இந்தியாவில் போலியோ அதாவது இளம்பிள்ளை வாதம் ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்த நிலையில் போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், தற்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகள் என முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும் முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடுபட்ட குழந்தைகளுக்கு முகாம் முடிந்த பிறகு 29, 30-ம் தேதிகளில் தற்காலிக மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் 5 வயதுக்கு உட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொருக்கை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமிற்கு வந்த குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட்களை வழங்கிய தவெக நிர்வாகி வையன்னா செந்தில் வழங்கினார்.