Mallikarjun Kharge: மோடிஜி நீங்கள் 44 வெளிநாட்டுப் பயணம் சென்ற நீங்கள் ஏன் மணிப்பூர் செல்லவில்லை.. !

மோடி ஜி நீங்கள் 44 வெளிநாட்டுப் பயணங்களையும் 250 உள்நாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டுள்ளீர்கள் நீங்கள் ஏன் மணிப்பூர் செல்லவில்லை.. !என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், “நரேந்திர மோடி ஜி, மணிப்பூர் உங்கள் வருகைக்காகவும், அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்புவதற்காகவும் காத்திருக்கும் வேளையில், நாங்கள் உங்களிடம் மூன்று முக்கியமான கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.

மணிப்பூரில் உங்கள் கடைசி தேர்தல் பேரணி நடைபெற்ற ஜனவரி 2022 முதல் இன்று வரை, நீங்கள் 44 வெளிநாட்டுப் பயணங்களையும் 250 உள்நாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டுள்ளீர்கள். ஆனாலும் நீங்கள் மணிப்பூரில் ஒரு நொடி கூட செலவிடவில்லை. மணிப்பூர் மக்கள் மீது ஏன் இந்த அலட்சியமும் புறக்கணிப்பும்? அரசியல் பொறுப்பு எங்கே? இரட்டை எஞ்சின் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கான அரசியலமைப்பு கடமையை ஏன் நிறைவேற்றத் தவறிவிட்டது? முதலமைச்சரை ஏன் முன்பே நீக்கவில்லை?

இரட்டை எஞ்சின் அரசாங்கம் மணிப்பூரை இன்னும் தோல்வியடையச் செய்து வருகிறது. உள்துறை அமைச்சகம் தற்போது அங்கு அதிகாரத்தில் இருந்தாலும், வன்முறை சம்பவங்கள் நிற்கவில்லை. உள்துறை அமைச்சர் அறிவித்த அமைதிக் குழுவுக்கு என்ன ஆனது? பாதிக்கப்பட்ட அனைத்து சமூக மக்களையும் டெல்லியில் வைத்து கூட நீங்கள் ஏன் பார்க்கவில்லை? அம்மாநிலத்திற்கு ஏன் ஒரு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்கக்கூடாது? மோடி ஜி, மீண்டும் ஒருமுறை நீங்கள் உங்கள் கடமையை (ராஜதர்மத்தை) நிலைநிறுத்தத் தவறிவிட்டீர்கள்” என மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு மற்றும் மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக தீர்மானம்

சென்னையில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தில் பாஜக அரசை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரே நேரத்தில் ஆட்சிப் பணியையும், கட்சிப் பணியையும் செவ்வனே செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து இந்த உயர்நிலைத் செயல்திட்டக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய நாட்டின் அனைத்துத் தார்மீக அறநெறி அரசியல் சட்டக் கோட்பாடுகளையும் மதிக்காமல், தங்களது வகுப்புவாதச் சிந்தனைகளை மட்டும் செயல்படுத்தும் அரசாக பாஜக அரசு இருக்கிறது. இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் சிந்தனைகளைத் தள்ளி வைத்து, இந்தியாவின் அனைத்துத் தர மக்களுக்கும் குறைந்தபட்ச நன்மைகளைச் செய்யும் செயல்களை மூன்றாவது முறை மக்களால் தனிப் பெரும்பான்மை வழங்கப்படாத தேர்தல் முடிவுகளுக்குப் பின்னராவது செய்ய வேண்டும்.

தொடர்ந்து சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத அரசியல் சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு இந்த உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறது.

தமிழக மீனவர்கள் கைது, படகு பறிமுதல், அபரிமிதமான அபராதத் தொகை, சிறைத் தண்டனை, மீனவர்கள் மீது தாக்குதல் ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இந்த நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையிலும், மீன்பிடி உரிமைகளை நிலை நாட்டிடும் வகையிலும் இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசிடம் இப்போதாவது மத்திய பாஜக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்துள்ள படகுகளைத் திரும்ப பெறவும், மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வையும் மத்திய பாஜக அரசு, இலங்கையின் புதிய அரசிடம் வலியுறுத்தி உறுதி செய்ய வேண்டும்.

மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பாஜக அரசும், மத்திய பாஜக அரசும் மணிப்பூரைக் கை கழுவி விட்டதாகவே தெரிகிறது. இரண்டு அரசுகளின் அலட்சியத்தின் காரணமாக இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. இனியும் வேடிக்கை பார்க்காமல் – மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, மனிதநேயம் உயிர்பெற மத்திய பாஜக அரசு, குறிப்பாக, நரேந்திர மோடி தனிக்கவனம் செலுத்திட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

மத்திய வருவாயில் மாநில அரசுக்கு 50 விழுக்காடு நிதிப் பகிர்வை அளிக்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் திட்டங்களுக்கு 50 விழுக்காடு நிதியை மத்திய அரசு தர வேண்டும். தமிழகத்தின் கோரிக்கைகள் 16-வது நிதிக்குழுவின் அறிக்கையில் முழுமையாக இடம்பெற வேண்டும். அதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

திமுக அரசின் சாதனைகள், திட்டங்கள், தமிழக முதல்வரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகள், தொலைநோக்குப் பார்வைகள் அனைத்தையும் மக்களுக்கு நினைவூட்டுவதன் மூலமாகத் தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்குங்கள் என்று திமுக தொண்டர்கள் அனைவரையும் இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழு கேட்டுக் கொள்கிறது.

கட்சியின் ஒவ்வொரு தொண்டரும், ஒரு இயக்கம் என்று சொல்லத்தக்க வகையில் இன்று முதல் தேர்தல் பரப்புரைப் பணிகளைத் தொடங்குங்கள். துண்டுப் பிரசுரங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள் என மக்கள் இயக்கத்தைத் தொண்டர்கள் அனைவரும் தொடங்க வேண்டும், என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணி அரசிலிருந்து தேசிய மக்கள் கட்சி விலகல்

மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த பாஜக தவறிவிட்டதாக குற்றம் சாட்டி தேசிய மக்கள் கட்சி பாஜக கூட்டணி அரசில் இருந்து விலகியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி, குகி சமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து 237 பேர் உயிரிழந்தனர். 60,000-க்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்த நிலையில் 11,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், மணிப்பூரில் படிப்படியாக அமைதி திரும்பி வந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி ஜிரிபாம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் குகி சமுதாயத்தை சேர்ந்த 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிரிபாம் மாவட்டத்தில் குகி தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மைதேயி சமூகத்தை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. ஜிரிபாம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருக்கிறது. மணிப்பூரில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாஜக தவறிவிட்டதாக குற்றம் சாட்டி தேசிய மக்கள் கட்சி பாஜக கூட்டணி அரசில் இருந்து விலகியுள்ளது.

மணிப்பூர் சட்டப்பேரவையில் மொத்தம் 60 MLA -க்கள் உள்ள நிலையில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் 39 MLA -க்கள் பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த பாஜக தவறிவிட்டதாக குற்றம் சாட்டி தேசிய மக்கள் கட்சி பாஜக கூட்டணி அரசில் இருந்து நேற்று விலகியுள்ளது.

மாயமான 6 பேர் கொலை..! மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது..!

மாயமான 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களின் கொலைக்கு நீதி கேட்டு 2 பாஜக அமைச்சர்கள், 3 MLA க்கள் வீடுகள் முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் நீடிக்கும் இனக்கலவரத்தின் ஒருபகுதியாக கடந்த 11-ஆம் தேதி ஜிரிபாம் மாவட்டம் போராபெக்ராவின் ஜகுராதோர் கராங் பகுதிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கடைகளை தீ வைத்து எரித்ததுடன், அங்கிருந்த CRPF வீரர்கள் முகாம் உள்பட சில வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

அப்போது CRPF வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தீவிரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக மெய்டீஸ் இனத்தை சேர்ந்த 6 மாத குழந்தை உள்பட 3 குழந்தைகள், 3 பெண்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றதுடன், மெய்டீஸ் இனத்தை சேர்ந்த 2 ஆண்களையும் தீ வைத்து எரித்து கொன்றனர். இதனால் ஜிரிபாம் மாவட்டத்தில் பதற்றம் நீடித்து வந்தது. மாயமான 6 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை போராபெக்ரா மாவட்டத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில் மணிப்பூர் – அசாம் எல்லையில் ஜிரி நதி – பக்ரா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 2 குழந்தைகள், ஒரு பெண்ணின் உடல்கள் மீட்கப்பட்டன. அதே பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை மேலும் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 6 பேரின் உடல்கள் உடல் கூராய்வுக்காக அசாமின் சில்சார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த தகவல் பரவியதால் இம்பால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். மேற்கு இம்பாலின் குவாகீதெல், சகோல்பந்த் தேரா உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் சாலைகளில் டயர்களை எரித்து போக்குவரத்தை தடுத்தனர். இதன் காரணமாக நேற்று அங்குள்ள வணிக நிறுவனங்கள், சந்தைகள் மூடப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

மேலும் 6 பேரின் மரணத்துக்கு நீதி கேட்டு மணிப்பூர் பாஜக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் 6 பேரின் கொலைக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும்” என முழக்கமிட்டனர்.

