தொல் திருமாவளவன்: எல். முருகன் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது இல்லை…!

எல்.முருகன் அருந்ததியரின் இடஒதுக்கீட்டுக்காக எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கெடுத்ததில்லை, ஒருபோதும் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது இல்லை தொல் திருமாவளவன் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சென்னையில் தொல் திருமாவளவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விசிக, அங்குள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அருந்ததியர் என்பதே, RSS அமைப்பு சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்துக்கே தெரியும். அவர் ஒரு RSS காரர். படித்த காலத்தில் இருந்தே RSS தொண்டனாகத்தான் வளர்ந்தார். அரசியலில் RSS அமைப்பை சேர்ந்தவராகவேதான் ஈடுபட்டார். அவர் ஒருபோதும் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது இல்லை.

அருந்ததியரின் இடஒதுக்கீட்டுக்காக எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கெடுத்ததில்லை. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அருந்ததியர்களுக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் விசிக தொடக்க காலத்தில் இருந்தே அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. விசிக ஆதரித்துதான் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடே கிடைத்தது.

உச்ச நீதிமன்றத்தில் விசிக தொடுத்த வழக்கு அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து அல்ல. அவர்களுக்கு எதிரானதும் அல்ல. ஆனால் விசிகவில் அருந்ததியர்கள் அதிகம் உள்ளனர் என்பதால், பொறாமை கொண்டு அவர்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ் செய்கிற சதித்திட்டம் இது. மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி அவதூறு பரப்புவது என்பது அநாகரிகமான அரசியலாகும் என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

அஸ்வத்தாமன்: எல்.முருகன் சட்டம் பயின்றவர்..! திருமாவளவன் மதமாற்றம் குறித்த செய்கையில் முனைவர் பட்டம் பெற்றவர்..!

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு, பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் நேற்று வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ‘அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகம் தற்போது திராவிட கழகமாக மாறி வருவதாகவும், மக்களின் அன்றாட பிரச்னைகளை கவனிக்காமல் தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்து அரசியல் செய்கிறது.

மேலும், திருமாவளவனோடு மத்திய அமைச்சர் எல்.முருகனை ஒருபோதும் ஒப்பிட முடியாது. அவர் சட்டம் பயின்றவர். ஆனால், திருமாவளவனோ மதமாற்றம் குறித்த செய்கையில் முனைவர் பட்டம் பெற்றார் என அஸ்வத்தாமன் தெரிவித்தார்.

பிரேமலதா விஜயகாந்த்: காவலரின் மரணம் குறித்து விரிவான விசாரணை..! குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை..!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சுப்புலாபுரத்தைச் சேர்ந்த செல்வமுருகன் சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வருகிறார். சென்னை எழும்பூர் புதுபேட்டை காவலர் குடியிருப்பில் நான்கு வருடங்களாக திறக்கப்படாமல் உள்ள புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புக்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணியில் ஆயுதப்படை காவலர் செல்வமுருகன், கமலக்கண்ணன் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது குடியிருப்பின் 14-வது மாடிக்கு தண்ணீர் தொட்டிக்கு செல்லும் வால்வை முடுவதற்காக சென்ற செல்வ முருகன் தவறுதலாக கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் கால் தவறி விழுந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது மரணம் மர்மமான முறையில் ஏற்பட்டதாகவும், அதுகுறித்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் செல்வ முருகன், மர்மமான முறையில் 14-வது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் உண்மை நிலையைக் கண்டறிந்து. மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். மேலும் அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணத் தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி அவரின் குடும்பத்தை அரசு காப்பாற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

போதை ஜோடியின் அத்துமீறல்: ஒரு பொம்பள இன்ஸ்பெக்டர் எப்படி வணக்கம் போடுவா தெரியுமா..? மூஞ்ச பாரு வையாபுரி மூஞ்சி..!

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் காவல்துறை நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்துள்ளனர். இதைப்பார்த்த காவல்துறை, காரை எடுக்கும்படி காருக்குள் இருந்த இருவரிடமும் சொன்னதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அதில், ‘நீங்கள் யார்?’ என்று அந்த ஆண் – பெண்ணிடம் காவல்துறை கேட்டதும், ஒரு பொம்பள இன்ஸ்பெக்டர் எப்படி வணக்கம் போடுவா தெரியுமா..? மூஞ்ச பாரு வையாபுரி மூஞ்சி என இருவரும் போஸ் கொடுத்து கிண்டல் செய்தனர். மேலும் அந்த ஆண், “நான் உதயநிதி ஸ்டாலினை இங்கேயே கூப்பிடுவேன் பார்க்கிறாயா?” என காவல்துறையினரை மிரட்டும் தொணியில் பேசி கேலியும் கிண்டலும் செய்துள்ளார். தொடர்ந்து “உன்னால் முடிந்ததை பாரு” என மிரட்டல் விடுத்த அந்த நபர், “நான் குடித்துதான் இருக்கிறேன்.

