மதுரையைச் சேர்ந்த மூதாட்டி சின்னப்பிள்ளை ஓ-ரிங் கருவி கண்டுபிடித்ததாகவும் அதனால் அவரது வீட்டிற்கே சென்ற பிரதமர் வாஜ்பாய் அந்த மூதாட்டியின் காலில் விழுந்ததாகவும் தமிழக சட்டசபையில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பேசியிருப்பது விமர்சனங்களுக்குள்ளாகி உள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த 25-ந் தேதி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் கீர்த்தனா தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
கீர்த்தனா தொழில்துறை குறித்து பேசிக் கொண்டிருந்த போது மதுரை மாவட்டத்தில் சின்னப்பிள்ளை என்ற மூதாட்டி ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஆயில் லீக்காமல் இருக்க ஓரிங் என்பதை கண்டுபிடித்தார். அவர் மகளிர் சுய உதவிக் குழுவில் இருந்தார். இதனால் அவரது வீட்டுக்கே சென்ற அப்போதைய பிரதமர் வாஜ்பாய், மூதாட்டியின் காலில் விழுந்து கும்பிட்டார் என கீர்த்தனா பேசியிருப்பது மதுரை மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் கீர்த்தனா குறிப்பிடுவது போல் மதுரை சின்னப்பிள்ளை எதையும் கண்டுபிடிக்கவில்லை. அவர் ஒரு சமூகஆர்வலர்!. மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகே கள்ளந்திரி கிராமத்தில் பிறந்தவர்தான் சின்னப்பிள்ளை. இவர் பில்லுச்சரி கிராமத்தில் வசித்து வந்தார். களஞ்சியம் தொண்டு நிறுவனத்தின் தலைவராக செயல்பட்ட சின்னப்பிள்ளை கிராமப் பெண்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தீவிரமாக பணியாற்றினார்.
இந்த சமூக பணிக்காக கடந்த 2000 ஆம் ஆண்டு மத்திய அரசு, “ஸ்ரீ சக்தி புரஸ்கார் (Stree Shakti Puraskar)” என்ற விருதை மத்திய அரசு அறிவித்தது. இந்த விருதை 2001 -ஆம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி டெல்லியில் நடந்த விழாவில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளைக்கு வழங்கியிருந்தார். அப்போது சின்னப்பிள்ளையின் காலை தொட்டு பிரதமர் வணங்கினார். உடனே சின்னப்பிள்ளை அதிர்ச்சி அடைந்து காலில் விழுந்த வாஜ்யபாயின் கைகளை பிடித்துக் கொண்டார்.

அந்த காலகட்டத்தில் தமிழக மூதாட்டியின் காலில் பிரதமர் விழுந்து வணங்கியது பல்வேறு நாளேடுகளில் தலைப்புச் செய்தியாக இருந்தது. முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, ரூ 1 லட்சத்தை தந்து சின்னபிள்ளையை பாராட்டினார். குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம், சின்னப்பிள்ளை வீட்டுக்கே சென்று அவரது பில்லுச்சேரி கிராமம் போல் இந்திய கிராமங்களை உருவாக வேண்டும் என பாராட்டியிருந்தார்.

2019-ஆம் ஆண்டு மதுரை சின்னப்பிள்ளைக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. அது போல் 2024 -ஆம் ஆண்டு மதுரை சின்னப்பிள்ளைக்கு முதல்வராக இருந்த ஸ்டாலின், “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கி கொடுத்தார். இது போல் சமூக ஆர்வலராக அறியப்பட்ட மதுரை சின்னப்பிள்ளை ஓ-ரிங் கண்டுபிடித்தவர் என்று தவறான கருத்தை கீர்த்தனா தெரிவித்ததும் அதற்கு மற்றவர்கள் யாரும் ஆட்சேபம் தெரிவிக்காமல் தலையசைத்ததும் சமூகவலைதளத்தில் வைரலாகி விமர்சனங்களுக்குள்ளாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.