என் மகன் மயிலாப்பூர் கிங்… அவனை வெட்டிக் கொன்றுவிட்டனர்… அவனின் இறுதி ஊர்வலத்தை என் சொத்துகளை விற்று பிரமாண்டமாக நடத்துவேன் என காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பிய ரவுடியின் தாயார் சூளுரைத்தார். சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த வேணுகோபால். இவரது மகன் மைத்ரேயன். இவர், மயிலாப்பூர் காவல்நிலைய ‘சி’ கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளி. நேற்று காலை 12 மணியளவில் தந்தையுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் வந்த 3 இளைஞர்கள் திடீரென ஆட்டோவில் வந்த மைத்ரேயனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பட்டப்பகலில் இளைஞர்கள் 3 பேரும் சேர்ந்து கொன்றுவிட்டு தப்பி செல்வது போன்ற வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வெளியாகின. இவரை, சில நாட்களுக்கு முன் மயிலாப்பூர் காவல்துறை, கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 21-ந் ம் தேதி சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர், கடந்த 22-ந் தேதி முதல் தினமும் காலை 10.30 மணிக்கு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருந்தார். இவரது வீடு உள்ள ராமகிருஷ்ணபுரத்தில் இவருக்கு எதிரிகள் அதிகமானதால், திருவான்மியூர் மற்றும் ராயபுரத்தில் உள்ள உறவினர் வீடுகளில் மாறி, மாறி தங்கி வந்தார்.
இந்நிலையில், நேற்று தந்தை வேணுகோபாலுடன் ஆட்டோவில் சென்று, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, திருவான்மியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று கெண்டிருந்தார். மதியம் 12 மணியளவில் அடையாறு இந்திரா நகர் வாட்டர் டேங்க் அருகே மெயின் ரோட்டில் மைத்ரேயனை 2 பைக்குகளில் வந்த 4 பேர் வழிமறித்தது. அவர்களிடமிருந்து தப்பி ஓடிய மைத்ரேயனை அந்த கும்பல் விரட்டிச் சென்று தந்தை முன், சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர்.
இதைப் பார்த்து அவரது தந்தை கதறி துடித்தார். தகவலறிந்து வந்த அடையாறு காவல்துறையினர், மைத்ரேயன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு திரண்ட மைத்ரேயனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, வாகன பதிவெண்களை வைத்து, கொலையாளிகளை தேடி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த 2025-ஆம் ஆண்டு மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த ஜீவா என்பவரை வெட்டிய வழக்கில் மைத்ரேயன் முக்கிய குற்றவாளி என்பதால் இருவருக்கும் முன் விரோதம் இருந்தது தெரியவந்தது. அதனால் ஜீவா தலைமையிலான கும்பல் கொலை செய்தது தெரிந்தது. அவர்களை தேடி வந்தனர்.
இதனிடையே, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நேற்று மாலை ஜீவா, அசாருதீன் ஆகிய இருவர் சரணடைந்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த டூமிங் குப்பம் விக்கி என்பவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மைத்ரேயனை வெட்டிக் கொன்றதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்த ஜீவா மற்றும் அவரது கூட்டாளிகள், இன்ஸ்டாகிராமில் அதை ரீல் வெளியிட்டதுடன், ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர். குறிப்பாக, கானா பாடலோடு 302 என கொலை சட்டப்பிரிவை பதிவு செய்து ஸ்டேட்டஸ் வைத்தது தெரியவந்தது.
மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்த ஜீவா மற்றும் அசாரூதின் அளித்த வாக்குமூலம் கொடுத்தனர். அதில், ஜீவா மற்றும் மைத்ரேயன் ஆகிய இருவருக்கும் இடையே மயிலாப்பூரில் யார் பெரிய ரவுடி என்ற பிரச்சனை இருந்து வந்துள்ளது. அப்போது மைத்ரேயன், ஜீவாவை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டு, ஜீவாவை வெட்டியுள்ளார். அப்போது காயமடைந்த ஜீவா உயிர் தப்பினார்.
பின்னர், மைத்ரேயனை கொலை செய்ய திட்டமிட்டு வந்த நிலையில், இதற்கிடையே தான் கஞ்சா வழக்கில் மைத்ரேயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 21-ந் தேதி மைத்ரேயன் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்ததையும், அவர் தனது வீட்டில் தங்காமல் திருவான்மியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்ததையும் நோட்டமிட்ட ஜீவா, திட்டமிட்டு தனது கூட்டாளிகளுடன் பின்தொடர்ந்து நேற்று வெட்டி கொன்றது தெரிந்தது.
