திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த புதூர், படவேட்டு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி ருக்மணி. இவர் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஏரி தூர்வாரும் பணியில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் கூலியை மட்டுமே நம்பி தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தனது 100 நாள் வேலைக்கான கூலிப் பணத்தை எடுப்பதற்காக, ருக்மணி திம்ராயன்பேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது கணக்கைச் சரிபார்த்த வங்கிப் பணியாளர்கள், அவரது கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாகக் கூறி அதிர்ச்சியளித்தனர்.
இதனால் திடுக்கிட்ட மூதாட்டி ருக்மணி, இதற்கான காரணத்தை அதிகாரிகளிடம் கேட்டார். அப்போது, மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவிலிருந்து அவரது கணக்கை முடக்க உத்தரவு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது பெயரில் ஆர்.எம். டிரேடர்ஸ் என்ற வணிகக் கணக்கு ஒன்றின் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஜிஎஸ்டி வரியாக ரூ.2.79 கோடியை உடனடியாக அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினசரி சில நூறு ரூபாய் கூலிக்காக ஏரி வேலைக்குச் செல்லும் தனக்கு, கோடி கணக்கில் நோட்டீஸ் வந்ததைக் கண்டு மூதாட்டி ருக்மணி நிலைகுலைந்து போனார். வங்கி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையின்படி, 100 நாள் வேலைத் திட்டத்திற்காக மூதாட்டி ருக்மணி கொடுத்த ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு போன்ற ஆவணங்களை பயன்படுத்தி, மர்ம நபர்கள் யாரோ போலி நிறுவனம் தொடங்கி பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.