செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் SRM கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையின் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அடுத்த காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள பிரபல இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் (SRM) கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பொத்தேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், மாணவர் விடுதிகளில் அதிகளவில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்று மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, வல்லாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
மூன்று உதவி ஆணையர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, மாணவர்கள் தங்கியுள்ள தனியார் குடியிருப்புகள் மற்றும் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். கடந்த ஆண்டும் இதே SRM கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள குடியிருப்புகள் மற்றும் விடுதிகளில் காவல்துறையினர் இதுபோன்ற அதிரடி சோதனைகளை மேற்கொண்ட நிலையில் தற்போது மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து கைது செய்வதற்கும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.