கு அழைத்துச்செல்ல ஹானா பேகம் முயன்றுள்ளார். அவ்வாறு அழைத்துச் செல்வதற்கு பணம் தேவைப்பட்டதால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கலாம் என இருவரும் திட்டம் போட்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை பகுதிகளில் இருவரும் சுற்றி வந்து நோட்டமிட்டு உள்ளனர்.
பின்னர் புளியம்பேட்டை பகுதியில் கார்த்திக் வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்டு உள்ளே நுழைந்து பின்புற கதவை உடைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வங்காளதேசத்திற்கு தப்பிச் செல்வதற்கு முன்பாக இருவரிடம் இருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் கைது செய்தனர். இருவரையும் திருவிடைமருதூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குணசேகரனை புதுக்கோட்டை சிறையிலும், ஹானா பேகத்தை சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.