விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், வானூர், செஞ்சி உள்ளிட்ட 20 பேர் கொண்ட நீதிமன்றங்களில் தவெக அரசு வழக்கறிஞர்கள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது அடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் வழக்கறிஞர் ஞானசவுந்தரியை நேற்றைய தினம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், “பட்டியலின நடுத்தர வகுப்பைச் சேர்ந்த நான், தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் அறிவுறுத்தலின் பேரில் மகளிர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பணிக்கும், மாவட்ட முதன்மை மற்றும் சார்பு நீதிமன்றங்களில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கும் விண்ணப்பித்திருந்தேன்.
தமிழக அரசு கடந்த ஜூன் 5-ந் வெளியிட்ட அறிவிப்பில், வழக்கறிஞர்கள் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 29 மாலை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்றைய தினம் மாலையே நியமனப்பட்டியல் என்று ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் பரவியது. இதுகுறித்து மாவட்ட செயலாளரிடம் நான் விசாரித்த போது, இதுதான் இறுதிப் பட்டியல் என்று அவர் கூறினார். ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளனர். பிற கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்களை, லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களாக நியமித்துள்ளனர்.
தனது ஆட்சியில் லஞ்சம், ஊழல், விதிமீறல் ஆகியவற்றை அனுமதிக்க மாட்டேன் என்று கட்சி தலைவர் விஜய் கூறிவரும் நிலையில், அமைச்சரும் பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளர், சட்டத்துறை செயலாளர் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் ஆனந்த் பரிந்துரையிலேயே வழக்கறிஞர் நியமனம் செய்யப்படுகிறது. எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் விஜய்க்கு இருக்கிறது.
எனவே என்னை விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வழக்கறிஞராக நியமிக்கவும், அதுவரை அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கும், அது தொடர்பான அறிவிப்பாணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 20 பேர் கொண்ட விழுப்புரம், திண்டிவனம், வானூர், செஞ்சி உள்ளிட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் பட்டியல் வெளியானது. இதில் ஞானசவுந்தரியின் பெயர் இடம் பெறவில்லை. அதோடு நேற்றைய தினம் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், இணையவழி முறையின் மூலம் உறுப்பினராக இணைந்துள்ள ஞானசவுந்தரி எதிரிகளுடன் சேர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியும், கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்து பல நாட்களாகியும் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் அரசு வழக்கறிஞர் பட்டியல் வெளியான மறுநாளே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.