சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், ஏற்கனவே விவாகரத்து பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவும் காதலித்து ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால் ரங்கராஜோ தனது முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறவில்லை. ஜாய் கிரிஸில்டா திருமணம் செய்த சில மாதங்களிலேயே அவரை மாதம்பட்டி ரங்கராஜ் பிரிய நினைத்தபோதுதான் இவ்விவகாரத்தை பொதுவெளிக்கு வந்தது.
மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிஸில்டா விவகாரம் கோலிவுட்டில் அதிகம் விவாதத்தை ஏற்படுத்திய விஷயம். ஆரம்பத்திலிருந்தே பெரும்பாலானோர் ஜாய் கிரிஸில்டாவுக்குதான் இவ்விஷயத்தில் சப்போர்ட்டாக இருந்தார்கள். அதேசமயம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு அவரது முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் முழு ஆதரவை கொடுத்தார். மகளிர் ஆணையத்தில் நடந்த விசாரணையின்போது அவருடன் ஸ்ருதியும் வந்திருந்தது.
இப்படிப்பட்ட பெண்கள் இருப்பதால்தான் மாதம்பட்டி ரங்கராஜ் மாதிரியான ஆண்கள் தைரியமாக தவறு செய்கிறார்கள் என்று அவரையும் வறுத்தெடுத்தார்கள். இருப்பினும் அதையெல்லாம் ஸ்ருதி கண்டுகொள்ளவில்லை. இறுதிவரை அவருக்கு சப்போர்ட்டாக இருப்பேன் என்றும் உறுதி கொடுத்தார்.
அந்த விசாரணையின்போது டி.என்.ஏ டெஸ்ட்டில் இந்தக் குழந்தை என்னுடையதுதான் என்பதை நிரூபித்தால் காலம் முழுவதும் இந்தப் பிள்ளையை பார்த்துக்கொள்ள தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் கூறிவிட்டு வந்தார். அப்படி சொன்னதோடு மட்டும் சரி; அதற்கு பிறகு பல மாதங்கள் அவர் அந்த டெஸ்ட்டுக்கு செல்லவில்லை. ஜாய் கிரிஸில்டாவும் கோபமாக பேசி பார்த்தார். கிண்டலாக பல பதிவுகளை இன்ஸ்டாகிராமில் போட்டார். ம்ம்ஹூம் குளத்தில் போட்ட கல் மாதிரி மாதம்பட்டி ரங்கராஜ் அப்படியே இருந்தார்.
ஒருவழியாக அந்த டி.என்.ஏ டெஸ்ட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் கலந்துகொண்டார். அதில், பிறந்திருக்கும் குழந்தை அவருடையதுதான் என்பது நிரூபனமானது. இதனால் ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ்தான் என்பதும் முடிவாக ஜாய் கிரிஸில்டா நிம்மதியடைந்தார். இத்தனை மாத போராட்டத்துக்கு நீதி கிடைத்துவிட்டதாக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மகனோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அனைவருக்கும் வணக்கம். எனது மகன் ராகவுக்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழு பொறுப்புடனும் அன்புடனும் செய்துவருகிறேன். இனி, எனது வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்துக்காக முழு பொற்ப்புடனும், அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்” என அறிக்கை தெரிவித்துள்ளார்.