உத்தவ் தாக்கரே: பாஜக தந்திரமான கட்சி..! முதலமைச்சர் பதவிக்காக நான் கனவு காணவில்லை..!

நான் முதலமைச்சராக வேண்டும் என்று கனவு காணவில்லை. மகாராஷ்டிராவை சுரண்டுபவர்களை தோற்கடிப்பதே தனது கொள்கை என முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மகாராஷ்டிராவில் சிவசேனா MLA -களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. MLA-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் பேரவை தேர்தலே வந்துவிட்டது. டி.ஒய்.சந்திரசூட் அவர்கள் நீதியை வழங்குவதற்குப் பதிலாக ஒரு வர்ணனையாளராக மாறிவிட்டார்.

நீதிபதி என்பதற்கு பதிலாக அவர் சட்டத்துறை ஆசிரியராக இருந்திருந்தால், மிகவும் பிரபலமாக இருந்திருப்பார். பாஜக தலைமை மிகவும் தந்திரமானது; காங்கிரஸ் தலைமை மரியாதை அளிக்கிறது; ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே ஆகியோர் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்கின்றனர். இன்றைய பாஜக ‘யூஸ் அண்ட் த்ரோ’ போல மாறிவிட்டது. மும்பை தாராவியை அதானியிடம் ஒப்படைக்கப்படும் விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஆங்கிலேயேர் காலத்தில் மும்பையை வரதட்சணையாக வழங்கப்பட்டதைப் போல், தற்போதும் மும்பையை யாரிடமும் ஒப்படைக்க முடியாது. மக்கள் தான் முடிவு செய்வார்கள்; மாநில அரசு அல்ல. நான் முதலமைச்சராக இருந்தபோது அதானியை சந்தித்தேன்; தாராவியில் டெண்டர் கொடுப்பதற்கு அல்ல; அதானியிடம் தாராவியை ஒப்படைக்காததால் எனது அரசு கவிழ்க்கப்பட்டது. நான் முதலமைச்சராக இருந்தபோது, யாரையும் வெட்டவில்லை. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்கள் தீப்பிடித்து எரிந்தன.

அவர்களிடம் பேசுவதற்கு உண்மையான பிரச்னைகள் இல்லை; எனவே அவர்கள் அப்படி பேசுகிறார்கள். மகாராஷ்டிரா தேர்தலில் பாகிஸ்தான் பிரச்னையை எழுப்புவது முற்றிலும் பொருத்தமற்றது. நான் முதலமைச்சராக வேண்டும் என்று கனவு காணவில்லை. மகாராஷ்டிராவை சுரண்டுபவர்களை தோற்கடிப்பதே தனது முன்னுரிமையாக உள்ளது. துணை முதலமைச்சரான தேவேந்திர பட்நாவிசை முதலமைச்சர் வேட்பாளாராக அமித் ஷா அறிவித்துள்ளார். ஆனால் ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் ஒப்புக்கொள்கிறார்களா? எனவே எங்களது கூட்டணி ஆட்சியமைக்கும்’ என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

எல்.முருகன் சவால்: திமுக அரசு இந்தி பாடமாக உள்ள பள்ளிகளை இழுத்து மூட தயாரா..!?

‘இந்தி வாரம்’ நடத்த கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தியை பாடமாக வைக்க மாட்டோம் என்று கூறி, அப்பள்ளிகளை இழுத்து மூட தயாரா என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சவால் விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு எல்.முருகன் பதிலளித்தார். அப்போது, ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியது, முழுக்க முழுக்க மக்களை திசை திருப்பும் செயல். ‘இந்தி வாரம்’ என்பது மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் வழக்கமாக கடைபிடிக்கப்படுவதுதான்.

மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 10 ஆண்டு காலம் இருந்தபோதும், அதில் திமுக அமைச்சர்கள் இருந்ததுறைகளில் கூட இந்தி வாரம் கடைபிடிக்கப்பட்டது. தமிழை பாதுகாப்பதிலும், உலக அளவில் எடுத்துச் செல்வதிலும் முதன்மையாக பிரதமர் மோடி இருக்கிறார்.

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் குழந்தைகள் செய்தது தவறு. அந்த தவறுக்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டுவிட்டனர். அப்படி இருக்க, அதில் ஆளுநரை சம்பந்தப்படுத்துவது, எந்த விதத்திலும் நியாயம், தர்மம் அல்ல. அவர் ஒரு சிறப்பு அழைப்பாளராக மட்டுமே அந்த விழாவில் கலந்து கொண்டார்.

மேலும், மழை, வெள்ளத்தை சமாளிக்கதிமுக அரசு சரியாக திட்டமிடவில்லை. ஒருநாள் மழையையே சரியாக கையாளவில்லை. இதில் இருந்து மக்களை திசைதிருப்ப, அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக, திமுக – இண்டியா கூட்டணி செயல்படுகிறது. மொழியை வைத்து ஏமாற்ற இது 1967 இல்லை. மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர்.

‘இந்தி வாரம்’ நடத்த கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தியை பாடமாக வைக்க மாட்டோம் என்று கூறி, அப்பள்ளிகளை இழுத்து மூட தயாரா, எனவே மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனிமேல் நடக்காது. திமுக ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட்டு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என எல்.முருகன் தெரிவித்தார்.