என்னால் வண்டியை எடுக்க முடியாது. நாளைக்கு காலையில டிபன் சாப்பிட மாட்ட, நாளை காலை உங்க முகவரி எல்லாத்தையும் எடுத்து உங்களை காலி செய்து விடுவேன்” எனக்கூறியதோடு காரை வட்டமிட்டபடி எடுத்துச் சென்றார். இந்த ரோந்து காவல்துறையினரை மிக இழிவாக பேசிய அந்த இருவரும், அநாகரீகமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை காவல்துறையினர் வீடியோ பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், காரில் இருந்த இருவரும் கணவன் மனைவி இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஏ.சி வேலை செய்யவில்லை என அபாய சங்கிலியை இழுத்த பயணிகள்..!

ரயிலில் ஏ.சி வேலை செய்யாததால் பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம் செய்தனர்.

இன்றைய காலகட்டத்தில் மனிதன் போக்குவரத்து விஷயத்தில் பேருந்து, கார், பயணங்களை விட ரயில் பயணம் மிகவும் பாதுகாப்பானது மற்றும் சௌகரியமானதும் ஆகும். சுற்றுலாவாகவோ, ஆன்மீக யாத்திரையாகவோ, பணி நிமித்தமாகவோ, எதுவாக இருப்பினும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பாக பயணம் செய்ய தேர்ந்து எடுக்கும் ஒன்று ரயில் பயமமாகும்.

ரயிலில் ஏறியதும், இருக்கையை தேடி அமர்ந்து, உடைமைகளை பத்திரப்படுத்தி வைத்து விட்டு நம் இருக்கைக்கு எதிரில், அருகில் உள்ள முன் பின் தெரியாத சக பயணிகளுடன் மெல்ல பேச ஆரம்பித்து, அவர்களிடம் சினேகம் கொள்வதில் அலாதி சுகம் உள்ளது. ஆனால், இப்படி பயணம் செய்யும் ரயில் பயணத்தின் இடையே ஒரு சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.

அதில் ஒன்றுதான், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் புறப்பட்ட ‘சேரன் எக்ஸ்பிரஸ்’ ரயிலில் ஏ.சி வேலை செய்யாததால் பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதனால், ரயில்வே அதிகாரிகளுக்கும், ரயில் பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தனை தொடர்ந்து ஏ.சி உடனடியாக பழுது சரி செய்யப்பட்டது. இதன் காரணமாக இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 10.55-க்கு புறப்பட்டுச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொண்டர்கள் மத்தியில் கூட்டணி சரியில்லை என எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆவேசம்

கூட்டணி சரியில்லை என அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசம் பேசினார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட தாந்தோணி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் செல்லாண்டிப்பட்டி தனியார் மஹாலில் இன்றுநடைபெற்றது.

அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ம.சின்னசாமி, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் ஆலோசனை வழங்கி பேசியபோது, ”கிருஷ்ணராயபுரம் தொகுதி 1989-ஆம் ஆண்டு சேவல் சின்னம் வென்ற 27 தொகுதிகளில் ஒன்றாகும். கேட்காமலே கொடுத்த தலைவர் MGR சத்துணவு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார்.

MGRக்குப் பிறகு ஜெயலலிதா பல்வேறு மாற்றங்களை தமிழகத்தில் உருவாக்கினார். 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலையை போட்டியிட வைத்தார். 1989, 91ஆம் ஆண்டுகளில் அதிமுக இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. 1991ஆம் ஆண்டு திமுக இரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மாற்றங்கள் உருவாகும்.

நாம் அதற்கான பணிகளை சிறந்த முறையில் அமைத்திட வேண்டும். விரைவில் அதிமுக ஆட்சி மலரும். அதற்கான காலமாற்றம் உருவாகிறது. 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும் 75 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளோம். எத்தனையோ திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி மலரவேண்டும் என ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது, ”கரூரில் அதிமுக மனித சங்கிலி போராட்டத்திற்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை. நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று அக்டோபர் 28 ல் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. அதிமுகவினரை மிரட்டி திமுகவில் சேர்த்து வருகின்றனர். கட்சியினரை ஜாமீனில் வெளியே எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தாந்தோணி ஒன்றியத்தில் 16,800 உறுப்பினர் படிவங்கள் உள்ளன. தாந்தோணி ஒன்றியத்தில் 12 ஆண்டுகள் செயலாளராக இருந்துள்ளேன். 303 கிளைகள் இருந்தன. தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டோம் என்பது உறுப்பினர் அட்டைகள் வழங்குவதிலே தொடங்கிவிட்டது.

