அமலாக்கத் துறை அறிவுரை: ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ விவகாரத்தில் ஏமாற வேண்டாம்..!

செல்போன், சமூக வலைதளங்களில் யாரிடமும் ஏமாறக் கூடாது, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ விவகாரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமலாக்கத் துறை அறிவுறுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 65,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சுமார் ரூ.4.69 லட்சம் கோடிக்கும் அதிகமாக மோசடி நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறிகையில், குஜராத்தின் வடோதராவில் அண்மையில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பலை பிடித்தோம். அப்போது தைவான் நாட்டை சேர்ந்த 4 பேர் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். வடோதராவின் பிரபல வணிக வளாகத்தில் சிறிய அறையை வாடகைக்கு எடுத்து ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.

அங்கு அதிநவீன செல்போன்களில் சுமார் 20 பேர் நாள்தோறும் பொதுமக்களை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து பணம் பறிந்து வந்துள்ளனர். இதேபோல டெல்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல்கள் செயல்பட்டு உள்ளன. வடோதரா கும்பலிடம் இருந்து 761 சிம் கார்டுகள், 120 செல்போன்கள், 96 காசோலை புத்தகங்கள், 92 டெபிட் கார்டுகள், 42 வங்கி கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.

பெரும்பாலும் தைவான், சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கும்பல்கள் இந்தியாவில் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா மட்டுமன்றி தெற்கு ஆசியா முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு மையத்தில் இருந்து நாள்தோறும் ரூ.10 கோடி வரை மோசடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் நாள்தோறும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன், சமூக வலைதளங்களில் யாரிடமும் ஏமாறக்கூடாது. எந்தவொரு அரசு அமைப்பும் செல்போனில் தொடர்பு கொண்டு பொதுமக்களுக்கு மிரட்டல் விடுக்காது. காணொலி வாயிலாகவும் விசாரணை நடத்தப்படாது. இதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சட்ட விதிகளின்படி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்பதே கிடையாது என அமலாக்கத் துறை தெரிவித்து உள்ளது.

அதானி பவர் நிறுவனம் அதிரடி: பாக்கி பணம் கொடுக்கலனா இனி மின் விநியோகம் நிறுத்தப்படும்..!

பாக்கி பணம் கொடுக்கலனா இனி மின் விநியோகம் நிறுத்தப்படும் என வங்கதேசத்திடம் அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்துக்கு மின்சார விநியோகம் செய்வதில் பைரா நிறுவனம் 1,244 மெகாவாட், ராம்பால் நிறுவனம் 1,234 மெகாவாட், எஸ்எஸ் பவர் நிறுவனம் 1,224 மெகாவாட் என மின் விநியோகம் செய்து வரும் நிலையில் அதானி பவர் நிறுவனமும் 724 மெகாவாட் மின் விநியோகம் செய்து வருகின்றது.

இந்நிலையில், டாலருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வங்கதேசத்தால் உரிய காலத்தில் அதானி நிறுவனத்துக்கு மின்சார விநியோகத்துக்கான பாக்கியை செலுத்த முடியாமல் திணறி வருகிறது. வங்கதேச மின்சார மேம்பாட்டு வாரியம் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கும், சுமார் ரூ.1,500 கோடி கடன் கடிதத்தை வழங்குவதற்கும் அக்டோபர் 31 வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. கிரிஷி வங்கி மூலமாக கடன் கடிதத்தை வழங்க பிபிடிபி முற்பட்டாலும், அது மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், டாலர் தட்டுப்பாடும் அதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

நிலுவை காரணமாக, வங்கதேசத்துக்கான மின்சார விநியோகம் ஏற்கெனவே குறைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், நவம்பர் 7-ஆம் தேதிக்குள் நிலுவை தொகையான சுமார் ரூ.7,200 கோடி செலுத்தவில்லை எனில் மின்சாரம் விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்படும் என்று வங்கதேசத்திடம் அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாய்களுக்கு பிஸ்கெட் போட்டு லஷ்கர்-இ-தொய்பா தளபதி வீழ்த்திய பாதுகாப்பு படையினர்..!

வடிவேல் காமெடி பாணியில் நாய்களுக்கு பிஸ்கெட்டு போட்டு குரைக்கவிடாமல் தடுத்து லஷ்கர்-இ-தொய்பா தளபதி உஸ்மானை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இதுகுறித்து பாதுகாப்பு படை உயரதிகாரிகள் கூறிகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியான உஸ்மான் ஸ்ரீநகரில் உள்ள கன்யார் பகுதியில் பதுங்கியிருப்பதாக ரகசியமான உளவுத் தகவல் கிடைத்தது.

அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மக்கள் மிக நெருக்கமாக வசிக்கும் பகுதியாகும். இதனால், அங்கு தேடுதல் வேட்டை மேற்கொள்வது மிகவும் கடினமான பணியாக இருந்தது. சேதத்தை குறைத்து அதேநேரம் வெற்றியினை பதிவு செய்வதற்கு துல்லியமான ஒன்பது மணி நேரம் திட்டமிடல் அவசியமாக இருந்தது.

இருப்பினும், அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள தெரு நாய்கள்தான் இந்த தேடுதல் நடவடிக்கைக்கு பெரும் சவாலாக விளங்கியது. ஏனெனில் அசாதாரணமான ஆள்நடமாட்டத்தை கண்டு நாய்கள் குரைத்தால் அதனால் தீவிரவாதிகள் உஷாராகி எளிதாக தப்பிச் செல்வதற்கு வழிவகுத்துவிடும். எனவே. இந்த சிக்கலை எதிர்கொள்ள நாய்கள் உள்ள பகுதியை நெருங்கும்போது அவற்றை சமாதானப்படுத்த தேடுதல் குழுவினர் கையில் பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் சென்றனர்.

நாய்களை பார்க்கும்போது பிஸ்கெட்டுகளை வீசி அவற்றை குரைக்க விடாமல் தடுத்தனர். சுமார் 30 நிமிடங்கள் உஸ்மான் வீட்டை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் மீது ஏகே-47, கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

M. ஆர்த்தி IAS உத்தரவு: அனைத்து பள்ளிகளிலும் 7-ஆம் தேதி முதல் பள்ளிகளில் கலை திருவிழா..!

அனைத்து பள்ளிகளிலும் 7-ஆம் தேதி கலைத் திருவிழாவை முதற்கட்டமாக வட்டார அளவிலான போட்டிகளை நடத்த வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் M. ஆர்த்தி IAS வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கான குறுவள மற்றும் 1 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி வட்டார அளவில் 7-ஆம் தேதி போட்டிகள் நடத்தி 8-ஆம் தேதிக்குள் வெற்றிபெற்ற மாணவர்கள் தொடர்பான விவரங்களை 8-ஆம் தேதிக்குள் EMIS(Educational Management Information System)-ல் உள்ளீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 11-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை மாவட்ட அளிவிலான போட்டிகள் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெறும் மாணவர்களின் விவரங்கள் 21-ஆம் தேதி உள்ளீடு செய்ய வேண்டும். அதன் தொடர்ச்சியாக 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவர்களைக் கொண்டு மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்த வேண்டும்.

குறிப்பாக அரசுப் பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் நடத்த வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகள் நடக்கும் இடங்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவை நடத்துவதற்கு 10 அமைப்புக் குழுக்களை தனித் தனியே அமைத்தல் வேண்டும். போட்டி நடக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் முதன்மை அமைப்பாளராக செயல்படுவார். உதவி அமைப்பாளராக மேலும் ஒரு தலைமை ஆசிரியர் செயல்படுவார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி 1, பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதி 2, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர் 2 பேர் இந்த குழுவில் இடம் பெற வேண்டும். மாவட்ட அளவிலான ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடிக்கும் வெற்றியாளர் மட்டுமே மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மாவட்ட அளவிலான போட்டிகளுக்கான வெற்றியாளர்களின் தகவல்கள் EMIS-ல் உள்ளீடு செய்ய வேண்டும்.

வட்டார அளவில் நடந்த போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ரூ.25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கப்படும். இந்த நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவை நடத்த வேண்டும் என ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன் எந்த அனுபவத்தில் ஒரு தேர்தலை கூட சந்திக்காத விஜய் குறை சொல்கிறார்..!

மதுரையில் பாஜக மாவட்ட தேர்தல் குழு பயிலரங்கம் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அதன்பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, ஒரே நாடு, ஒரே தேர்தலை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஒரு தேர்தலையும் சந்திக்காத நடிகர் விஜய் எந்த அனுபவத்தின் அடிப்படையில் இதனை கூறுகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகளும், அரசும் பல கோடி ரூபாய் செலவு செய்கின்றனர். இதனை குறைக்க வேண்டியது அரசியல் கட்சி மற்றும் மக்களின் கடமை.

நடிகர் விஜய்யின் தீர்மானம் தவறானது. தவெக ஆட்சி அமைத்தால் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எனத் தெரிவித்துள்ளது. மக்களிடையே இதற்கு எந்த வரவேற்பும் இருக்காது. அரசியல் கட்சிகள் மத்தியில் வரவேற்பை பெறலாம். கூட்டணியில் இருந்தால் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொடுக்க வேண்டும். பாஜக அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியிலும் பங்கு என்பதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

காலையில் பிராமணர்கள் போராட்டம்..! மாலையில் திராவிடர்கள் வருணாசிரம எதிர்ப்பு போராட்டம்..!

