சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் நடைபெற்ற “Start Run, Stop Drugs” விழிப்புணர்வு மராத்தான் போட்டியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டு மக்களுடன் இணைந்து ஓடியது சமூக வலைதளங்களில் தனி டிரெண்டாக மாறியுள்ளது.
இது தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், இந்திய வரலாற்றிலேயே, ஏன் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு முதலமைச்சர் மாரத்தானில் இறங்கி 3 கி.மீ தூரம் ஓடியிருப்பது இதுதான் முதல் முறை. நம் முதல்வர் விஜய் மட்டுமே இந்த வரலாற்றுச் சாதனையைச் செய்துள்ளார் எனப் பேசினார். இந்த வீடியோ வைரலான அடுத்த சில நிமிடங்களில் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சுதான் தற்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் தான் 3 கிலோமீட்டர் வரை ஓடி இருக்கிறார் என்கின்ற செய்தி முற்றிலும் பொய்யானது என்பதை சுட்டிக்காட்டிய தமிழ்ப்புலிகள் கட்சி ஏற்கனவே கடந்த 2024 அக்டோபர் 20-ந் தேதி காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது 54 வயதில் ஸ்ரீநகரில் நடைபெற்ற 21 கிலோமீட்டர் காஷ்மீர் அரை மாரத்தான் ஓட்டத்தை 2 மணி நேரத்தில் கடந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும் இதற்கு முன்பு 13 கிலோமீட்டருக்கு மேல் ஓடியிராத போதிலும், ஒரு கிலோமீட்டருக்கு 5:54 நிமிட வேகம் என்ற கணக்கில் தோராயமாக 2 மணி நேரத்தில் இந்த ஓட்டத்தை ஓடி முடித்தார். தமிழக வெற்றி கழகத்தினுடைய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உண்மைக்கு மாறாக பதிவு செய்து வருவதாக தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் த. குமரவேல் அவர்கள் சுட்டி காட்டினார்.