திருமணம் ஆகாமல் 7 மாத கர்ப்பிணியான இளம்பெண்ணை அடித்து கொன்று காதலன் சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசியுள்ள நிலையில் 8 நாட்களுக்கு பிறகு சடலம் மீட்கப்பட்டது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம், கோணசமுத்திரம், கருங்குள்ளன் பகுதியை சேர்ந்த பேராகவுண்டர். இவரது மகள் கோகிலா கடந்த ஆகஸ்ட் 20-ந் தேதி கோகிலா வயிற்று வலியால் அவதிப்பட்டதால், பெற்றோர் சமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் கோகிலா 7 மாத கர்ப்பிணி என தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் 21-ந் தேதி, சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரில் அடிப்படையில் காவல்துறையினர் கோகிலாவிடம் நடத்திய விசாரணையில், கோணசமுத்திரம் அருகே கன்னியாம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி அம்மாசி, தன்னை காதலித்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, பல முறை உல்லாசமாக இருந்ததால் கர்ப்பமானதாக தெரிவித்தார். அம்மாசியை அழைத்து விசாரித்ததில் அவர் கோகிலாவை திருமணம் செய்வதாக எழுதி கொடுத்து உள்ளார்.
இதையடுத்து இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த 26-ந் தேதி கோகிலா திடீரென காணாமல் போனதாக, அவரது பெற்றோரிடம் அம்மாசி கூறியுள்ளார். இது குறித்து புகாரின்படி கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று வெள்ளாளபுரம் கிராமம், பாச்சாலியூர் பகுதியில் குப்புசாமி என்பவரது விவசாய கிணற்றில் வெள்ளை நிற சாக்குப்பையில் கட்டப்பட்ட நிலையில் மூட்டை ஒன்று மிதந்தது.
தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சென்று சாக்குமூட்டையை வெளியே எடுத்து பார்த்தபோது அதில் கோகிலா, அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதையடுத்து அம்மாசியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் கோகிலாவை அடித்து கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.