அரசாங்கப் பணத்தைத் தொடமாட்டேன், தொட்டால் விட மாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன்’ என்ற தமிழக முதல்வர் மேடையில் பேசும் வீராப்பு வசனங்கள் தவெக ஆட்சியின் ஒவ்வொரு நாளும் சம்பவங்கள் நீலச்சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும் ராஜா வேஷம் கலைஞ்சி போச்சு டும் டும் டும் என்பதை போல விஜய் பேசிய வீராப்பு வசனங்கள் எல்லாம் தினந்தோறும் தவெகவின் வேஷம் வெளுத்துக் கொண்டே உள்ளது.
தவெக பெண் நிர்வாகி ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் “ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ சரவணன் கூறியதன் பெயரிலேயே பாலமுருகன் என்னை காரில் அழைத்துச் சென்று கூல்டிரிங்க்ஸில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினேன். புகாரின்பேரில் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் எம்எல்ஏ சரவணனை ஏன் விசாரிக்கவில்லை? ஒரு சொந்தக் கட்சி நிர்வாகியால் கட்சியின் பெண் உறுப்பினருக்கே இந்த நிலைமையா?” என தவெக பெண் நிர்வாகி கேள்வி எழுப்பிய நிலையில் இன்னமும் விடை தெரியாமல் உள்ளது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது, ஏதோ ஒரு பவுடரை தனது செல்போனில் வைத்து ஏடிஎம் கார்டால் நொறுக்குவதும், அதை மறைத்து 500 ரூபாய் நோட்டை வைத்திருந்த காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் சரத்குமார் பதவியில் தொடர்வதற்கான காரணம்..?
மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் விளையாடியதாக தவெக நிர்வாகி எம்.ஞானசவுந்தரி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த முறைகேடு புகாரில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பெயரை நேரடியாக குறிப்பிட்டுள்ள நிலையில் இன்னமும் புஸ்ஸி ஆனந்த் பதவியில் இருக்கிறார்.
‘யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை’ என்பது போல அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் பதவி ஏற்றபோது பேசப்பட்டது. இந்த அமைச்சர் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இந்த முறுக்கு 15-ந் தேதி உற்பத்தி பண்ற தேதி Date இருக்கு.. சரி…. இது 15 ஆம் தேதிதான் தயார் பண்ணதுக்கான ஆதாரம் உங்ககிட்ட என்ன இருக்கு… என கேட்டாரு பாரு ஒரு கேள்வி… இப்படி ஒரு ஆளுக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் என்ன செய்வார்? அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு பெரிய வேலையையும் பார்த்துவிடுவார் என்ற ஊர்ல ஒரு பழமொழி போல தான் பழனியில் நடந்த மெகா ஊழல் ஆகும்.
ஊடகங்களின் முன்னால் மட்டுமல்ல; சட்டமன்றத்திலும் தெனாவெட்டாகப் பேசும் அமைச்சர் ரமேஷுக்கு இப்போது மீடியாக்களைச் சந்திக்கும் போது மட்டும் ஏன் வேர்க்கிறது? முறைகேடாக நடந்து கொண்ட ஒருவருக்கு எப்படி மூன்றே நாளில் இந்தப் பதவி உயர்வை வழங்கியது அமைச்சர் ரமேஷுக்கு தெரியாமல் நடந்ததா?
‘சார் பதிவாளர் தெரியாமல் செய்து விட்டார், சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்துவிட்டோம்’ என்கிறது தவெக அரசு. 100 கோடி சொத்தை 2 கோடிக்கு பதிவு செய்வதற்கான தண்டனை, ஒரு சார்பதிவாளரின் பணியிடை நீக்கத்தோடு முடிந்து விட்டதா? ஒரு சார்பதிவாளர் நினைத்தால் எத்தனை ஆயிரம் கோடி சொத்தையும் யாருக்கும் எழுதிக் கொடுத்து விட முடியுமா? யார் கொடுத்த தைரியத்தில் சார்பதிவாளர் இப்படி நடந்து கொண்டார்? அதுதான் விசாரிக்க வேண்டியது ஆகும்.
இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு அமைச்சர்கள் சேர்ந்து தலைமைச் செயலகத்தில் வைத்து பேட்டி கொடுத்தார்கள். ஒருவர் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ். இன்னொருவர் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன். இவர்கள் இருவரும் இருவேறு கருத்துக்களை ஊடகங்களுக்கு முன் சொன்னார்கள்.
‘‘சார் பதிவாளர் பணியில் இருந்தவர் விடுமுறையில் சென்றதால் ஜூலை 6-ந் தேதி கூடுதல் பொறுப்பாக இருந்த ஜஸ்டின் மணிகண்டன் என்பவர் சார்பதிவாளர் பொறுப்புக்கு வருகிறார். அவருக்கு நிலம் குறித்த தகவல் சரிவரத் தெரியாததால் அந்த நிலத்தை அவர் ஜூலை 6-ந் தேதி பதிவு செய்து கொடுத்துவிடுகிறார்’’ என்கிறார் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.
நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையிலேயே கிரயம் செய்ததாக சார்பதிவாளர் கூறினார். அந்தப் பதிவை தற்போது நிறுத்தி வைத்துள்ளோம். சார்பதிவாளருக்கு மேல் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச் செல்வன் தெரிவிக்கிறார். அதாவது ‘‘பழனியில் தவறு நடந்ததை ஏற்றுக் கொள்கிறேன்.
இருவரது பேட்டிக்குள் எவ்வளவு முரண்பாடுகள். ‘நிலத்தைப் பற்றியே தெரியாது’ என்கிறார் ஒரு அமைச்சர். ‘தெரிந்தே செய்துள்ளார்கள்’ என்கிறார் இன்னொரு அமைச்சர். பழனி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை தனிநபர் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு போட்டுள்ளது.
‘‘பத்திரப்பதிவுத் துறையும் தனி நபர்களும் உரிய எதிர் மனுதாரர்களைச் சேர்க்காமல் தனி நீதிபதியிடம் முறைகேடாக நீதிமன்றத்தை ஏமாற்றி உத்தரவு பெற்றுள்ளனர்’’ என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்து உள்ளனர். ‘‘பத்திரப் பதிவுத்துறை விதிகளை முறையாகப் பின்பற்றாமல் பத்திரப்பதிவு அலுவலர்கள் எவ்வாறு இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
“மதம், வழிபாடு சம்பந்தமான இடங்களை பதிவு செய்யும் போது பிரச்சினைகள் இருந்தால் அனைத்துத் தரப்பு விசாரணையும் முடித்த பின்பு பதிவு செய்ய வேண்டும்” என்ற விதி உள்ளது. அதனை முற்றிலும் அதிகாரிகள் மீறி இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தைரியத்தைக் கொடுத்தது யார்? அமைச்சர் ரமேஷுக்குத் தெரியாமல் இந்தப் பதிவு நடந்திருக்காது. அமைச்சர் ரமேஷ் இதற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். பழனிக்கே மொட்டை போட்ட அமைச்சர் ரமேஷ் பதவியை விஜய் பறிக்கவில்லை.
மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான அரசு, வளைந்து கொடுக்காத காரணத்தால் 1980 பிப்ரவரி 17-ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 356-ஐ பயன்படுத்தி எம்ஜிஆர் தலைமையிலான தமிழக அமைச்சரவை கலைக்கப்பட்டது என்பதெல்லாம் ஒரு வரலாறு. அதேபோல எம்.ஜி.ஆரின் தலைமையிலான அதிமுக 1980 தேர்தல் வெற்றிக்குப் பிறகு “மொத்த ஊழல் ” மலிந்துவிட்டதாக கலால் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் அவர்கள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.
மேலும் அகில இந்திய அளவில் இந்திரா காந்திக்கு எம்.ஜி.ஆர். அளித்த முழு ஆதரவு மற்றும் அதிமுகவில் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்திற்கு எஸ்.டி. சோமசுந்தரம் கடுமையாக விமர்ச்சித்தால் அதிமுகவிலிருந்து எஸ்.டி. சோமசுந்தரத்தை எம்.ஜி.ஆர். அதிரடியாக அதிமுகவில் இருந்து நீக்கினார். மேலும் 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அப்போதைய தகவல் துறை அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் உட்பட 10 அமைச்சர்களை எம்ஜிஆர் ஒரே நேரத்தில் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்தார் என்பதும் நாடறிந்ததே.
தவெக ஆட்சியைக் கைப்பற்றி அரியணையில் அமர்ந்த நாள் முதல், ஏதாவது வகையில் புதிய புதிய பிரச்சனைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேறி வருகின்றது. ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது முதலமைச்சர் விஜய் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றார். இத்தகைய துர்நாற்ற சக்திகள் எம்எல்ஏக்களாக இருந்தால்தான் அவரால் முதலமைச்சராக இருக்க முடியும்.
எம்ஜிஆர் காலத்தில் புகாருக்கு உள்ளானவர் தனக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தாலும் சரி, கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருப்பவராக இருந்தாலும் சரி கடுமையான நடவடிக்கையை எடுப்பதில் எம்ஜிஆர் தயக்கம் காட்டியதில்லை. எம்ஜிஆரைத் தனது அரசியல் அடையாளமாகவும் முன்மாதிரி என்று காட்டுவதெல்லாம் விஜய்யின் ‘பிரச்சார யுக்தியே’ என்பதை விஜய்யின் குறுகிய ஆட்சிக்காலம் படம்போட்டு காட்டுகிறது.