தமிழிசை சௌந்திரராஜன்: யார் ஏமாற போகிறார்கள் என்பது அமைச்சரவை மாற்றத்தின் போது தெரியும்..!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், ஏமாற்றம் இருக்காது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், அமைச்சரவை மாற்றம் என்பது உதயநிதிக்கு ஏற்றமாகவும், துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என்று விமர்சித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியானது.

மேலும் கடந்த 17-ந்தேதி தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய தி.மு.க.-வின் மூத்த நிர்வாகியான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிப்பதில் ஏன் தாமதம் என பேசினார்.

இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். GKM காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப் பள்ளியையும் அவர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏமாற்றம் இருக்காது என அவர் பதில் அளித்தார். அப்போது, அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது. நிச்சயமாக மாற்றம் இருக்கும். வெளிநாட்டில் பெறப்பட்ட முதலீடு குறித்து அமைச்சர் டிஆர்பி. ராஜா விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என அனைவருக்கும் தெரியும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த இந்த பேட்டி மூலம் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப்போவது உறுதியாகிவிட்டதாக திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். அதேநேரம் இதுபற்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ” யார் ஏமாற போகிறார்கள் என்பது தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தின் போது தெரியும் என்றார். முதலமைச்சர் கூறிய மாற்றம் துரைமுருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும் என்று தமிழிசை விமர்சித்துள்ளார். திமுகவில் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்ணாமலைக்கு எதிராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை..!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடைபெற்றது. அண்ணாமலை இல்லாமல் ஆலோசனை நடைபெற்ற விவகாரம் தமிழக பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அண்ணாமலை இல்லாமல் கட்சியை வளர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தலைமை பொறுப்பு ஏற்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால், பாஜக தோல்வி சந்தித்தது. இந் நிலையில், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என்று அதிமுக கட்சியில் பரவலாக பேசப்பட நிலையில் அதிமுக – பாஜக இடையே கடும் வார்த்தை போர் மூண்டது.

ஒரு கட்டத்தில் அதிமுக மறைந்த தலைவர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக – பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டார். அதன் பின்னர் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக தனித்தனியே போட்டியிட்டு 40 இடங்களிலும் இரண்டு கட்சிகளும் மண்ணை கவ்வியது.

தொடர்ந்து தமிழக தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்தாலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில அனைத்துக்கட்சிகளையும், தலைவர்களையும் விமர்சித்து வந்தார். இதனால் பாஜக நிர்வாகிகள் இடையே அண்ணாமலைக்கு கெட்ட பெயர் உருவானது.

இந்நிலையில், அண்ணாமலை திடீரென அரசியல் தொடர்பான 3 மாதம் படிப்புக்காக கடந்த ஆகஸ்டு 29-ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். அண்ணாமலை வெளிநாடு சென்றதால், தமிழக பாஜகவுக்கு இடைக்கால தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

ஆனால், தமிழக பாஜகவை வழிநடத்த ஒருங்கிணைப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி.கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர்கள் எம்.முருகானந்தம், ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் 6 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ஆம் தேதி நியமித்தது.

அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ளதை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் பாஜக கட்சியை வளர்க்க டெல்லி தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில வாரங்களாக அடிக்கடி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுவதுடன், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக இரு நாட்களுக்கு முன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு வங்கி கெஸ்ட் ஹவுசில் தமிழக பாஜகவின் 2-ஆம் கட்ட தலைவர்களை அழைத்து பேசினார். இந்த கூட்டத்திற்கு, அண்ணாமலையின் ஆதரவாளரான கரு. நாகராஜன் உள்ளிட்ட தலைவர்களையும், அதேபோன்று முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாளர்களையும் அழைக்கவில்லை.

இந்த கூட்டத்தில் நிர்மலா சீதாராமனின் தீவிர ஆதரவாளரான வானதி சீனிவாசன், மாநில செயலாளர் சூர்யா, கறுப்பு முருகானந்தம், பால்கனகராஜ், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 7 முக்கிய நிர்வாகிகளை தனியாக அழைத்து நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியுள்ளார். அண்ணாமலை நடவடிக்கையால் தமிழக பாஜகவில் எந்த வளர்ச்சியும் இல்லை. 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜக காலூன்ற எந்த மாதிரியான கூட்டணியை ஏற்படுத்த வேண்டும், கட்சி தலைமை இதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து நிர்மலா சீதாராமன் தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின் மூலம் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கி விட்டு, நிர்மலா சீதாராமனின் ஆதரவாளர் ஒருவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலை தமிழகத்தில் இல்லாத நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கடி தமிழகம் வருவது, நிர்வாகிகளை அழைத்து பேசுவது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடுகளுக்கு முன் ‘நோ பார்க்கிங்’ போர்டு வைத்தால் கடும் நடவடிக்கை..!