செய்தியாளர்களிடம் மைத்ரேயனின் தாய் கூறுகையில், எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பையன். காலையில என் புள்ளையை வெட்டிட்டாங்க சார். அவங்க அப்பாவையும் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போய் உட்கார வச்சிருக்காங்க. என் பையனை வெட்டுன நாலு மணி நேரத்துலேயே அந்த ஃபுட்டேஜை இன்ஸ்டாவில் போட்டிருக்காங்க. ‘நாங்கதான் மயிலாப்பூர் கிங்கு’ன்னு சொல்லிக்கிட்டு இன்னமும் இன்ஸ்டாவில் சுத்திக்கிட்டு இருக்காங்க.
மூணு பேர் வந்து வெட்டுன ஃபுட்டேஜ் என்கிட்ட இருக்கு சார். வெட்டுன வீடியோவை அனுப்பி, இன்ஸ்டாவில் முழுசா போட்டுக்குறாங்க. இது என்ன சார் ஆட்சி நடக்குது? வெட்டுன பசங்க வெளியே சுத்துறாங்க. போலீஸ் இன்னும் அரெஸ்ட் பண்ணாம என்ன பண்றாங்க?
இந்தப் பசங்க எல்லாமே கஞ்சா விக்கிறாங்க சார். போலீஸ்காரங்க ஸ்பெஷல் டீம் இதுக்கு உடந்தை. இவங்களுக்கு எல்லாம் ரூட் எடுத்துக் கொடுத்ததே ஸ்பெஷல் டீம்தான். என் பையனுக்கு எதிரிகள் இருக்காங்கன்னு தெரிஞ்சும், இந்த 15 நாளும் E1 ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்துப் போடச் சொல்லியிருக்காங்க. நானும் வேலை செய்றவதான் சார். வேலையை விட்டுட்டு என் புள்ளையைக் கூட்டிட்டுப் போய் கையெழுத்துப் போட வச்சிட்டு வந்தேன்.
என் பையன் கையெழுத்துப் போட வரலன்னா என்னையே ரிமாண்ட் பண்ணுவோம்னு மிரட்டுறாங்க. இப்படி இருக்கும்போது என் பையனுக்கு எப்படிப் பாதுகாப்பு இருக்கும்? என் பையன் மேல போட்ட கஞ்சா கேஸ் பொய் கேஸ் சார். அவனை எங்கிருந்தோ பிடிச்சிட்டு வந்து லைட் ஹவுஸ் பக்கத்துல கூட்டிட்டுப் போய் கஞ்சா கேஸ் போட்டாங்க. ஒரு மாசம் உள்ளே வச்சிருந்தாங்க. இப்பதான் வெளியே கூட்டிட்டு வந்தேன்.
என் பையன் மேல போட்டது எல்லாமே பொய் கேஸ், புட்-அப் கேஸ். இந்தக் குழந்தைங்க வாழ்க்கையைக் கெடுத்தது முழுக்க முழுக்க ஸ்பெஷல் டீமும் E1 ஸ்டேஷனும்தான் சார். பசங்க மேல பொய் கேஸ் போட்டு ஒவ்வொரு உயிரும் இப்படித்தான் போகுது. இவ்வளவு நடக்கும்போது சி.எம். சார் என்னதான் பண்றாரு? கேட்டா, ‘சி.எம்.தான் பசங்களை அரெஸ்ட் பண்ணச் சொல்லி ஆர்டர் போட்டிருக்காரு’ன்னு சொல்றாங்க. அப்படின்னா இன்னும் ஏன் அரெஸ்ட் பண்ணல?
என் பையனை வெட்டுனவங்க இன்ஸ்டாவில் ‘மயிலாப்பூர் கிங்கு நாங்கதான்’னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆனா பெத்த தாய்க்கு அவன் உடலைக்கூட இன்னும் காட்டல. எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பையன் சார். இன்னைக்கு அவனையும் சாவடிச்சிட்டாங்க. எனக்காக இவ்வளவு ஜனங்க வந்து நிக்கிறாங்க. அவங்களையும் ரொம்பக் கஷ்டப்படுத்துறாங்க.
என் புள்ளை மயிலாப்பூர் மைத்ரேயன் கிங்.. மைத்ரேயன் கிங் சார்.. என் பையனை நான் எடுப்பேன். அவன் சாவு சூப்பரா நடக்கணும். ராஜா மாதிரி அவனை அனுப்பி வைப்பேன். நான் அழ மாட்டேன் சார். சொத்தை வித்தாச்சும் என் புள்ளையை ராஜா மாதிரி அனுப்பி வைப்பேன். என் புள்ளை மயிலாப்பூர் மைத்ரேயன் கிங் என கொல்லப்பட்ட மைத்ரேயனின் தாய் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.