தமிழக சட்டப்பேரவையில் அப்பாவை காணோம் என குட்டி கதை சொன்ன முதலமைச்சர் விஜய்க்கு, கணவனை காணவில்லை என மனைவி வழக்கு தொடர்ந்திருக்கிறார் எனவும் அப்பாவை காணாமல் மகனும், மகளும் தவித்துப்போய் இருக்கிறார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பதில் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. மூன்றாவது நாளாக இன்று பதிலுரை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து ஒரு குட்டி கதை சொல்கிறேன் எனச் சொல்லி, “ஊரில் ஒரு பெரியவர், வெயில் அதிகமாக இருந்ததால், கண்ணுக்கு மேல் கையை வைத்துக்கொண்டு சுற்றி தேடிக்கொண்டிருந்தாராம்.
அப்போது கூட இருந்த சின்ன பையன், என்ன தேடுறீங்க என கேட்டபோது, அந்தப் பெரியவர், இல்லை தம்பி உங்க அப்பா இங்கத்தான் இருப்பாருனு சொன்னாங்க; அதான் தேடுறேன். எங்க உங்க அப்பாவையே காணோம்” என்றாராம் எனத் தெரிவித்து, எங்களுக்கு நெக்கலும், நயாண்டியாக பேச தெரியும்” என ஜோசப் விஜய் பேசினார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர்; “வழக்கமாக சினிமா மேடைகளிலும், தேர்தல் பிரச்சார மேடைகளிலும் குட்டி கதை சொல்லி வந்தவர், இன்று சட்டப்பேரவையில் அப்பாவை பற்றி ஒரு குட்டி கதை சொல்லி இருக்கிறார். உங்கள் அப்பாவை நீங்கள் எப்படி வைத்திருந்தீர்கள் என அவரே வெளிப்படையாக பேட்டி கொடுத்து இருக்கிறார். அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதுபோல், ‘கணவனை காணவில்லை என மனைவி செங்கல்பட்டு கோர்ட்டில் வழக்கு’ தொடர்ந்து இருக்கிறார். அப்பாவை காணாமல் மகனும், மகளும் தவித்துப்போய் இருக்கிறார்கள்.
வாய் திறங்க முதலமைச்சர் என கேட்டது, பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு நீதி கிடைப்பதற்கும், தவறு செய்த உங்கள் கட்சியினருக்கான தண்டனை என்ன என்பதற்காக. ஆனால், அதனை எல்லாம் பேசுவதற்கு தயாராக இல்லாமல், திமுக மீது கலங்கம் விளைவித்து தப்பித்துவிடலாம் என நினைத்தால் அது நடக்காது. தொடர்ந்து பேசுகையில், நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உரை முடிந்ததும், அவை நிறைவடைந்ததாக சபாநாயகர் அறிவிக்கும் போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எழுந்து பேசுகிறார்.
நேற்று எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது மூன்று அமைச்சர்கள் குறுக்கீடு செய்தார்கள். அதற்கு அனுமதி கொடுத்த சபாநாயகர் இன்று முதலமைச்சர் பேசும்போது எதிர்க்கட்சித் தலைவர் குறுக்கிடுவதற்கு அனுமதி தரவில்லை. இதுவரை தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதலமைச்சர் பேசும்போது, எதிர்க்கட்சித் தலைவர் குறுக்கிட்டால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதில்லை.
நேற்று எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது ஆதாரம் கேட்ட சபாநாயகர், இன்று முதலமைச்சர் பேசிய அவதூறுக்கு ஆதாரம் கேட்கவில்லை. அதனை நாங்கள் கேட்டால் அதற்கு அனுமதிக்காமல், முதலமைச்சர் பேசிய பிறகு கேளுங்கள் என்கிறார். முதலமைச்சர் மனப்பாடம் செய்துவிட்டு வந்ததெல்லாம் பேசி முடித்தப்பிறகு நாங்கள் பேசும்போது, நேரலையை நிறுத்தப்படலாம் அல்லது சபை நிறைவடைந்தது என அதிகாரமிக்க சபாநாயகர் அறிவிக்கலாம்” என சிவசங்கர் தெரிவித்தார்.