வீடுகளுக்கு முன் ‘நோ பார்க்கிங்’ போர்டு வைக்கக் கூடாது. அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் தங்களின் வீடுகள் முன்பாக எந்தவொரு அனுமதியும் பெறாமல் ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை வைத்துள்ளனர்.

இதன்மூலம் தங்களது வீடுகளின் முன்பாக உள்ள பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என தடுத்து அவ்வப்போது தகராறு செய்கின்றனர். சில இடங்களில் வீடுகளின் முன்பாக ‘நோ பார்க்கிங்’ அறிவிப்பு பலகையுடன் பூந்தொட்டிகளை வைத்தும், மண் பைகளை வைத்தும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்கின்றனர். சென்னையில் வாகனங்களை நிறுத்த முறையான வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததால், வாகன ஓட்டிகள் வேறு வழியின்றி தங்களது வாகனங்களை நெரிசல் மிகுந்த பகுதிகளில் நிறுத்திச் செல்ல நேரிடுகிறது.

எனவே, வீடுகளின் முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ பார்க்கிங்’ என்ற அறிவிப்பு பலகைகளையும், பூந்தொட்டிகளையும் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்,” என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்னையில் ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், “முன் அனுமதியின்றி, ‘நோ பார்க்கிங்’ பலகைகள், தடுப்புகள் அல்லது இதுபோன்ற தடைகளை பொதுச் சாலைகளில் வைக்க எந்தவொரு தனிநபருக்கோ, குடியிருப்பு சங்கங்களுக்கோ அல்லது வணிக நிறுவனங்களுக்கோ அனுமதி இல்லை. சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தனியார் வாகன நிறுத்தம் அல்லது பிற நோக்கங்களுக்காக அனுமதியின்றி ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது.

எனவே, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொதுச் சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அங்கீகரிக்கப்படாத இடங்களில் ‘நோ பார்க்கிங்’ பலகைகள், தடுப்புகள் மற்றும் பிற இடையூறுகளை வைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். வாகன நிறுத்தம் தொடர்பான பலகைகளை வைப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதிகளைப் பெற வேண்டும்,” என குறிப்பிட்டுள்ளனர்.

ஜெயக்குமார் கேள்வி: சீனியர்கள் பலர் இருந்தும் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி ஏன் ..!?

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும்போது அரசு வேடிக்கை பார்க்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். திமுக அரசுக்கு அதுபற்றி கவலையில்லை.

திமுக சங்கரமடம் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறினார். திமுகவில் கடுமையாக உழைத்தவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி இல்லையா? மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக உதயநிதி துணை முதலமைச்சர் என கொஞ்சம் கொஞ்சமாக கருத்தை விதைத்தனர்.

திமுகவில் சீனியர்கள் பலர் இருக்கும்போது உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க முயற்சி நடப்பது ஏன்? துணை முதலமைச்சராக உதயநிதியை தவிர திமுகவில் வேறு எவருக்கும் தகுதி இல்லையா? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

திமுக வார்டு செயலாளர் மீது காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரில் சமரசம்..!

கோயம்புத்தூர் நகராட்சியில் திமுகவின் 40 -வது வார்டு செயலாளராக கதிரேசன் உள்ளார். இவரின் வீட்டில் சமையல் வேலை பார்த்து வந்த பெண் சுதா. கடந்த வாரம் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.

அந்த புகார் மனுவில், கோயம்புத்தூர் நகராட்சியில் திமுகவின் 40 -வது வார்டு செயலாளராக கதிரேசன் வீட்டில் சமையல் வேலை பார்த்து வந்ததாகயும் தன்னை திமுக வார்டு செயலாளர் கதிரேசன் அடித்து தொந்தரவு செய்ததால் இனி சமையல் வேலை செய்ய வரமாட்டேன் என தெரிவித்து எனது சம்பளம் பாக்கியை தாருங்கள் என்று அவரிடம் கேட்டேன். ஆனால் அவரோ கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார் . அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகாரில் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் வடவள்ளி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காவல் நிலையம் சென்ற சுதா தான், கதிரேசன் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக் கொள்ளுவதாகவும். இனி எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, சமரசம் ஆகி விட்டோம்.

