உதயநிதி ஸ்டாலின் எந்தவொரு தனிநபரின் பெயரையும் குறிப்பிட்டுப் பேசாத பொழுது, மறைமுகப் பொருள் கொண்டு உதயநிதி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதோ, கைது செய்வதோ ஏற்புடையதல்ல என புதிய தமிழகம் கட்சி தலைவர் க. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும், விவசாய கடனை முழுமையாக தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், இன்று ஆடிப்பெருக்கு விழா. வழக்கமாக இன்றைய தினம் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆட்சியில் சரியான நடவடிக்கை இல்லாததால் தண்ணீர் வரவில்லை. இதுமட்டுமில்லை குறுவை பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் நடைபெறுமா என விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள்.

ஆனால் முதல்வர் விஜய் இதைப்பற்றி கவலைப்படாமல் நிர்வாக திறனற்று இருக்கிறார். திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை நமது தலைவரே நேரடியாக திறந்து வைத்தார். ஆனால் இப்போது ஜூன், ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. தண்ணீர் மட்டும் வரவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி கூட ஜூன், ஜூலை மாதங்களில் 42 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரலை. அதைப் பற்றி விஜய் பேசாமல் மவுனமாக உள்ளார்.
அவரது எண்ணம் முழுக்க திமுக தலைவர்கள் மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்றே உள்ளது. அப்போது மேடையிலிருந்த தொண்டர்கள் சிலர் நடிகை த்ரிஷாவின் பெயரை சொல்லிக் கோஷமிட்ட நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த இரட்டை அர்த்த விளக்கம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உதயநிதிக்கு எதிராக தஞ்சை காவல் நிலையத்தில் தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கரந்தை மந்தாரடி தெருவை சேர்ந்த பைரவி என்பவர் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். முதல்வர் விஜய் குறித்தும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் உதயநிதி பேசியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணி தலைவர் பைரவி புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், BNS சட்டத்தின் பிரிவு 196- பொது அமைதியை கெடுத்தல், 192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம், 79 – பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்,352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல், 296(b) ஆபாசமாக பேசுதல், 351(2)- மிரட்டல், BNS 61- குற்றவியல் சதி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று காலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் கிழக்கு காவல்துறையினர் கைது செய்தனர். வீட்டுக்குள் காவல்துறையினர் சென்ற நிலையில் அவரது கைதுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள், திமுக வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பையும் தாண்டி அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து கிருஷ்ணசாமி தனது எக்ஸ் பக்கத்தில், ஒரு வார்த்தைக்கு ஒன்பது பிரிவுகளில் வழக்கு எதற்கு அவசரக் கைது நடவடிக்கை ஏன்? உதயநிதி ஸ்டாலின் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி விவகாரம் குறித்து 03.08.2026 அன்று திமுக சார்பில் தஞ்சையில் நடைபெற்ற கூட்டத்தில் ’ஆட்சேபகரமான – ஆபாசமான’ முறையில் பேசியதாக, தவெக சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நேரடியாக அவர் எந்தவொரு தனிநபரின் பெயரையும் குறிப்பிட்டுப் பேசாத பொழுது, மறைமுகப் பொருள் கொண்டு உதயநிதி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதோ, கைது செய்வதோ ஏற்புடையதல்ல. எதிர்க்கட்சித் தலைவர்கள் மேடைகளில் பேசக்கூடிய பேச்சுக்களுக்கெல்லாம் வரிக்கு வரி பொருள் கண்டு உள்நோக்கம் கற்பிக்க ஆரம்பித்தால், தினமும் நூற்றுக்கணக்கான வழக்குகளைப் பதிவு செய்துகொண்டே இருக்க நேரிடும்.

மேலும், தமிழர்களின் வாழ்வாதாரக் காவிரிப் பிரச்சினைக்காகப் போராடும் சமயத்தில், தொண்டர்களின் தேவையற்ற தனிநபர் கோஷங்களை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கண்டித்திருக்க வேண்டும்; அதேபோன்று ஆபாசமாகப் பொருள்படும் வார்த்தைகளை அவரும் தவிர்த்திருக்க வேண்டும்.
உதயநிதி அவர்கள் பேசியதாக ஒளிபரப்பப்படும் பேச்சால் எவரது மனமும் புண்பட்டிருந்தால், அதற்கு அவரை மன்னிப்புக் கேட்க வைக்கவோ அல்லது வருத்தம் தெரிவிக்க வைக்கவோ கோரியிருக்கலாம். அதற்கும் மறுத்தால் மான நஷ்ட வழக்குத் தொடரலாமே தவிர, அதை விட்டுவிட்டு ஒரு வார்த்தைக்காக 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்வது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல; இதுவே தவறான முன்னுதாரணமாகவும் அமைந்துவிடும்.
மேலும், நாளை பட்ஜெட் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்து சிறையிலடைக்க முயல்வது ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கும் நடவடிக்கையாகவே கருதப்படும்! எனவே, உதயநிதி ஸ்டாலின் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனப் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன் என கிருஷ்ணசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.