கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார் கோவில் கம்மாள தெருவை சேர்ந்த அன்பழகன். இவரது மனைவி அட்சயா. இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை, 3 வயதில் பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த நான்கு மாதங்கள் முன்பு அன்பழகன், மலேசியாவுக்கு வேலைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் திருப்புரம்பியம் பகுதியை சேர்ந்த யோகராஜ் என்பவர் சாய் பவுண்டேஷன் என்ற பெயரில் சுய உதவிக் குழு நடத்தி வருகிறார். இதில் கடந்த இரண்டு மாதங்களாக கலெக்சன் ஏஜெண்டாக அக்ஷயா வேலை செய்து வருகிறார். இதனால் யோகராஜ், அக்ஷயா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்படி வரும் போது 3 வயது குழந்தை பெண் குழந்தையை தூக்கி கொஞ்சி உள்ளார்.

மேலும் குழந்தையின் உடல் முழுவதும் பல இடங்களில் கடித்த தழும்பு உள்ளது. இது குறித்து தெருவாசிகள் அட்சயாவிடம் கேட்டதற்கு, அவர் எந்தவித பதிலும் கூறாமல் கண்டுக் கொள்ளாமல் இருந்தாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தெருவை சேர்ந்த மக்கள், குழந்தையை தூக்கிக் கொண்டு நாச்சியார்கோவில் காவல் நிலையத்திற்கு சென்றனர்.
இது குறித்து ஆடுதுறையில் உள்ள திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி விசாரணை செய்ததில் யோகராஜ் குழந்தை இடம் அநாகரிகமாக நடந்து கொண்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் யோகராஜை கைது செய்தனர். மேலும் பெண் குழந்தையிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதை தட்டிக் கேட்காமல் இருந்த தாயையும் அவரும் கைது செய்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.