சென்னையில் ஒரே நாளில் பிராமணர்கள் மற்றும் திராவிடர் கழகத்தின் போராட்டம் நடத்தியதால் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் காலை முதலே பரபரப்பிறகு பஞ்சமில்லாமல் போனது.

பிராமணர்கள் சமூகம் மீதான அவதூறு பிரசாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க கோரியும் பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று காலை பிராமணர்கள் சமூகம் மற்றும் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பதிலடியாக அதே ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை திராவிடர் கழகத்தின் சார்பாக ‘திராவிடர் எழுச்சி- வருணாசிரம- மனு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திலும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

எடப்பாடி பழனிசாமி: திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பு இல்லை..!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அதிமுக மக்களுக்காக தொடங்கி, உழைக்கிற கட்சியாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளோம். அப்படி இருக்கும் போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிமுகவை எப்படி விமர்சிப்பார்? அவர் விமர்சிக்காதது மற்றவர்களின் ஆதங்கமாக உள்ளது. மேலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக கூட்டணி பலமாக இருப்பதாக சொல்வது நம்பத்தகுந்ததாக இல்லை. 3 ஆண்டு காலம் எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தாத திமுக கூட்டணி கட்சிகள், தற்போது ஒவ்வொரு போராட்டமாக அறிவித்து வருகிறார்கள். கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு திமுக கூட்டணி பலமாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. அதிமுகவில் எந்த ஒரு பிளவும் இல்லை. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி நீக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இனிமேல் இடம் கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கஸ்தூரி கேள்வி: 300 வருஷம் முன்னாடி வந்த தெலுங்கர்கள் தமிழர்கள் என சொல்லும்போது..! எப்பவோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை..!

300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என கஸ்தூரி கேள்வி எழுப்பினார்.

பிராமணர்கள் சமூகம் மீதான அவதூறு பிரசாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க கோரியும் பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று பிராமணர்கள் சமூகம் மற்றும் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிராமணர்களை பார்ப்பனர்கள் என்று இழிவுபடுத்தி பேசுதல், பூணூல் அறுத்தல் உள்ளிட்டவைகளைத் தடுக்க தலித்துகளுக்கு பாதுகாப்பு தரக் கூடிய பிசிஆர் சட்டம் போல ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று பிராமணர் சமூகத்தினர் மற்றும் பல்வேறு ஜாதி, மதத் தலைவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைத்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்ம், பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன், நடிகை கஸ்தூரி, பாஜக மதுவந்தி, வேலூர் இப்ராஹிம், காங்கிரஸ் அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெரியாமத்தான் கேட்கிறேன்.. 300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்? என கஸ்தூரி கேள்வி எழுப்பினார்.

பேசுப் பொருளாக மாறியுள்ள ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ ராமதாஸ் திடீர் பதிவு..!

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலை கால வகையினானே என பாமக நிறுவனர் ராமதாஸின் திடீர் பதிவு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மக்களவை தேர்தல் வரை அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, திடீரென்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பாமக அணிக்கு தாவியது. இதற்கு பாமகவில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அன்புமணியின் நிர்பந்தத்தால் இந்த கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதாக அப்போதே கூறப்பட்டது.

தொடர்ந்து பல எதிர்ப்புகளை மீறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக போட்டியிட்ட 10 இடங்களிலும் சவுமியா அன்புமணி போட்டியிட்ட தர்மபுரி தொகுதியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தனர். இந்த படுதோல்வி இன்னும் பாமகவினர் மனதில் நீங்காத நிலையில் மத்தியில் ஆட்சி அமைத்த பாஜக அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு பின் பாமகவை பாஜக கண்டு கொள்ளவில்லை என தெரிகின்றது.

இதனிடையே இரு தினங்களுக்கு முன் பாமக தலைவர் அன்புமணி எம்பிக்கு ரயில்வே வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் பதவியை மத்திய அரசு அளித்தது. மத்தியில் கேபினட் அமைச்சராக பதவி வகித்த அன்புமணிக்கு சாதாரண ஆலோசனை குழு உறுப்பினர் பதவி வழங்கி அவரை சிறுமைப்படுத்தி விட்டதாக பாமகவினர் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளன.

மேலும் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ஏதாவது பெரிய பொறுப்பு வரும் என்ற கனவில் இருந்த நிலையில் சாதாரண ஆலோசனை குழு உறுப்பினர் பதவி வழங்கியிருப்பது பெரும் ஏமாற்றத்தை ராமதாஸ்ஸூக்கு ஏற்படுத்தி இயிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலை கால வகையினானே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸின் இந்த திடீர் பதிவு பாஜக தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் வட மாவட்டத்தில் மட்டும் வாக்கு வங்கி வைத்துள்ள பாமகவுக்கு சவாலாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அண்மையில் தவெக மாநாடு அமைந்துள்ளது. மேலும் பாமகவின் கொள்கைகள் சிலவற்றை தவெக பின்பற்றுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று விஜய் பனையூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், ராமதாஸின் இந்த பதிவு பேசுப் பொருளாக மாறியுள்ளது.