அவர் மாத சம்பள பாக்கி கொடுத்து விட்டார், இனி நான் கொடுத்த புகாரில் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று கூறி மேலும் அதற்கான தகவல்களை தெரிவித்து கடிதத்தை காவல் நிலைய ஆய்வாளரிடம் கொடுத்துள்ளார்.

இது பற்றி சுதா கூறுகையில், நான் கடந்த ஆறு வருடமாக திமுக 40 வது வார்டு செயலாளர் கதிரேசன் வீட்டில் சமையல் வேலை பார்த்து வந்தேன். இந்நிலையில் கடந்த 02.09.2024 கதிரேசனின் செல்போன் எண்ணிற்கு என்ன சமைக்க வேண்டும் மென்று வாட்சாப்பில் குறுந்தகவல் அனுப்பினேன். அதை அவரது மனைவி நித்யா பார்த்து என்னை கேவலமாக வாய் கூசும்படி வார்த்தைகளை பேசினார்.

இதனால் நான் மிகுந்த மன உளைச்சல் ஆனேன். இதை எனது கணவரிடம் சொன்னேன் அவரும் அங்கு வேலைக்கு போக வேண்டாம். சம்பள பாக்கியை வாங்கி விட்டு இனி வீட்டு வேலைக்கு செல்ல கூடாது என்றார். இதை கேள்வி பட்ட என் உறவினர்கள்,பழக்கமானவர்கள் என்னை தூண்டிவிட்டு வடவள்ளி காவல் நிலையத்திலும், காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் கொடுக்க வைத்து விட்டனர்.

ஆனால் வீட்டு வேலை செய்த பாக்கி சம்பள பணத்தை கொடுத்து, அவரது குடும்பத்தினர் உன்னை எங்க வீட்டு பிள்ளையாக கருதி இருந்தோம் என்றனர். நானும் எனது கணவரும் இனி நமக்கு மனசங்கடங்கள் வேண்டாம் சமரசம் செய்து கொள்ளுவோம் என்றோம். இதை இரண்டு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டனர், அதன் படி நான் காவல்நிலையத்தில் திமுக வார்டு செயலாளர் கதிரேசன் மீது கொடுத்த சம்பளம் பாக்கி புகாரை திரும்ப பெற்றுக் கொள்ளுகிறேன். அதில் எந்த சட்ட நடவடிக்கையும் வேண்டாம் என தெரிவித்து அதற்கான காரணத்தை எழுதி கொடுத்தேன் என தெரிவித்தார்.

உதயநிதி, துர்கா ஸ்டாலினுக்கு ஏமாற்றம் இருக்காது..! மக்களுக்கு திமுக ஆட்சியே ஏமாற்றம்தான்…!

“உதயநிதி, துர்கா ஸ்டாலினுக்கு ஏமாற்றம் இருக்காது; ஆனால் மக்களுக்கு திமுக ஆட்சியே ஏமாற்றம்தான் என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை கொளத்தூரில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜிகேஎம் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளியையும் அவர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏமாற்றம் இருக்காது என அவர் பதில் அளித்தார். அப்போது, அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது. நிச்சயமாக மாற்றம் இருக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

‘மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது’ என முதல்வர் பேட்டியளித்திருந்த நிலையில், “உதயநிதி, துர்கா ஸ்டாலினுக்கு ஏமாற்றம் இருக்காது; ஆனால் மக்களுக்கு திமுக ஆட்சியே ஏமாற்றம்தான். திமுக-வே மக்களை ஏமாத்தி ஆட்சிக்கு வந்தாங்க; இன்னைக்கும் கட்சித் தொண்டர்களை ஏமாத்திதானே கட்சியையும், ஆட்சியையும் நடத்திட்டு இருக்காங்க” என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் குறித்து மு.க.ஸ்டாலின்..! நிச்சயமாக மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது…!

கடந்த சில மாதங்களாக தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியானது.