Derek O’Brien: வௌிநாடுகளுக்கு போகும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா..!?

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு நேற்று முன்தினம் நாடு திரும்பினார். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக். ஓ. பிரையன் நரேந்திர மோடியின் வௌிநாடு பயணம் பற்றி கேள்வி எழுப்பி உள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக். ஓ. பிரையன் எக்ஸ் பக்கத்தில், “கடந்த ஆண்டு மே 3-ஆம் தேதி மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அங்கு இன்னும் அவ்வப்போது இனக்கலவரம் நடந்து வருகிறது. கடல்பறவையான ஆர்க்டிக் டெர்ன் இனத்தை சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா உள்ளிட்ட வௌிநாடுகளுக்கு சென்று வருகிறார்.

ஆனால் ஓராண்டை கடந்தும் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு செல்ல நரேந்திர மோடிக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லையா?” என டெரிக். ஓ. பிரையன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Mallikarjun Kharge: ‘மணிப்பூருக்காக 1 நொடி கூட மோடி செலவிடவில்லை..!

மோடி மணிப்பூருக்கு 1 நொடி கூட செலவிடவில்லை. இன்னும் வன்முறை கட்டுப்படாத முடியாத அளவுக்கு உள்ளது. இவை அனைத்தும் மணிப்பூர் விஷயத்தில் மோடியின் படுதோல்வியையே காட்டுகிறது. மோடியின் மோசமான தோல்வி என்பது மன்னிக்கவே முடியாதது என மல்லிகார்ஜுன கார்கே காட்டமாக விமர்ச்சித்துள்ளார்

மணிப்பூர் ரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மகக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது. இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன.

சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இரு சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் இம்பாலில் ஆளுநர் மாளிகையில் முற்றுகை இட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் மணிப்பூரில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில், கடந்த 16 மாதங்களில் மோடி மணிப்பூருக்கு 1 நொடி கூட செலவிடவில்லை. இன்னும் வன்முறை கட்டுப்படாத முடியாத அளவுக்கு உள்ளது. இவை அனைத்தும் மணிப்பூர் விஷயத்தில் மோடியின் படுதோல்வியையே காட்டுகிறது. மோடியின் மோசமான தோல்வி என்பது மன்னிக்கவே முடியாதது.

மணிப்பூர் முதலமைச்சர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். மணிப்பூரில் பாதுகாப்புச் சூழலுக்கு மத்திய அரசு முழு பொறுப்பேற்ப வேண்டும். மணிப்பூர் வன்முறையை விசாரிக்கும் சிபிஐ, என்ஐஏ மற்றும் பிற அமைப்புகளை மோடி அரசு தவறாகப் பயன்படுத்தக்கூடாது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மணிப்பூரில் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியுள்ளார். மணிப்பூரைத் தவிர மற்ற மாநிலங்களின் தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு அரசியல் செய்வதில் மோடி மும்முரமாக இருக்கிறார். எங்கள் மாநிலத்தில் நிலவும் வன்முறையை நிறுத்த பிரதமர் மோடி ஏன் விரும்பவில்லை? என்பதே மணிப்பூர் மக்களின் கேள்வியாக உள்ளது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Biren Singh: பொதுமக்கள் மீது ட்ரோன் மூலம் குண்டு வீசியது தீவிரவாத செயல்..!

மணிப்பூரில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி மேற்கு இம்பால் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்ரூக், சேஞ்சம் சிராங் ஆகிய பகுதிகளில் குகி கிளர்ச்சியாளர்கள் 2 ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி பொது மக்கள் நிறைந்த இடத்தில் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியானது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு பெண் உள்பட இருவர் கொல்லப்பட்டனர். அந்த பெண்ணின் 12 வயது மகள், 2 காவலர்கள் உள்பட 12 பேர் காயம் அடைந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் கொண்டு வெடிகுண்டுகள் வீசப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ஆகையால் கிளர்ச்சியாளர்கள் மீது எதிர்த் தாக்குதலில் ஈடுபட மாநில அரசு காவல்துறை தலைமையகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் பிரேன் சிங் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், பொது மக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் ட்ரோன்களை பயன்படுத்தி வெடிகுண்டுகளை வீசுவது தீவிரவாத செயலாகும். இத்தகைய கோழைத்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அப்பாவி மக்கள் மீது இத்தகைய தாக்குதலில் ஈடுபடுவதை மணிப்பூர் மாநில அரசு மிக தீவிரமாக அணுகும்.