கூட்டணி சரியில்லை. தலைவர்கள் விரைவில் நல்ல கூட்டணியை அமைப்பார்கள். திமுக கூட்டணி விரைவில் உடையும். 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமையும்” என எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியது வேதனை அளிக்கிறது..!

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிகல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 34 ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 22 ஆசிரியர்கள் என 54 ஆசிரியர்கள் அக்டோபர் 23-ஆம் தேதி காலை சென்னையிலிருந்து புறப்பட்டு ஃபிரான்ஸ் செல்கின்றனர். அக்டோபர்28-ஆம் தேதி வரை ஃபிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்தார்.

அப்போது, கனவு ஆசிரியர் திட்டத்தில் தேர்வான ஆசிரியர்களை பாரீஸ்க்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம். ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் முதன்முறையாக வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம்.

பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட குறைபாடுகளை கண்டறிந்து அதனை சரி செய்யும் வகையில் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அதேபோல பள்ளிக்கு வர இயலாத மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளிட்டோரையும் கண்டறிந்து அவர்களுக்கும் முறையாக கல்வி வழங்கப்படுகிறது.

மேலும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,  தமிழ்நாட்டு அரசியலே கல்வியில்தான் இருக்கிறது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் நீதிக்கட்சி தொடங்கப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியிருப்பது வேதனையாக இருக்கிறது என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

வங்கியில் வாடிக்கையாளர்களின் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகைகள் வைத்து மோசடி..!

வங்கியில் நகை அடகு வைப்பதுதான் பாதுகாப்பு என அவசர தேவைகளுக்காக மக்கள் வங்கிகளை நாடும் நிலையில் அங்கேயே மோசடிகள் ஆங்காங்கே அரங்கேறுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அதன் வரிசையில், வாடிக்கையாளர்களின் 533 சவரன் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்த வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் ICICI வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையில், மண்டல மேலாளர் கிருஷ்ணகுமுமார் தலைமையிலான குழுவினர் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அந்த வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது, அவை தங்க நகைதானா என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, முறைப்படி பரிசோதனை செய்ததில் அந்த நகைகள் அத்தனையும் கவரிங் என தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த தங்க நகைகளுக்குப் பதிலாக கவரிங் நகைகளை வங்கியில் வைத்துவிட்டு ஒரிஜினல் நகைகளை வங்கி மேலாளர் உள்ளிட்டோர் பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தனை தொடர்ந்து, விசாரணையில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 533 சவரன் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக மண்டல மேலாளர் சிவகங்கை மாவட்ட காவல்த நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறை, கல்லல் வங்கி கிளை மேலாளர் விக்னேஷ், உதவி மேலாளர் ராஜாத்தி, மோசடிக்கு உடந்தையாக இருந்த ரமேஷ், சதீஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி சம்பவத்தால் அந்த வங்கியில் நகை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் கொந்தளித்துள்ளனர்.

ANS.பிரசாத்: முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்லது கேட்டது கற்றுத் தர வேண்டும்..!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலை கற்றுத் தர வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ANS.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ANS. பிரசாத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி , தரங்கெட்ட முறையில் கண்ணிய குறைவாக விமர்சித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலை கற்றுத் தர வேண்டும்.

கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து உதயநிதி ஸ்டாலின் கண்ணியமற்ற முறையில் பேசியதற்கு நடவடிக்கை எடுக்காததன் விளைவு இன்று தமிழகத்தில் மோசமான தனிநபர் தாக்குதலுக்கும், வெறுப்பு அரசியலுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கள் கண்ணியற்றதாக உள்ளன. எனவே உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி கூறிய கருத்துக்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பொது மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் அருவருக்கத் தக்க தனிநபர் தாக்குதல் மறைந்து, கண்ணியமான அரசியல் சூழ்நிலைக்கு வித்திட வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு மாநிலத்தின் முதல் மகனாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வழிநடத்தக்கூடிய தலைமகனாக விளங்கக்கூடிய ஆளுநர் பொறுப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரும்ப பெற வேண்டும். ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எவ்வளவு திமிர்? எவ்வளவு கொழுப்பு? ஆளுநர் யார் மக்களின் பிரதிநிதியா? ஆளுநர் ஒரு போஸ்ட்மேன், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் சமீபத்திய பேச்சை குறிப்பிட்டு, ஆளுநர் தன்னுடைய சித்தாந்தங்களை சொன்னால் தமிழக மக்கள் ஆளுநர் ஆர்.என். ரவியை செருப்பால் அடிப்பார்கள்.

