பிரியங்கா காந்தி கேள்வி: பாஜகவுக்கு ரூ.4,600 கோடி அபராதம் விதிக்காதது ஏன்..!?

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், காங்கிரசுக்கு ஏன் வருமான வரித்துறை ரூ.3,567 கோடி அபராதம் விதித்தது? காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டு என்ன? 1994-95 மற்றும் 2014-15 முதல் 2016-17ம் ஆண்டுகளில் சில தலைவர்கள், தொண்டர்கள் கட்சிக் கணக்கில் ரொக்கமாக டெபாசிட் செய்துள்ளனர். இதுதொடர்பான தகவல்கள் ஏற்கனவே வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தி விட்டோம். ஆனாலும், இந்த தகவல்களை காங்கிரஸ் தரவில்லை என தன்னிச்சையான குற்றச்சாட்டை அரசு சுமத்துகிறது.

இதற்காக வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியின் கணக்கில் இருந்து ரூ.135 கோடியை எடுத்துக் கொண்டது. அதோடு ரூ.3,567 கோடி அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியது. கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இப்போது இன்னொரு உண்மையை பாருங்கள், தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ள பாஜகவின் அறிக்கைப்படி, 2017-18ம் ஆண்டில் யார், எந்த ஊர் என எந்த தகவலையும் தெரிவிக்காமல் 1,297 பேர் பாஜகவுக்கு ரூ.42 கோடி கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த மர்மமான ரூ.42 கோடி வருமானம் குறித்து வருமான வரித்துறை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் கட்சிகளுக்கான விதிமுறைப்படி, அவற்றை மீறியதற்காக பாஜகவுக்கு ரூ.4,600 கோடி அபராதம் விதித்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. காங்கிரசுக்கு விதிக்கப்படும் விதிமுறைகள், பாஜகவுக்கு மட்டும் பொருந்தாதது ஏன்? நாங்கள் இரட்டை பலத்துடன் போராடுவோம். பாஜகவின் ஜனநாயக விரோத திட்டங்களை நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவித்து உள்ளார்.

மல்லிகார்ச்சுன் கார்கே: “மோடி அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டவே கருப்பு அறிக்கை ..!”

பாஜக தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக பிரதமர் மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கருப்பு அறிக்கையை வெளிட்ட மல்லிகார்ஜுன கார்கே, “இன்று நாங்கள் அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கையை கொண்டு வந்துள்ளோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்தர மோடி பேசும் போது எல்லாம் தனது அரசின் தோல்விகளை மறைக்கிறார். அதேநேரத்தில் நாங்கள் அரசின் தோல்வி குறித்து பேசும் போதெல்லாம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

அதனால் கருப்பு அறிக்கை வெளியிட்டு நரேந்தர மோடி அரசின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துக்கூறுகிறோம். நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவால் 411 எம்எல்ஏகள் வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல காங்கிரஸ் அரசுகளை கவிழ்த்துள்ளனர். அவர்கள் ஜனநாயகத்தை அழிக்கிறார்கள்” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

சிவசேனா உத்தவ் தாக்கரே அணி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்தலா 16 தொகுதிகள் என நாடாளுமன்ற தொகுதி பங்கீடு

மகராஷ்டிராவில் நீண்டகாலமாக பாஜக கூட்டணியில் சிவசேனா கட்சி இருந்தது. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதலமைச்சர் போட்டி காரணமாக சிவசேனாவும், பா.ஜனதா இடையேயான கூட்டணி முறிந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனா, கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாவிகாஸ் என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியது.

ஆனால் சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30-க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க, உத்தவ் தாக்கரே இரண்டரை ஆண்டு ஆட்சி முடிந்த நிலையில் கடந்த ஆண்டு கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் அணி பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. மேலும் சிவசேனா கட்சியும் ஏக்நாத் ஷிண்டே வசம் சென்றது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ‛இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி கேட்ட தொகுதிகளை கொடுக்க காங்கிரஸ் மறுத்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ‛இந்தியா’ கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மகராஷ்டிராவை பொறுத்தமட்டில் ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி இடையே நல்ல நட்பு உள்ளது.

இதனால் அங்கு நாடாளுமன்ற தொகுதி பங்கீடு என்பது பிரச்சனையின்றி முடியும் என கூறப்பட்டது. அதாவது மகாராஷ்டிராவில் மொத்தம் 48 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தலா 16 தொகுதிகளில் களமிறங்கும் என்ற தகவல்கள் வெளியாகின. கடந்த வாரம் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே, எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஏஐசிசி பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்யும் பாஜக அரசுக்கு குழந்தைகளின் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை வாங்க பணமில்லையா…!?

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் “குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் 142 குழந்தைகள் சேர்க்கப்பட்டன. அவர்களில் 42 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் ஆகியவை உள்ளன. இவர்கள் அண்டை மாவட்டங்களான ஹிங்கோலி, பர்பானி, வாஷிம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் 16 பேர் குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த 31 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசை கடுமையாகக் கண்டித்தது மட்டுமின்றி பாஜக அரசு விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழிப்பதாகவும், ஆனால், குழந்தைகளின் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை வாங்க பணம் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற காந்தி சிலை முன்பு பாஜக, எதிர்க்கட்சிகள் கூட்டணி போட்டி போட்டு போராட்டம்!

மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி 26 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்றம் காந்தி சிலை முன்பாக போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தனர். அத்துடன் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை கொடுத்தும் உள்ளனர்.

மணிப்பூர் விவகாரம் குறித்து அண்மையில் பேசியிருந்த பிரதமர் மோடி, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டி இருந்த நிலையில் இன்று காலை திடீரென நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பிக்கள் ஒன்று கூடினர். ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கூறி கண்டன முழக்கங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர். இது தொடர்பான பதாகைகளையும் அவர்கள் ஏந்தி போராட்டம் நடத்தி உள்ளனர்.