கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குண்டுகுறுக்கி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜகோபால். இவரது மனைவி ரூபா. இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த மாதம் 25-ந் தேதி இரவு, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குண்டுகுறுக்கி மின்வாரிய அலுவலகம் அருகே, தலையில் பலத்த காயத்துடன் ராஜகோபால் இறந்து கிடந்தார். அருகில் இருசக்கர வாகனம் கிடந்தது.
இதுகுறித்து அவரது மனைவி ரூபா புகாரின் பேரில், சூளகிரி காவல்துறையினர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி என்று வழக்குப்பதிந்து அப்பகுதியில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் ராஜகோபாலுடன் ரூபாவும் சென்றது தெரிந்தது. ஆனால், அவர் உடன் செல்லாததுபோல் அடுத்தநாள் வந்து காவல் நிலையாயத்தில் புகார் செய்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவரை அழைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சூளகிரி அருகே தனியார் நிறுவனத்தில் ரூபா பணியாற்றியுள்ளார். அப்போது, உடன் வேலை செய்யும் ஒட்டையனூரை சேர்ந்த நந்தகுமார் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதையறிந்த ரூபாவின் கணவர் ராஜகோபால் கண்டித்துள்ளார். கடந்த 24-ந் தேதி, இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து கள்ளக்காதலன் நந்தகுமாரிடம் ரூபா தெரிவித்ததையடுத்து, ராஜகோபாலை தீர்த்து கட்ட இருவரும் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 25-ந் தேதி, ரூபா தனக்கு உடல்நிலை சரியில்லை என கணவரிடம் கூறியுள்ளார். அதனால், சூளகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபால் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது, நந்தகுமார் இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து வந்து, குண்டுகுறுக்கி மின்வாரிய அலுவலகம் அருகே ராஜகோபாலை வழிமறித்து, இரும்பு ராடால் தலையில் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர், தனது இருசக்கர வாகனத்தில் ரூபாவை அவரது வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து விபத்து நாடகம் ஆடிய ரூபா மற்றும் நந்தகுமார் ஆகியோரை காவல்துறையினர் நேற்று முன்தினம், கைது செய்த சம்பவம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்பத்தித்தியது.