அவர் பெயர் ஆர்.என். ரவி அல்ல. ஆர்எஸ்.எஸ்.ரவி என்று தனிப்பட்ட முறையில் தமிழகத்தின் இளம் தலைவர், மரியாதைக்குரிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுபோன்று கடமை,கண்ணியம் கட்டுப்பாடு, என அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு பொறுப்பற்ற முறையில் பேசுவது நியாயமா?

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்திற்கு எதிராக கண்ணியமற்ற கருத்துக்கள், பிரதமர் மோடிக்கு எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளில் நாகரீகமற்ற விமர்சனங்கள், இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் வகையில், தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிராக மக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலான பேச்சுக்கள் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்களிடையே மதவாதத்தை தூண்டும் வகையிலான பேச்சுக்கள் என பேசி வருகிறார்.

ஆபத்தான, சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய அவரது பேச்சுக்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரிய முறையில் விசாரணை செய்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று, தானே நேரடியாக களத்தில் இறங்கி மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தனிப்பட்ட முறையில் சென்று மக்களுக்கான பிரச்சினைகளை தீர்த்து, தமிழக இளைஞர்களுக்கும் தமிழக அரசுத் துறையை அதிகாரிகளுக்கும் முன்மாதிரியாக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

அதேபோன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, உரிய முறையில் கட்சியிலும் ஆட்சியிலும் அரசியலிலும் சிறப்பாக செயல்பட நேர்மறை அரசியலை கற்றுக் கொடுத்து முன்மாதிரியான தலைவராக, தந்தையாக முதல்வராக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சீமான்: நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது..!

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது என சீமான் பேசினார்.

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி துவங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில், “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு பாடப்பட்டது. இதேபோல், நிகழ்ச்சியின் இறுதியில் பாடப்பட்ட தேசிய கீத பாடலில் திராவிடம் சொல் தவிர்க்கப்பட்டது. இதனால், பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்த விவகாரத்திற்கும் தமிழக ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. இதனிடையே, நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாக டிடி தமிழ் தொலைக்காட்சி கூறியது. இருப்பினும், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக ஈரோட்டில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘திராவிடல் நல் திருநாடு’ என்கிற வார்த்தையை விட்டுவிட்டார்கள் அல்லது தூக்கி விட்டார்கள் என்பது தானே உங்களுக்கு பிரச்சினை. அதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஆரியங்கோல் வழக்கொழிந்து என்ற வார்த்தையை தூக்கியது யார்?. கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட வார்த்தைகள் அடங்கிய அந்த வரியை தூக்கியது யார்?. திராவிடன் என்ற ஒரு சொல்லை எடுத்ததற்கே இப்படி குதிக்கிறீர்கள்.

50 ஆயிரம் ஆண்டுகளுன் முன் தோன்றிய என் தாய்மொழி தமிழை கொன்று சமாதி கட்டி வைத்திருக்கிறீர்கள். கொத்துக்கொத்தாக, லட்சக்கணக்கான என் இன மக்கள் சாவும் போது கொதித்து வராத கோவம், ஆந்திர காடுகளில் எங்களை சுட்டுக்கொல்லும் போது வராத கோபம், அன்னை தமிழ் மொழி செத்துவிழும் போது வராத கோபம், இப்போது ஏன் வருகிறது ?இதே ஆளுநர் 100 ரூபாய் வெளியிடும் போது கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டீர்கள்.

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது. அப்போது என்ன செய்வீர்கள். இது எங்கள் நாடு. எங்கே இருக்கிறது திராவிடம்?. எங்கிருந்து வந்தது திராவிடம் என்ற சொல்?. திராவிடம் என்றால் என்ன? கேரளாவில் பஞ்ச திராவிடர் மாநாடு நடந்ததா இல்லையா?. அதில் ஏன் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பங்கேற்க வேண்டும். அவர் ஏன் ராகுல் டிராவிட் என அழைக்கப்படுகிறார். நான் எப்படி திராவிடர் ஆனேன். திராவிடம் என்பது சமஸ்கிருதம் சொல். மாடல் என்பது ஆங்கில சொல்.” என சீமான் தெரிவித்தார்.