கோவை சத்யன்: அடுத்தவர் சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் சீமானின் அரசியல் கட்டமைப்பு..!

தமிழக அரசியல் களத்தில் எந்த சாதனையும் செய்யாமல், மக்கள் நலத் திட்டங்களையும் செய்யாமல் மற்ற கட்சியினர் செய்த அனைத்து சாதனைகளையும் வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டி சுற்றக் கூடிய, வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கக் கூடிய யார் எனக் கேட்டீர்கள் எனில் சீமான் என அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு கோவை சத்யன் அளித்த பேட்டியில், எதை எடுத்தாலும் இதை நான் சொன்னேன்.. நான் சொன்னேன் என்கிறவர் சீமான். தமிழக அரசியல் களத்தில் எந்த சாதனையும் செய்யாமல், மக்கள் நலத் திட்டங்களையும் செய்யாமல் மற்ற கட்சியினர் செய்த அனைத்து சாதனைகளையும் வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டி சுற்றக் கூடிய, வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கக் கூடிய யார் எனக் கேட்டீர்கள் எனில் சீமான் என சுற்றுகிறவர்தான். இன்னும் சொல்லப் போனால் சீமானின் தாத்தாதான், லார்டு மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கே அறிவுரை சொல்லி இந்தியாவுக்கே சுதந்திரம் கொடுத்ததாகவும் அடுத்ததாக சொல்வார்.

7 தலைமுறைகளுக்கு முன்னர் இருந்த சீமானின் எள்ளு தாத்தாதான் வேலுநாச்சியாரின் அப்பாவுக்கு பெண் குழந்தை பிறந்த போது, வேலுநாச்சியார் என பெயர் வைத்தது என்று கூட சொல்வார். இந்த அளவுக்குக் கட்டுக் கதைகளும் போலி கற்பனைகளையும் வெட்கமே இல்லாமல் இந்த அளவுக்கு அடுத்தவர் சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் அவரது அரசியல் கட்டமைப்பு. இதுவரைக்கும் மக்கள் நலனுக்காக பேச்சாகவோ செயலாகவோ போராட்டமாகவோ அவர் அறிவித்த வரலாறு எதுவுமே இல்லை. ஊடகங்களில் அடுத்தவரை கேலி பேசுவதும் தரக்குறைவாக பேசுவதும் ஒரு பெரிய வீரர் போல மேடை நாடகத்தில் நடிப்பது போலவும் செய்வதை மட்டுமே கொள்கையாக வைத்திருப்பவர் சீமான்.

குறிப்பாக இளைஞர்களை தூண்டிவிடக் கூடியவர் சீமான். வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்பது உரிய குழுக்கள் அமைத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்த முன்னெடுப்பு. என்னென்ன தொழில்கள் இந்த பகுதியில் தொடங்க கூடாது என்பது வரை வரையறை செய்து, அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுத்து சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வேளாண் பாதுகாப்பு மண்டலம் கிடையாது. இது எடப்பாடி பழனிசாமியின் சிந்தனையில் உதித்த ஒன்று. இதற்கு கூட சீமான் வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டுகிறார். ஆமைக்கறி போன்ற கட்டுக்கதைகளின் தொடர்ச்சிதான் இது. நடிகர் விஜய் கட்சியை தொடங்கி இருப்பதற்கு யார் பயப்படுகிறார்களோ இல்லையோ சீமான் அரண்டு நடுங்கி பயந்து போய் இருக்கிறார். ஏனெனில் அவரிடம் கட்டமைப்பே இல்லை. அவரிடம் இருப்பது எல்லாம் மாவட்ட செயலாளர்கள் என்பவர்கள்தான். 13 ஆண்டுகளாக சீமானை நம்பி வீணாகப் போய்விட்டோம் என்று சொல்லி வெளியே வருகிறவர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

விஜய் மேடையிலேயே யார் வந்தாலும் அரவணைப்போம் எனவும் அறிவித்துவிட்டார். ஆகையால் முதலில் காலியாகப் போவது நாம் தமிழர் என்கிற கூடாரம்தான். நாம் தமிழரின் வாக்கு வங்கியில் பெரும்பான்மையான வாக்குகள் நடிகர் விஜய்க்குப் போகும். இதனால் பயந்து நடுங்கி தன்னை காப்பாற்ற வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க பயந்து கொண்டு மேடைக்கு மேடை உளறிக் கொண்டிருக்கிறார் சீமான் என கோவை சத்யன் கடுமையாக விமர்சித்துள்ளார்.