முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது முதல்வர் என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. மூன்றாவது நாளாக இன்று பதிலுரை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து ஒரு குட்டி கதை சொல்கிறேன் எனச் சொல்லி, “ஊரில் ஒரு பெரியவர், வெயில் அதிகமாக இருந்ததால், கண்ணுக்கு மேல் கையை வைத்துக்கொண்டு சுற்றி தேடிக்கொண்டிருந்தாராம்.
அப்போது கூட இருந்த சின்ன பையன், என்ன தேடுறீங்க என கேட்டபோது, அந்தப் பெரியவர், இல்லை தம்பி உங்க அப்பா இங்கத்தான் இருப்பாருனு சொன்னாங்க; அதான் தேடுறேன். எங்க உங்க அப்பாவையே காணோம்” என்றாராம் எனத் தெரிவித்து, எங்களுக்கு நெக்கலும், நயாண்டியாக பேச தெரியும்” என ஜோசப் விஜய் பேசினார்.
இது குறித்து தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது முதல்வர் என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதல்வர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென முதல்வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்’ என தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.