தமிழக சட்டமன்றத்தில் இரு தரப்பினருக்கும் இடையே பாலியல் வன்கொடுமை விவாதத்தின் போது தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே நேற்று கடுமையான மோதல், வாக்குவாதம் நடந்துள்ளதாக தெரிகிறது. தமிழக சட்டமன்றத்தில் நேற்று தினம் மேகதாது அணைக்கு எதிராக அரசினர் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிய, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இப்படி, சபை ரொம்ப அமைதியாகவும் சுமுகமாகவும் போய்க்கொண்டு இருந்தபோதுதான், கவர்னர் உரையில் எம்ஜிஆரை விட, அண்ணாவை விட பெரிய அளவில் விஜய் வெற்றி பெற்றார் என்று கூறப்பட்டிருந்தது. அதனைச் சுட்டிக்காட்டிய ஆஸ்டின், ‘விஜய் எம்ஜிஆர் மாதிரி எல்லாம் வெற்றி பெறவில்லை, அவர் வேறு வழியில்தான் வெற்றி பெற்றார். இந்த ஆட்சியில் பாலியல் வன்முறைகள் அதிகமாக நடக்கின்றன என்று அரசின் குறையைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
அப்போது ஆதவ் ஆதவ் அர்ஜூனா, ‘ஏன், திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் நடக்கவில்லையா? விளாத்திகுளத்தில் ஒரு குழந்தையை வன்கொடுமை செய்து கொலை செய்யவில்லையா?’ என்று கேள்வி எழுப்பியது மட்டுமின்றி “கொளத்தூரில் எங்கள் தலைவர் 5 நிமிடம் பேசியதற்கே என்ன நடந்தது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியுற்றதை மறைமுகமாக தட்டிவிட, அவ்வளவுதான், திமுகவினர் அனலாகக் கொதிக்கத் தொடங்கிவிட்டனர்.
உடனே விளாத்திகுளம் எம்எல்ஏ எழுந்து, “அன்று இருந்த திமுக அரசு 24 மணி நேரத்திற்குள் வழக்கு பதிவு செய்து, அதில் எல்லாவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்தது” என்றார். அப்போது, திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான சிவசங்கர் வேகமாய் எழுந்து, நாம் இப்போது விவாதிப்பது விளாத்திக்குளம் விவகாரம், இதில் எதற்கு கொளத்தூர் பற்றி இழுக்கிறீர்கள் எனப் பாய்ந்தார். தன் தலைவரைப் பேசியதால் திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கத்த, இதைப் பார்த்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அப்படியே சீறிப்பாய்ந்து எழுந்து நின்று திமுகவினரை நோக்கி கன்னாபின்னாவென சத்தம் போட தொடங்கினார்கள்.
அப்பொழுது, ராயபுரம் எம்எல்ஏ பின்வரிசையில் இருந்து தனது சட்டையை மடித்துக்கொண்டு, இரண்டு வரிசைகளைத் தாண்டி திமுக உறுப்பினர்களை அடிப்பதற்காக ஓடிவந்தார். அதேபோல ரெட்டியார்பட்டி நாராயணன் என்ற எம்எல்ஏ-வும் அடிப்பதற்காக ஓடிவந்தார். திமுக தரப்பிலிருந்தும் கடுமையான சத்தங்கள் எழுப்பப்பட்டன. முதலமைச்சர் விஜய்யும், ஆட்டோ டிரைவராக இருந்து எம்எல்ஏ ஆன ராயபுரம் உறுப்பினர் அடிக்கப் பாய்ந்து ஓடிவந்தபோது அவரைத் தடுக்காமல் அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
இதற்கு பிறகே சபாநாயகர் தலையிட்டு, முதலில் திமுகவினரையும், அதன்பின் தவெகவினரையும் சமாதானப்படுத்தி, பெரிய அளவிலான மோதலைத் தடுத்து நிறுத்தினார். அந்த பதற்றம் ஏற்படும் போதே, சட்டமன்றத்தை அதுவரை நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்த தொலைக்காட்சித் தொகுப்பை உடனடியாக துண்டித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.