ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த திமுக ஆட்சியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வந்த அவரை 2024-ஆம் ஆண்டு ஜீலை 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7.30 மணியளவில் அவரது வீட்டின் அருகில் டெலிவரி ஊழியர்கள் போல வந்த அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ வசம் திமுக அரசு ஒப்படைக்க சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில் என்பவரிடமிருந்து ரூ.40 லட்சம் பறித்ததாக பரங்கிமலை காவல் ஆய்வாளர் முகம்மது புஹாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரையும் யானைக்கவுனி காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் 3-ந் தேதி கைது செய்தனர்.
இவர்கள் இருவருக்கும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்கள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். எனவே ஜாமீன் வழங்க வேண்டும், எனக் கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி பி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் காவல் ஆய்வாளர் என்பதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது, என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இருவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.