திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இதனிடையே அந்த வாகனத்தை ரவிக்குமார் தவறான செயல்களுக்கு பயன்படுத்துவதாக ருஜைனா பாத்திமாவின் கணவருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் தன்னிடம் இருந்த மாற்று சாவியை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை எடுத்து சென்று, பொள்ளாச்சியில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைத்துள்ளார். இது குறித்து, ரவிக்குமார் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூபதி என்பவர் விசாரணை நடத்தி வந்தார். அப்போது ருஜைனா பாத்திமா மற்றும் அவரது கணவரின் மொபைல் போன்களை கைப்பற்றியுள்ளார்.

அதன்பின்னர் பூபதி கோயம்புத்தூர் காட்டூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த புகாரை முடித்து வைக்கவும், மொபைல் போன்களை திரும்ப ஒப்படைக்கவும் ரூ.70 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ருஜைனா பாத்திமா, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூபதிக்கு பாடம் புகட்ட நினைத்து கோயம்புத்தூர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், கோயம்புத்தூர் லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய 70 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அந்த லஞ்ச பணத்தை ருஜைனா பாத்திமா சிறப்பு உதவி ஆய்வாளர் பூபதியிடம் நேற்று வழங்கினார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் சிறப்பு உதவி ஆய்வாளர் பூபதியை கையும் களவுமாக பிடித்து ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதிரடியாகக் கைது செய்தனர். கோயம்புத்தூரில் லஞ்ச வழக்கில் காவல் துறை அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.