மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது..!

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மல்லிகார்ஜூனா கார்கே எக்ஸ் பக்கத்தில், கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது. இருந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது.

கடந்த 10 ஆண்டுகள், 100 நாட்களில் எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மக்களிடம் இருந்து மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் பாஜகவை வீழ்த்தி, மோடியால் தூண்டப்பட்ட இந்த விலை உயர்வை நிராகரிக்க வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே பதிவிட்டுள்ளார்.

செல்வப்பெருந்தகை காட்டம்: இரு பெண்கள் சேர்ந்து, கோவை மக்களை ஒரே நாளில் சிதைத்து விட்டார்கள்..!

கோயம்புத்தூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து, கோயம்புத்தூர் காந்திபார்க் ரவுண்டானா பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பன் மாலை அணிந்து பேசினார். அப்போது, ‘இரு பெண்கள் சேர்ந்து, கோவை மக்களை ஒரே நாளில் சிதைத்து விட்டார்கள். கோவையின் அடையாளமாக விளங்கும் இங்குள்ள மிகப்பெரிய உணவக உரிமையாளரை மன்னிப்பு கேட்கவைத்து, அவமானப்படுத்தி, வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இதன்மூலம், கோவை மக்களின் நம்பிக்கையை சிதைத்து விட்டார்கள். இது, கோவை மக்களுக்கு மிகப்பெரிய அவமானம். பாஜகவின் இந்த பாசிச ஆட்சியை, தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, எதிர்கட்சிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, சாமானிய மக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற குறைந்தபட்ச நாகரிகம்கூட இல்லாமல், இப்படி எல்லோரையும் வருந்த செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அற்ப விளம்பரத்துக்காக வீடியோ வெளியிட்டு, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் விரோதத்தை சம்பாதித்துக்கொண்டார். அவர், தமிழக மக்களிடம், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என செல்வப்பெருந்தகை பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், செல்வப்பெருந்தகை தலைமையில் மத்திய அரசையும், நிர்மலா சீதாராமனையும் கண்டித்து தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றதும் அனைவருக்கும் பன் வழங்கினார். அப்போது செல்வப்பெருந்தகை இது, கிரீம் இல்லாத பன்… ஜி.எஸ்.டி கிடையாது… தைரியமாக சாப்பிடுங்கள் என உற்சாக மூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிமணி வலியுறுத்தல்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்..!

அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். மன்னிப்பு கேட்க வைத்து வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். பாஜக,பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி என்று அவர் தெரிவித்தார்.

கோவை அன்னபூர்ணா உணவகம் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற உணவகங்களில் ஒன்று. அதன் நிறுவனர் சீனிவாசன் மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம், மிகவும் நியாயமான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறார். அதையும் தன்மையாக முன்வைக்கிறார். ஜி.எஸ்.டியால் நாடே பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த வீடியோ வைரலாகிறது.

வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் தனது அனுபவத்தின் மூலம்,பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை. ஆனால் அதை செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து ,அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அறுவெறுப்பானதும் கூட.

அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்பு கேட்பதற்கு?உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா? தமிழ்நாட்டில்,கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துகிறேன். பாஜக ,பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி.

நீங்கள் பாஜகவிற்கு அள்ளிக்கொடுத்தாலும்.அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும். அவர்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு சொந்தக் கருத்தே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு. அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்தார்.

Amit Malviya: காங்கிரஸ் இப்போது வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது..!

பாகிஸ்தானால் ஆதரிக்கப்படுபவரும், இந்தியாவுக்கு எதிரானவருமான இல்ஹான் உமருக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி செயல்படுவதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கப் பயணத்தின்போது, ​​மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, வாஷிங்டனில் உள்ள ரேபர்ன் ஹவுஸ் அலுவலகத்தில் பிராட்லி ஜேம்ஸ் ஷெர்மன் தலைமையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். அதில் ஒருவர் தான் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இல்ஹான் உமர். இந்தியாவுக்கு எதிரான கருத்துகளால் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகுபவர் தான் இந்த இல்ஹான் உமர்.