இதுபோன்ற தீவிரவாத தாக்குதலுக்கு அரசு தக்க பதிலடி கொடுக்கும். அனைத்து விதமான வன்முறைகளை நாம் கைவிடுவோம். வெறுப்பு, பிளவு, பிரிவினைக்கு எதிராக மணிப்பூர் மக்கள் ஒன்றுபடுவோம் என பிரேன் சிங் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மணிப்பூர் பெண் ஆவேசம்: வாழவே உரிமை அளிக்காத பா.ஜ.க அரசு..! வாக்கு மட்டும் கேட்கிறது…!

கடந்த 2019 மக்களவை தேர்தலில், 82 விழுக்காடு வாக்குப் பதிவு செய்து, மற்ற மாநில மக்களுக்கு, ஜனநாயக கடமையாற்றுவதில் முன்னோடியாக விளங்கிய மாநிலம் மணிப்பூர். ஆனால், அதற்கான சுவடு கூட தெரியாத அளவில், இன வன்கொடுமைக்கு ஆட்பட்டு, வாக்களிப்பது எதற்கு என்று கேட்கிற அளவிற்கு சென்றுள்ளனர் மணிப்பூர் மாநில சிறுபான்மையினர்.

பெரும்பான்மை சமூகமாக விளங்கும் மொய்தி இனத்தின் ஆதரவால், மொய்தி இனத்தவரை முதல்வராக்கி, அவரது ஆட்சியின் வழி, சிறுபான்மையின மக்களின் ST இட ஒதுக்கீட்டை ஒடுக்க எண்ணிய பா.ஜ.க, எதிர்த்து உரிமை குரல் எழுப்பியர்களின் வீடுகளை தரைமட்டமாக்கி, ஊரை விட்டு ஓட செய்து வருவதே மணிப்பூர் கலவரத்தின் உட்கருவாக இருந்தது.

இதனால், சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணிப்பூர் மக்கள், தங்களின் உடைமைகளையும், இருப்பிடங்களையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாழவே உரிமை அளிக்காத பா.ஜ.க அரசு, வாக்கு மட்டும் கேட்கிறது : உணவின்றி, உடுத்த மாற்று துணியின்றி, சரியான மின்சார வசதி, கழிப்பறை வசதி என எவையும் இல்லாமல் கடும் நெருக்கடிக்கு ஆட்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தங்களின் செயல்களுக்கு சற்றும் வருத்தம் தெரிவிக்காத பா.ஜ.க அரசு, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, தங்களது பதவியை தக்கவைக்க தேர்தல் வேலைகளில் மும்முறமாக ஈடுபட்டு வருகிறது. இது குறித்து, நிவாரண முகாம்களில் வாழும் 50 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்களில் ஒருவரான நோபி என்ற பெண், “தற்போது ஆட்சி செய்து வரும் பா.ஜ.க, எங்களின் வாழ்வியலுக்கான உரிமையையே பிடுங்கியுள்ளது.

வாக்குரிமையை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்ய போகிறோம். எங்களின் வாழ்க்கையை சூரையாடியவர்களுக்கு, நாங்கள் ஏன் எங்களுடைய வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக எம்எல்ஏ பரந்தாமன் பதிலடி: நிர்மலா சீதாராமன் புரிதல் இல்லாமல் யாரோ எழுதிக்கொடுத்ததை பேசுகிறார்..!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தமிழர்கள் பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திராவிடம் பற்றி எல்லாம் குறிப்பிடப்படவில்லை மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் சேலை இழுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டது.. என்பது மாதிரியான கருத்தையும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு விஷயங்கள் குறித்து எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ பரந்தாமன் பதில் கூறுகையில், ” மணிப்பூரில் நடந்த மனிதாபிமானமற்ற, இந்திய நாடே வெட்கப்படக்கூடிய மிகப்பெரிய மோசமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதை பற்றி மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காதது குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் மணிப்பூர் சென்று பார்வையிட்டு வந்த பின்னர், பிரதமர் நரேந்திர மோடியின் மீது, இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். அதன் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசினார்கள்.

