தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள கடமலைகுண்டு–மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வண்டியூர் உள்பட 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராம மக்கள் இலவம் பஞ்சு, முந்திரி மற்றும் காய்கறிகள் பயிரிடுவது என விவசாயதையே இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக கொண்டு மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்திய விலங்கியல் ஆய்வு மையம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மேகமலை வனவிலங்கியல் சரணாலயத்தில் நடத்திய ஆய்வின் போது 9 புதிய விலங்கினங்களைக் கண்டறிந்தது. இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் 2021-ல் அறிவிக்கபட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் தமிழ்நாட்டின் 5-வது மற்றும் இந்தியாவில் 51-வது புலிகள் காப்பகமாகும். இந்தப் புலிகள் காப்பகம் விருதுநகர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் பரவியுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயம் மற்றும் மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள 1,01,657.13 ஹெக்டேர் நிலம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேனி மாவட்டத்திலுள்ள கண்டமனூா், வருசநாடு, மயிலாடும்பாறை, மேகமலை, சின்னமனூா், ஆகிய வனசரகங்களுக்கு உட்பட்ட சுமாா் 5,000 ஹெக்டேர் பரப்பளவு மலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், வனத்துறையின் அனுமதியின்றி அங்கு சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் செயல்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.
உச்சநீதிமன்றம் கடந்த மே 29-ந் தேதி வெளியிட்ட உத்தரவில், “அகத்தியமலை நிலப்பரப்பு புலிகள், யானைகள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்கள் வாழும் மிக முக்கியமான பல்லுயிர் மையமாகும். ஆனால், இங்குள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத மேய்ச்சல் மற்றும் கஞ்சா சாகுபடி போன்ற அச்சுறுத்தல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், காடுகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதும், அவர்களை வெளியேற்றுவதும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். மனிதாபிமானக் காரணங்களைக் காட்டி ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளைக் காலவரையின்றி தாமதப்படுத்தக் கூடாது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான தெளிவான, காலக்கெடுவுடன் கூடிய திட்டத்தை ஒரு மாதத்திற்குள் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் அரசு சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் புலிகள் காப்பகத்தைக் காரணம் காட்டி அங்கிருக்கும் மக்களை வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. மேலும் மக்களை வெளியேற்றுவதற்காக துணை ராணுவ படையை நிலை நிறுத்தலாம் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து இந்தப் பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து, வனத்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு மலைக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த மக்களுக்கு ஆதரவாக ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு, பிள்ளையார் கோவில் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள், வணிகர் சங்கத்தினர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் முறுக்கோடை ராமர் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.