இது தொடர்பாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாளவியா எக்ஸ் பக்கத்தில், “எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாகிஸ்தான் ஆதரவாளரும், இந்தியாவுக்கு எதிரானவருமான, தீவிர இஸ்லாமியவாதி, காஷ்மீர் ஆதரவாளருமான இல்ஹான் உமரை அமெரிக்காவில் சந்தித்தார். சொல்லப்போனால் பாகிஸ்தான் தலைவர்கள் கூட இப்படியான சந்திப்பில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். காங்கிரஸ் இப்போது வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது.” என அமித் மாளவியா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Rahul Gandhi: நரேந்திர மோடி தன்னை கடவுளுக்கு நிகரானவன் என்று சொல்லியும் மக்கள் அவரை ஏற்கவில்லை..!

நரேந்திர மோடி தன்னை கடவுளுக்கு நிகரானவன் என்று சொல்லியும் மக்கள் அவரை ஏற்கவில்லை என ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம்.  4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போது, ஆர்எஸ்எஸ், பாஜகவை கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு இந்தியாவில் பாஜக தலைவர்கள் மத்தயில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வாஷிங்டனின் விர்ஜினியாவின் புறநகரான ஹெர்ன்டனில் இந்தியர்களுடனும், ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய ராகுல் காந்தி, இந்தியாவில் பிரதமர் மோடி பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, நிறைய பணம் செலவழித்து, அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி உருவாக்கி வைத்திருந்த அந்த பயம், மக்களவை தேர்தல் முடிவு வெளியான அடுத்த நிமிடமே மறைந்து போனது. 56 இன்ச் மார்பு, கடவுளிடம் நேரடியாக பேசுபவன் என்கிற பேச்சுக்கள் எல்லாம் போயே போய்விட்டன. அதெல்லாம் இப்போது காணாமல் போய் வரலாறாகி விட்டன.

இதோடு, பாஜகவின் கூட்டணியும் இப்போது இரண்டாக உடைந்து விட்டது. இனிவரும் தேர்தல்களில் அவரும் திணறப் போவதை நீங்கள் பார்ப்பீர்கள். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்றே நான் நம்புகிறேன். அவர்கள் 246 சீட்களை பெற்றதை பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். இதில் நிறைய பணம் விளையாடியிருக்கிறது. தேர்தல் ஆணையம் பாஜகவின் விருப்பப்படியே செயல்பட்டது. மோடி நாடு முழுவதும் பிரசாரம் செய்யவசதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு, வேறு தேர்தல் தேதி வடிவமைக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்ட நிலையில் தேர்தலை எதிர்கொண்ட போதிலும், மோடியின் அடிப்படை சித்தாந்தங்களை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிரசாரத்தின் பாதியிலேயே தங்களால் 300, 400 சீட்களை எட்ட முடியாது என்பதை மோடி உணர்ந்து விட்டார். அதனால் தான் உளவியல் ரீதியாக குழம்பிப் போன அவர் கடவுளிடம் நேரடியாக பேசுபவன், நான் விசேஷமானவன் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். இப்போதும் நாடாளுமன்றத்தில் உளவியல் ரீதியாக அவர் பாதிக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

தன்னை கடவுளுக்கு நிகரானவன் என்று சொல்லியும் கூட மக்கள் அவரை ஏற்காததால் விரக்தி அடைந்துள்ளார். பாஜகவால் இந்தியாவை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாகத்தான் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு, நம்பிக்கை, பாரம்பரியம், மொழி, உணவு எல்லாம் இருக்கின்றன. அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.

ஆனால், இதை பாஜகவால் ஏற்க முடியவில்லை. எல்லாவற்றையும் விட நாக்பூர் தலைமையகம் தான் பெரிது என எண்ணுகிறார்கள். வெறுப்பை பரப்பாதீர்கள், அன்பை பரப்புங்கள், திமிராக இருக்காதீர்கள் பணிவுடன் இருங்கள், மக்களை, பாரம்பரியத்தை, மொழி, மதத்தை அவமதிக்காதீர்கள், அனைவரும் மதித்திடுங்கள் என்கிறோம் நாங்கள் என ராகுல் காந்தி பேசினார்.

பிரதமரின் ‘க்ளீன் சிட்’ அதானியின் வெளிநாட்டு முதலீடுக்கான ஆதரவு கடிதம்..!

அதானி குழுமம் சீனாவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், பிரதமர் சீனாவுக்கு க்ளீன் சிட் அளித்துள்ளது அதானி குழுமத்துக்கான ஆதரவு கடிதமே என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அதானி குழுமம் சீனாவில் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பை குறைமதிப்புக்கு உட்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் “கடந்த 2020-ம் ஆண்டு ஜூன்19 அன்று பிரதமர் மோடி வழங்கிய க்ளீன் சிட், இது வரையிலான இந்திய பிரதமர்கள் வெளியிட்ட அறிக்கையிலேயே மிகவும் மோசமானது. மேலும் அது இந்திய பகுதிகள் மீதான சீனர்களின் அத்துமீறல் மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளின் யதார்த்த நிலையை மறைத்தது.

