தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதல் மாநாடு, கட்சி கொடி, பாடலை அறிமுகப்படுத்திய விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சியை பிடிப்பதற்காக மெஜாரிட்டி கிடைக்காததால் மற்ற கட்சிகளின் உதவியை நாடும் நிலை தவெகவிற்கு ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பல மாவட்டங்களில் அதிக தொகுதிகளை வென்ற தவெக கட்சியை தொடங்கி முதல் மாநாடு நடத்தி கட்சி கொடியையும், அதற்கான பாடலையும் தவெக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்தான் அறிமுகப்படுத்தியது. தவெகவுக்கு அச்சாரம் போடப்பட்டதாக இந்த விக்கிரவாண்டி மாநாட்டையே அக்கட்சி தலைவர் விஜய் கூறிவந்தார்.
இதனால் நடந்துமுடிந்த தேர்தலில் இந்த தொகுதியில்கூட அவர் போட்டியிடப்போவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றில் கூட தவெக வெற்றி பெறவில்லை. அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது. திமுக சார்பில் விழுப்புரத்தில் லட்சுமணன், வானூரில் கௌதம் திராவிட மணி, விசிக சார்பில் திண்டிவனத்தில் வன்னிஅரசு, பாமக சார்பில் செஞ்சியில் கணேஷ்குமார், விக்கிரவாண்டியில் சிவக்குமார், அதிமுக சார்பில் மயிலத்தில் சி.வி.சண்முகம், திருக்கோவிலூரில் பழனிச்சாமி ஆகியோர் வெற்றி பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.