சென்னையில் நீலாங்கரையில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த இருவரிடமும் செல்போனில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார். தஞ்சாவூரில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும், விவசாய கடனை முழுமையாக தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், இன்று ஆடிப்பெருக்கு விழா. வழக்கமாக இன்றைய தினம் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆட்சியில் சரியான நடவடிக்கை இல்லாததால் தண்ணீர் வரவில்லை. இதுமட்டுமில்லை குறுவை பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் நடைபெறுமா என விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள்.

ஆனால் முதல்வர் விஜய் இதைப்பற்றி கவலைப்படாமல் நிர்வாக திறனற்று இருக்கிறார். திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை நமது தலைவரே நேரடியாக திறந்து வைத்தார். ஆனால் இப்போது ஜூன், ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. தண்ணீர் மட்டும் வரவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி கூட ஜூன், ஜூலை மாதங்களில் 42 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரலை. அதைப் பற்றி விஜய் பேசாமல் மவுனமாக உள்ளார்.
அவரது எண்ணம் முழுக்க திமுக தலைவர்கள் மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்றே உள்ளது. அப்போது மேடையிலிருந்த தொண்டர்கள் சிலர் நடிகை த்ரிஷாவின் பெயரை சொல்லிக் கோஷமிட்ட நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த இரட்டை அர்த்த விளக்கம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உதயநிதிக்கு எதிராக தஞ்சை காவல் நிலையத்தில் தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கரந்தை மந்தாரடி தெருவை சேர்ந்த பைரவி என்பவர் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். முதல்வர் விஜய் குறித்தும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் உதயநிதி பேசியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணி தலைவர் பைரவி புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், BNS சட்டத்தின் பிரிவு 196- பொது அமைதியை கெடுத்தல், 192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம், 79 – பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்,352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல், 296(b) ஆபாசமாக பேசுதல், 351(2)- மிரட்டல், BNS 61- குற்றவியல் சதி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று காலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் கிழக்கு காவல்துறையினர் கைது செய்தனர். வீட்டுக்குள் காவல்துறையினர் சென்ற நிலையில் அவரது கைதுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள், திமுக வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பையும் தாண்டி அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது நடவடிக்கைக்கு பிறகு காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளை நிற டெம்போ வாகனத்தில் ஏற்றி சாலை மார்க்கமாக தஞ்சாவூர் அழைத்து சென்றனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் இருந்த வாகனத்தை திமுகவினர் தடுத்து நிறுத்தினர். வாகனத்தின் முன்பு படுத்தும் தடையை ஏற்படுத்தியது. இதனால் காவல்துறையினர் அவர்களை குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தி உதயநிதியை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

ஆனாலும் காவல்துறை வாகனத்தின் முன்பும், பின்பும் திமுகவினர் பேரணி போல் சென்றனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விஜய்க்கு எதிராகவும் கோஷமிட்டனர். இந்த சமயத்தில் திமுக தொண்டர் ஒருவர் முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட துடித்தார். அவரை திமுகவினர் அங்கிருந்து அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அந்த நபர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், சோழிங்கநல்லூர் முன்னாள் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷின் செல்போனுக்கு அழைத்து பாதிக்கப்பட்டவர்கள் குறித்து நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு நல்லதொரு சிகிச்சையை கொடுக்க சொல்லுங்கள் என்றும் தெரிவித்தார்.