நமது எல்லைப் பகுதியிலும் பிராந்தியத்துக்குள்ளேயும் சீன வீரர்களின் அத்துமீறல்கள் இருந்த போதிலும், மத்திய அரசு அதற்கு பதில் அளிப்பதில் இருந்து தவறி விட்டது. டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சீனாவிலிருந்து இறக்குமதி அதிகரிக்கப்பட்டு உள்நாட்டில் சீரழிவை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் மத்திய அரசு இங்குள்ள சீன பணியாளர்களுக்கு விரைவாக விசா வழங்க முடிவெடுத்துள்ளது.

இரண்டாவதாக, சீனா மற்றும் கிழக்கு ஆசியாவில் அதானி குழுமத்தின் முந்தைய நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகத்துக்குரியதாக இருந்தது. சாங் சுங் லிங் என்ற தைவானைச் சேர்ந்த தொழிலதிபர் பல்வேறு அதானி குழுமங்களுக்கு இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவரது குடும்பத்துக்குச் சொந்தமான கப்பல் ஒன்று ஐ.நாவின் தடையையும் மீறி வடகொரியாவுக்கு எண்ணெய் கடத்தியதாக 2017-ல் குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக அதானி குழுமத்தின் வெளிநாட்டு முதலீட்டு நடவடிக்கைள் நமது தேசத்தின் பாதுகாப்பை குறைமதிப்பீடு செய்வதுடன், இந்தியாவுக்கு மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. உதாரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அதானி நிலக்கரி ஆலையில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கான வங்கதேசத்தின் ஒப்பந்தம், சமீபத்தில் அங்கு ஏற்பட்ட போராட்டத்துக்குக்கான முக்கிய புள்ளியாக இருந்தது.

இலங்கை, கென்யா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் அதானியின் நலன்கள் இந்தியாவுக்கு தீங்கு விளைவித்துள்ளன. ஏனெனில் அதானியுடனான பிரதமரின் நட்பு உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நலன்களை அதானி குழுமத்தின் வணிக நலன்களுக்காக விட்டுக்கொடுப்படு உலக அளவில் இந்தியாவுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிலான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி – அதானியின் சிறப்பு நடப்புக்காக இந்தியா ஏற்கெனவே உள்ளூர் மற்றும் உலக அளவில் பல தியாகங்களைச் செய்துள்ளது.” என ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Mallikarjun Kharge: ‘மணிப்பூருக்காக 1 நொடி கூட மோடி செலவிடவில்லை..!

மோடி மணிப்பூருக்கு 1 நொடி கூட செலவிடவில்லை. இன்னும் வன்முறை கட்டுப்படாத முடியாத அளவுக்கு உள்ளது. இவை அனைத்தும் மணிப்பூர் விஷயத்தில் மோடியின் படுதோல்வியையே காட்டுகிறது. மோடியின் மோசமான தோல்வி என்பது மன்னிக்கவே முடியாதது என மல்லிகார்ஜுன கார்கே காட்டமாக விமர்ச்சித்துள்ளார்

மணிப்பூர் ரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மகக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது. இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன.

சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இரு சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் இம்பாலில் ஆளுநர் மாளிகையில் முற்றுகை இட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் மணிப்பூரில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில், கடந்த 16 மாதங்களில் மோடி மணிப்பூருக்கு 1 நொடி கூட செலவிடவில்லை. இன்னும் வன்முறை கட்டுப்படாத முடியாத அளவுக்கு உள்ளது. இவை அனைத்தும் மணிப்பூர் விஷயத்தில் மோடியின் படுதோல்வியையே காட்டுகிறது. மோடியின் மோசமான தோல்வி என்பது மன்னிக்கவே முடியாதது.

மணிப்பூர் முதலமைச்சர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். மணிப்பூரில் பாதுகாப்புச் சூழலுக்கு மத்திய அரசு முழு பொறுப்பேற்ப வேண்டும். மணிப்பூர் வன்முறையை விசாரிக்கும் சிபிஐ, என்ஐஏ மற்றும் பிற அமைப்புகளை மோடி அரசு தவறாகப் பயன்படுத்தக்கூடாது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மணிப்பூரில் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியுள்ளார். மணிப்பூரைத் தவிர மற்ற மாநிலங்களின் தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு அரசியல் செய்வதில் மோடி மும்முரமாக இருக்கிறார். எங்கள் மாநிலத்தில் நிலவும் வன்முறையை நிறுத்த பிரதமர் மோடி ஏன் விரும்பவில்லை? என்பதே மணிப்பூர் மக்களின் கேள்வியாக உள்ளது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகத், பஜ்ரங் புனியா மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து காங்கிரஸில் இணைந்தனர்.!

ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று அக்டோபர் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளிவரவுள்ளது. இந்நிலையில், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடந்த புதன்கிழமை டெல்லியில் சந்தித்தனர். இதுதொடர்பான புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துவிட்டு முறைப்படி அக்கட்சியில் இணைந்தனர்.இவர்கள் இருவருமா அல்லது யாரவது ஒருவர் தேர்தலில் போட்டியிடுவார்களா என்பது விரைவில் தெரியவரும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பஜ்ரங் புனியா டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இதனிடையே வினேஷ் போகத் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பாரிஸ் ஒலிம்பிக்கில் எட்டிப்பிடித்தார். அந்தநிலையில் அவர் போட்டியிட்ட 50 கிலோ எடை பிரிவில் நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் அதிகமாக இருந்ததாக கூறி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அவர் அறிவித்தார்.

பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் இருவரும், பாஜக முன்னாள் எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு போராட்டத்தில் அங்கம் வகித்தனர். இந்தப் பின்னயில் வீரர்கள் இருவரும் ஹரியாணா தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக ஊடகங்களில் உலாவி வந்தன. அதற்கு ஏதுவாக வினேஷ் போகத் அண்மையில் ஷம்பு எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவினைத் தெரிவித்து இருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பாக வினேஷ் போகத் இந்திய ரயில்வேயில் தான் பார்த்து வந்த பணியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பதிவொன்றை வினேஷ் போகத் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “எனது வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தில் இந்திய ரயில்வே பணியில் இருந்து என்னை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்துள்ளேன். அதற்கான எனது ராஜினாமா கடிதத்தை சம்மந்தப்பட்ட இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளேன். இந்திய ரயில்வேக்கும், நாட்டுக்கும் சேவை செய்ய இந்த வாய்ப்பினை வழங்கிய இந்திய ரயில்வே குடும்பத்துக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.” என வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

 

கடைசியாக ஒரு வாய்ப்பு தாருங்கள் என கண்ணீருடன் கெஞ்சி வாக்கு சேகரித்த உமர் அப்துல்லா..!

ஜம்மு காஷ்மீர் யூனியன் சட்டசபை தேர்தலை அனைத்து கட்சிகளும் வாழ்வா? சாவா? என எதிர்கொண்டு நிற்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 துண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக்கியதுடன் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370- வது பிரிவை ரத்து செய்த பாஜக, தாம் செய்தது நியாயம் என பிரசாரம் செய்கிறது. ஜம்மு காஷ்மீரை பாஜக வேட்டையாடிவிட்டதாக காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பதிலடி தருகிறது.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளோ, காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. இந்நிலையில் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரான அம்மாநில முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கந்தர்பால் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அங்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்த கையோடு தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கினார். கந்தர்பால் தொகுதியில் உமர் அப்துல்லா பிரசாரம் செய்து கொண்டிருந்த போது திடீரென தமது தலையில் இருந்த தொப்பியைக் கழற்றினார்.

அதனை இரு கைகளில் ஏந்தியபடி, இந்த தொப்பியின் கவுரவம், என்னுடைய கவுரவம் அனைத்தும் நீங்கள் வாக்களிப்பதில்தான் இருக்கிறது. எனக்காக ஒரே ஒரு முறை கடைசி முறையாக வாக்களியுங்கள். மக்களுக்காக சேவை செய்ய எனக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு தாருங்கள் என கண்ணீரும் கம்பலையுமாக கெஞ்சி வாக்கு உமர் அப்துல்லா சேகரித்தார்.

ராகுல் காந்தியை மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா சந்திப்பு..!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். பாரிஸிலிருந்து இந்தியா திரும்பியதும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக நின்றார்.

முன்னதாக கடந்த ஆண்டில் இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் தொல்லை புகார் அளித்தவர் வினேஷ் போகத். இவருக்கு உறுதுணையாக பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் நின்று போராட்டத்தை நடத்தினர். இருவருமே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை நேற்று நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இதன்மூலம் ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் இம்முறை இருவரும் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.