மேலும் கடந்த 17-ந்தேதி தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய தி.மு.க.-வின் மூத்த நிர்வாகியான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிப்பதில் ஏன் தாமதம் என பேசினார்.

இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜிகேஎம் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளியையும் அவர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏமாற்றம் இருக்காது என அவர் பதில் அளித்தார். அப்போது, அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது. நிச்சயமாக மாற்றம் இருக்கும். வெளிநாட்டில் பெறப்பட்ட முதலீடு குறித்து அமைச்சர் டிஆர்பி. ராஜா விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என அனைவருக்கும் தெரியும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் மு.அருணா பெயரில் போலி முகநூல் கணக்கு..!

இன்றைய நவீல உலகில் இணையதள பயன்பாடு அதிகரித்த நிலையில், சமூகவலைத்தளங்களை பார்வையிடுதல், அதில் பதிவேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பலரும் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளத்தை பயன்படுத்தி ஆங்காங்கே ஆன்லைன் மோசடியும் அரங்கேறி வருகிறது.

இந்த சூழலில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருந்தது. அந்த முகநூல் பக்கத்தில் இருந்த தகவல்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் காணப்பட்டதால் பலரும் சந்தேகமடைந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா இதுபற்றி சைபர் கிரைமுக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து சைபர் கிரைம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணாவின் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கியது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த போலி முகநூல் கணக்கு முடக்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் உலாவரும் இதுபோன்ற மோசடிகளை தடுக்க சைபர் கிரைம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் சிலரது பெயரில் போலி கணக்குகளை தொடங்கி அதன் மூலம் தற்போது பண மோசடி நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இதனால் போலி கணக்குகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் அறிவுறுத்தி வருகின்றனர்.

உங்கள் நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்கை தொடங்கி உங்களின் தனிப்பட்ட தகவலை பெறுவதற்கும் அல்லது அவசர நிலையை காரணம் காட்டி பணம் கேட்கவும் நட்பு கோரிக்கை விடுப்பார்கள். இதனால் பொதுமக்கள் உஷாராக இருந்து செயல்பட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைமில் 1930 என்ற உதவிமைய தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் https://cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து ரூ.1.4 லட்சம் பறித்தவர் கைது..!

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றி உல்லாசமாக இருந்துவிட்டு, ரூ.1.40 லட்சத்தை பறித்து ஏமாற்றிய வாலிபரை தனிப்படை காவல்துறை கைது செய்தனர்.

சென்னை, பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, அதே பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் பேஸ்புக் மூலமாக அறிமுகமான காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த நரேந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, நரேந்திரன் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் இருந்து ரூ.1.40 லட்சம் வாங்கியதோடு, செலவுக்கும் அடிக்கடி பணம் வாங்கியுள்ளார்.

இதுமட்டுமின்றி நரேந்திரன் தனியார் விடுதிகளில் அறை எடுத்து தங்கி ஆசை வார்த்தைகூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பின்பு திருமணம் செய்துகொள்ள மறுத்து நரேந்திரன் பிரச்னை செய்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நரேந்திரனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை அவரது ஊரில் வைத்து தனிப்படை காவல்துறை நரேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு..! அதிமுக, பாமக எம்எல்ஏ.க்களுடன் மனு..!

புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், அதிமுக, பாமக எம்எல்ஏ.க்களுடன் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தருமபுரி ஒன்றியம் நாயக்கனஅள்ளி மற்றும் குப்பூர் ஊராட்சி களைச் சேர்ந்த மக்கள், தருமபுரி பாமக எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், ஏழை, எளிய தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள் உள்ளிட் டோர் எங்கள் பகுதி ஊராட்சிகளில் அதிகம் வசிக்கின்றனர்.

தினமும் கிடைக்கும் வருமானத்தின் மூலமே இந்த குடும்பங்கள் வாழ்கின்றன. இந்தச்சூழலில், குப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தன் கொட்டாய் கிராமத்தில் ஓராண்டுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண் டனர். அதற்கு கிராம மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், கடத்தூர் பகுதியில் இயங்கும் கடைக்கு அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தக் கடையை சித்தன் கொட்டாய் பகுதிக்கு இடம் மாற்ற தற்போது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பல குடும்பங்களின் வாழ்வு சீரழியும். எனவே, குப்பூர் பகுதியில் டாஸ்மாக்கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.