அப்போது மத்திய அரசு எங்கெல்லாம் தவறு செய்கிறது.. ஜிஎஸ்டி வரி விதிப்பால் நாட்டுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது.. மொழி திணிப்பால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஏதேச்சதிகாரம், ஒரே நாடு ஒரே மொழி இது மாதிரி எல்லாம் இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக செய்து கொண்டு வருகிறார்கள் என்று திமுக எம்பி கனிமொழி பேசினார். அப்போது அவர் நீங்க இந்தி மொழியை திணிக்கிறீர்கள்.. இந்தியாவின் பிற மொழிகளையும் பாருங்க என்பது தான் கனிமொழி பேச்சின் அர்த்தமாக இருந்தது.

தமிழில் உள்ள இலக்கியத்தை படிங்க.. உதாரணத்திற்கு சிலப்பதிகாரத்தை பாருங்கள் என்று மேற்கோள் தான் காட்டினார். சட்டசபையில் ஜெயலலிதா சேலையை திமுகவினர் பிடித்து இழுத்ததாக நிர்மலா சீதாராமன் பேச்சு.. சம்பவம் உண்மையா ? ஆனால் இன்றைக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது , மணிப்பூர் சம்பவத்தை பற்றி மருத்துக்குக் கூட பேசவில்லை. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று பேசவில்லை.. அதைவிட்டுவிட்டு அரசியல் மேடை போல் அவையை மாற்றி உள்ளது பாஜக அரசாங்கம்.. வடக்கே வேங்கடமும், தெற்கே குமரியும் தெற்கிலும், கிழக்கிலும் கடலும் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தது என்று பாடப்புத்தகத்தில் மாணவர்கள் படிக்கிறார்கள்.

இதில் மாபொசியின் விளக்கத்தை சொன்னார்கள் .. மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு எல்லைகள் மாறி உள்ளது. ஆனால் சிலப்பதிகாரத்தில் சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது என்று கற்பனையான ஆதாரமற்ற விஷயத்தை எழுதி கொடுத்ததை நிர்மலா சீதாராமன் படித்துள்ளார். இந்தியா என்ற சப்ஜெக்ட் எல்லாம் சிலப்பதிகாரம் காலக்கட்டத்தில் இல்லை.. பல சமஸ்தானங்கள் இருந்தது. வெள்ளையர்கள் வசதிக்காக இந்தியா என்று நிர்வாக ரீதியாக உருவாக்கப்பட்டது.

நிர்மலா சீதராமன் புரிதல் இல்லாமல் பட்ஜெட். வரி உள்பட பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார் என்று பார்த்தால், வரலாறு குறித்தும் அரசியல் குறித்தும் புரிதல் இல்லாமல் யாரோ எழுதிக்கொடுத்ததை பேசுகிறார். இரண்டாவது ஜெயலலிதா சப்ஜெக்ட்டை எடுத்ததே மிகப்பெரிய அநாகரீகம்.. சாதாரண சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.. பெண்கள் வல்லுறவுக்கு ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் வெளிப்படையாக மானபங்கம் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதை பற்றி பேசுவதற்கு கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாமல் , நிர்மலா சீதாராமன், அரசியல் நாடகம் செய்த ஜெயலலிதாவின் செயலை, அதாவது ஜெயலலிதாவின் அரசியல் விளையாட்டை போய் பேசுவது, இவர்களின் சிறு புத்தி மற்றும் சிறுபிள்ளைத்தனமாகும். ஒன்றுமே இல்லை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பிளையிங் கிஸ் கொடுத்ததாக பாஜக எம்பிக்கள் கூறினார்கள் அவர்களிடம் எப்படி தரமான வாதத்தை பார்க்க முடியும்” என்று திமுக எம்எல்ஏ பரந்தாமன் கூறினார்.

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பெண் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் பெண் வழக்கறிஞர்கள் சார்பில் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘மணிப்பூர் மகள்களை பாதுகாப்போம்’ என்ற முழக்கத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் முத்துலட்சுமி, தமயந்தி, இந்திராகாந்தி, திங்களவள், சத்தியா, சவுமியா, மோகனாம்பாள், ஆகியோர் தலைமையில், மூத்த பெண் வழக்கறிஞர்கள் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். பெண்கள் மீதான வன்கொடுமைகளை செய்த குற்றவாளிகளை கைது செய்து சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பெண் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.